செய்தி அறிக்கை

நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு! தொழிலாளர்கள் எந்த பயனையும் அடைய முடியாத நிலை! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண – சிபிஐ (எம்) கடிதம்!!

சிபிஐ (எம்) கடிதம்!!

கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்துள்ளதால் நலவாரிய பயன்களை பெற முடியாமல் அவதிப்படும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (21.05.2024) முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.


இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுகிறோம்.

-வெ. ராஜசேகரன், அலுவலக செயலாளர்

21.05.2024

பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை -  600 009

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்டெடுக்கவும் – தொழிலாளர்களுக்கு உரிய பண பயன்களை கால தாமதமில்லாமல் வழங்கிடவும் – உரிய நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக:

தமிழ்நாடு அரசின், தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் கட்டுமானம் உள்ளிட்ட உடல் உழைப்பு மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 41 மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு நலப் பயன்களை அரசு வழங்கி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் முந்தைய அதிமுக அரசு யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஆன்லைன் மூலம் அனைத்து பணிகளையும் செய்வது என முடிவு செய்தது. கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த முடிவை அமலாக்கியது. இதனால், கல்வி மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் 40 லட்சம் பேர் புதுப்பிக்க முடியாமல் எந்த பயன்களையும் பெறமுடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக மாநிலம் முழுவதும் நல வாரியங்களில் ஆன்லைன் மூலம் 74 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களின் தரவுகளும், ஆவணங்களும் அழிந்துவிட்டதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திட வேண்டுமெனவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் மீண்டும் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது என்பது எளிதான காரியமில்லை. குறிப்பாக கல்வி அறிவு பெறாத தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளர் நலத்துறையின் ஆன்லைன் பதிவு மட்டும் அழிந்து விட்டது என கூறுவது ஏற்புடையதல்ல.

சமூகத்தில் அடித்தட்டு உழைப்பாளிகளாக உள்ள நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்கள் நடைமுறையில் எந்த பலனையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. தாங்கள் தலையிட்டு அவல நிலையில் உள்ள நலவாரிய தொழிலாளர்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  1. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் தரவுகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசும், தொழிலாளர் நலத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாதபட்சத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் மூலம் நேரிடையாக விண்ணப்பம் வழங்கி பதிவேற்றம் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  2. ஆன்லைன் பிரச்சனை காரணமாக கல்வி உதவி, புதுப்பித்தல், ஆயுள் சான்று ஆகியவை பதிவு செய்ய இயலாமல் உள்ள தொழிலாளர்களுக்கு ஆறுமாதம் கூடுதலாக பதிவு செய்வதற்கான காலத்தை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
  3. 60 வயது பூர்த்தி அடைந்து விண்ணப்பித்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் காலதாமதமில்லாமல் பென்சன் வழங்கிட வேண்டும். கட்டுமான வாரிய கூட்ட முடிவுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் ரூ. 2000/-மாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
  4. 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்கிட ஏற்பாடுகள் செய்திட வேண்டும். அதேபோல, திருமண உதவி தொகை, வீடு கட்டும் திட்டம், இயற்கை மரண ஈமச்சடங்கு உதவி நிதி, பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
  5. கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு உள்ளிட்டு 20 தொழிலாளர் நல வாரியங்களில் பாகுபாடு இல்லாமல் ஒரே விதமான பண பயன்களை தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். மேலும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் சுமூகத் தீர்வு காண்பதற்கு முத்தரப்புக்குழு அமைக்காத வாரியங்களில் உடனடியாக அமைத்திட வேண்டும்.

நன்றி.

இப்படிக்கு
தங்களன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்