மாநில செயற்குழு

பல்லாயிரம் கோடி லஞ்சம் -ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக! ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Adathii Fack

மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு எதிரான கைது வாரண்டையும் பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறி, முதலீட்டாளர்களை ஏமாற்றி  ரூ. 6,300 கோடி  அளவிற்கு மோசடி செய்ததோடு இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் அதானி நிறுவனம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக ஆதாரங்களோடு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு பெறுவதற்காகவும், அதன் மூலமாக கிடைக்கவுள்ளள ரூ.16,800 கோடி  லாபத்திற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது,  சட்டங்களை மீறி முறைகேடாக மூலதனத்தை திரட்டியது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட பலர் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமத்தால் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளன. மோடி அரசின் நிர்ப்பந்தத்தினால் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் ரூ.12,000 கோடியை இழக்க நேரிட்டுள்ளது. இதேபோல், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா உள்பட பல வங்கிகளும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதானி மீதான இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அதானி நிறுவனத்துடனான தனது வர்த்தக ஒப்பந்தங்களை திரும்பப் பெற்றுள்ளன.

ஏற்கனவே SEBI விதிகளை ஏமாற்றியது, ஏராளமான நிழல் நிறுவன முதலீடுகள் மூலம் பங்குச்சந்தையில் தனது மதிப்பை செயற்கையாக அதிகரித்துக் கொண்டது, மாநில மின்வாரியங்களுக்கு தரமற்ற நிலக்கரியை வழங்கி அரசுக்கு பல்லாயிரம் கோடி நட்டத்தை உருவாக்கியது என பல்வேறு சட்ட விரோத முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதானி, தற்போது மீண்டும் பெரும் ஊழல் – லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல அவர் தப்பிவிடாமல் சட்ட ரீதியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும், அதானி நிறுவன ஊழலுக்கு துணை நின்ற அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் கைது செய்திடவும், இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வெளிப்படையான புலன் விசாரணை மேற்கொள்வதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பான முழு விசாரணைக்கு  உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டுமெனவும், கூடுதலான கட்டணத்தில் அதானி நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  வலுவான கண்டன இயக்கங்களை முன்னெடுக்க கட்சி அணிகளையும், ஜனநாயக சக்திகளையும், அனைத்து தரப்பு மக்களையும் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்

Leave a Reply