செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

பாலின சமத்துவ இயக்கம் சட்ட மீறலா? சமூகக் குற்றமா? சென்னை பெருநகர காவல்துறையின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்

Kavalthurai

குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, பாகுபாடு மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்ட குழு சார்பில் “இரவும் எமக்கானதே” என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி நவம்பர் 16 அன்று இரவு 10 மணிக்கு தந்தை பெரியார் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை “பாலின சமத்துவ நடை” நிகழ்வு இரண்டாவது ஆண்டாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கான அனுமதியை காவல்துறை நிகழ்வு நடைபெறும் நாளன்று மறுத்துவிட்டது.

பாலின பாகுபாடுகள் மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட வேண்டியதன் அவசியத்தை அரசியல் அமைப்பு சாசனமும் நீதிமன்ற தீர்ப்புகளும் வழிகாட்டியுள்ள பின்னணியில், பாலின சமத்துவ நடைக்கு காவல்துறை அனுமதி மறுத்தது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. காவல்துறை ஒதுக்கி கொடுத்த இடத்தில் உறுதிமொழி ஏற்பு மட்டும் நடத்தப்பட்டது. ஆனால், சென்னை பெருநகர காவல்துறை இந்த நிகழ்வுக்காக இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் 300 நபர்கள் மீது ஒரு வழக்கு, கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி செல்வா மற்றும் 40 பேர் மீது ஒரு வழக்கு என ஒரே நிகழ்வுக்கு இரண்டு வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.

சென்னை மாநகரில் “ஹேப்பி சண்டே” என்ற பெயரில் பல மணி நேரம் பிரதான சாலைகளில் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, போக்குவரத்து குறைவான இரவு 10 மணிக்கு நடைபெறவிருந்த பாலின சமத்துவ நடைக்கு அனுமதி மறுத்ததோடு, காவல்துறை சொன்ன இடத்தில் நடத்திய உறுதி ஏற்பு நிகழ்வுக்கும் வழக்கு பதிவு செய்வது அராஜகமான நடவடிக்கையாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பாலின சமத்துவ கருத்துக்களை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்புணர்வு அனைவருக்கும் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. அத்தகைய நோக்கத்தோடு பாலின பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தியலை வளர்த்தெடுப்பதில் இடையறாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பாலின பாகுபாடுகளை, ஒடுக்குமுறைகளை எதிர்த்து நடைபெறும் நிகழ்வுகளுக்கு உரிய அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  பாலின சமத்துவ நடை, உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்காக பதியப்பட்டுள்ள வழக்குகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்