இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழுகூட்டம் 10.02.2024 அன்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக்கோடு செயல்பட்டு வருகிறது. வறுமை, வேலையின்மை, விலை உயர்வு, அநியாய ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை அடைந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடூரமான தாக்குதலை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, கல்வி-சுகாதாரம் தனியாருக்கு தாரை வார்ப்பு, விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் – உழைப்பாளிகளுக்கு மானியங்கள் வெட்டு, மனுவாத கருத்தியலை பரப்பி சிறுபான்மை மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், பெண்கள் – குழந்தைகள் மீது வன்முறைகள், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல்கள், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவைகளையெல்லாம் காலில் போட்டு மிதித்து எதேச்சதிகார தாக்குதலை தொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் இந்தி திணிப்பு, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுப்பு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை துவக்க மறுப்பு, மிக்ஜம் புயல் மற்றும் கனமழை வெள்ளம், தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காதது, இரண்டாம் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு அனுமதி தர மறுப்பது, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை ஏவி விடுவது, ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்குவது, மக்கள் நல சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஒப்புதல் தர மறுப்பது என்று வஞ்சகப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முற்றாக முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை வேண்டுகிறது.
பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரித்தது. தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வு, மொழி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைப்பதை எதிர்க்காத கட்சி தான் அதிமுக.
எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்தும் போராட்டத்தினை பலவீனப்படுத்திடவும், பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து மறைமுக சேவையாற்றும் அதிமுக போன்ற கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்களை வேண்டுகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்