இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் எம். செல்வராசு அவர்களின் பெற்றோர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் தோழர் எம்.செல்வராசு அவர்களும் தனது இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். தனது இளம் வயதிலேயே மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் உள்ளிட்டு பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் கூடிய பணியினை செய்தவர். இக்காலத்தில் ஏழை, எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பல்வேறு பிரச்சனைகளுக்காக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. அதில் தோழர் எம்.செல்வராசு அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், தோழர்களுடனும் இணக்கமாகவும், தோழமைப் பூர்வமாகவும் பழகக் கூடியவர். நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று அத்தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்