அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துக்கள் அம்பேத்கர் மீதும், அரசியல் சாசன சட்டத்தின் மீதும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவிற்கு இருக்கும் ஆழமான வெறுப்புணர்வின் வெளிப்பாடே ஆகும். தேர்தல் நோக்கங்களுக்காக அம்பேத்கர் பெயரை அவர்கள் உச்சரித்தாலும் அந்தப் பெயர் அவர்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்துகிறது என்பது தான் அமித்ஷா வழியாக வெளிப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டத்தின் 75வது ஆண்டு குறித்து விவாதத்தின் போது அமித்ஷா குறிப்பிட்டது தற்செயலானது அல்ல பாஜகவின் மனுவாத கண்ணோட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
அரசமைப்புச் சட்டமா? மனு தர்மமா? என்றால் மனு தர்மத்தின் பக்கமே நிற்கும் ஆர்.எஸ்.எஸ். தனது சேவகர் மூலமாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதை செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கிற அமித்ஷா அரசியல் முதிர்ச்சியின்றி தன்னை ஆர்.எஸ்.எஸ்.ன் அடிமட்ட தொண்டன் என்று நிரூபிக்கும் விதமாக அவரது உரை இருந்துள்ளது. எனவே, அமித்ஷா உள்துறை அமைச்சராக நீடிப்பதற்கு எள்முனை அளவும் தகுதி அற்றவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
டாக்டர் அம்பேத்கரை அவதூறாகவும், அவமரியாதையாகவும் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலகக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு கண்டனக் குரலெப்பிட வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்