செய்தி அறிக்கை

மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்து வதை எதிர்த்தும், ஜூலை 12 முதல் 15ந் தேதி வரை தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டன இயக்கம்!

ஜூலை 12 முதல் 15ந் தேதி வரை தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டன இயக்கம் Copy

மோடி அரசு கடந்த ஆட்சிக் காலத்தின் போது நாடாளுமன்றத்தில் 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும், 140 கோடி பொதுமக்களுக்கும் விரோதமாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது.  இச்சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சி இயக்கங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வலுவான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இதனை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 1ந் தேதி முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி அரசின் எதேச்சதிகார பாசிச பாணி நடவடிக்கைகளை கண்டித்தும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காகவும்  நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கவும், நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து விரிவான ஜனநாயகப் பூர்வமான விவாதம் நடத்திட வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2024 ஜூலை 12ந் தேதி முதல் 15ந் தேதி வரை நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், பேரூர், சிற்றூர் என அனைத்து இடங்களிலும் கண்டன இயக்கங்கள் நடைபெறவுள்ளன. இந்த இயக்கத்தில் மாநில, மாவட்ட, உள்ளூர் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மோடி அரசின் மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இப்போராட்டத்திற்கு ஜனநாயக இயக்கங்களும்,  வழக்குரைஞர்களும், பொதுமக்களும் பேராதரவு அளித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்