செய்தி அறிக்கைமாநில செயற்குழு

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோதும் டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க மறுப்பதா?

சாகுபடிக்கு தண்ணீர் திறக்க மறுப்பதா

கர்நாடகத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமான தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கடலில் சென்று கலந்து வரும் சூழ்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லையென விவசாயிகள் ஏங்கி வருகின்றனர். ஏற்கனவே, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த நிலையில், காவிரி பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்காமல் கடலில் கலப்பது கண்டு விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான வெண்ணாறு, வெட்டாறு, பாமினியாறு, கோரையாறு உள்ளிட்ட பிரதான ஆறுகளிலும் ‘ஏ’ மற்றும் ‘பி’ வாய்க்கால்களிலும் துhர்வாரும் பணி நடந்து வருவதால் நீர்வளஆதாரத்துறை அதிகாரிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் மொத்த நீரையும் கடலுக்கு திறந்துவிட்டுள்ளனர். வழக்கப்படி ஜூன் மாதம் 12ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜுன் மாத இறுதிக்குள் குறுவைக்கு டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதற்கு முன்னரே நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் துhர்வாரும் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை துhர்வாரும் பணியை நடத்தி அதிமான அளவு தண்ணீர் திறந்துவிட்டபோதும் கூட பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையினை நீர்வளஆதாரத்துறை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

எனவே, தாமதமின்றி உடனடியாக டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாசன ஆறுகளிலும் தண்ணீர் திறந்துவிட்டு சம்பா சாகுபடி பணிகளை துவக்குவதற்கு விவசாயிகளுக்கு உதவிட முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்