செய்தி அறிக்கைமாநில செயற்குழு

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்! ஜனநாயக சக்திகளுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு சிபிஐ(எம்) இரங்கல்!

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா

இலங்கையின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் தனது 91வது வயதில் காலமான செய்தி வேதனை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய இரா.சம்பந்தன் அவர்கள் இலங்கையின் அரசியல் களத்தில் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து இயங்கியவர். இலங்கையின் அனைத்து தரப்பு மக்களின் மரியாதையை பெற்றவராக இருந்தார். 1977 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் இயங்கியுள்ளார்.

இந்தியாவுடனும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுடனும் சிறந்த நட்புறவு கொண்டிருந்தார். கடந்த காலத்தில் இலங்கை தமிழர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானபோது அதையொட்டி முக்கிய தருணங்களில் அவர் தனியாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடனும் சிபிஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திற்கு நேரில் வந்து பேசும் போது ஏராளமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் சமமான உரிமை வேண்டும் என்றும், 13 வது சட்ட திருத்தத்தை அமலாக்குவதற்கும், 2009 இறுதிக்கட்ட போருக்கு பின்னர் தமிழர் வாழும் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமும் சம உரிமையும் வேண்டுமெனவும் தொடர்ந்து வாதாடியும், போராடியும் வந்தார்.

இலங்கையில் ஜனநாயகத்திற்காகவும், தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து உழைத்த இரா.சம்பந்தன் அவர்களின் மறைவு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தார், கட்சியினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்