ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு.
பூரண சுதந்திரம் என்ற கோரிக்கை முழக்கத்தை நாட்டில் முதன்முதலாக 1921லேயே எழுப்பியது கம்யூனிஸ்ட் இயக்கமே. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, சாதி ஒடுக்குமுறை ஒழிப்பு, பள்ளிகளில் இலவசக் கல்வி, தாய்மொழிவழிக் கல்வி, மதம் அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும் போன்ற முழக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சி 1931ம் ஆண்டிலேயே முன்வைத்தது. இந்த முழக்கத்தின் அடிப்படையில் தான் புன்னப்புரா வயலார், தெலுங்கானா, கீழத்தஞ்சை, தெபாகா (வங்கம்), வொர்லி (மராட்டியம்), திரிபுரா பழங்குடியினர் போராட்டம் என நாட்டின் பல பகுதிகளில் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் எழுச்சிமிக்க மக்கள் போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
மொழிவழி மாநிலங்கள்…
1940களிலேயே மொழி வழி மாநிலம் அமைத்து தேசிய இனங்களின் பண்பாடு உள்ளிட்ட வளர்ச்சிக்காக குரலெழுப்பியது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஐக்கிய கேரளம், விசால ஆந்திரா, சம்யுக்த மகராஷ்டிரா, மகா குஜராத், தமிழ்நாடு என்ற முறையில் மொழிவழி மாநிலங்களுக்கான இயக்கங்களை நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இந்த போராட்டங்களின் நிர்ப்பந்தத்தால் மாநில மறுசீரமைப்புக்கான ஆணையத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தியது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழகத் தொழில் வளர்ச்சியில்…
கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்கள் 1953ம் ஆண்டு சோவியத் யூனியன் சென்றிருந்த போது, சோவியத் நாட்டின் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து இந்தியாவில் தொழில்வளர்ச்சிக்கு தேவையான உருக்கு, மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு உதவி செய்திட வலியுறுத்தியிருந்தார். இந்தியாவில் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களை துவங்கிட அமெரிக்கா மறுத்துவிட்ட நிலையில் சோவியத் யூனியன் உதவி செய்தது. அந்த உதவியின் மூலமே பிலாய், ரூர்கேலா போன்ற உருக்காலைகள் நிர்மாணிக்கப்பட்டன. தமிழகத்தில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி ஒரு கட்டத்தில் தடைபட்டு நின்றபோது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற தோழர் பி.ராமமூர்த்தி கிழக்கு ஜெர்மனி நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்த ‘பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும்’ தொழில்நுட்பத்தை பார்த்தார். அதனடிப்படையில் நெய்வேலியிலும் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தியை செய்யலாம் என மத்திய அரசிடமும் வலியுறுத்தினார். மாநிலத்திலும் குரலெழுப்பினார். இந்த அழுத்தத்தினால் சோவியத் யூனியன் பொறியாளர்களே நேரில் வந்து நிர்மாணித்த நெய்வேலி அனல் மின் நிலையம், இன்றும் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாக விளங்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. அனந்த நம்பியார் தமிழகத்தில் மத்திய அரசு கனரக தொழில்களை துவங்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதன் விளைவாகவே திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும், பெல் நிறுவனமும் ஒன்றிய அரசால் துவங்கப்பட்டது.
‘பெல்’ நிறுவனத்தைப் பாதுகாத்த பி.ஆர்.
ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது தொழில்அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ‘பெல்’ நிறுவனத்தை ஜெர்மனி நாட்டைச் சார்ந்த சீமென்ஸ் என்ற பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்க்க ரகசியமாக முயற்சி எடுத்தார். இந்த முயற்சி மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவில் அனல்மின் நிலையங்களை உருவாக்குவதற்கு தேவையான பாய்லர் உள்ளிட்ட பாகங்களை நுணுக்கமான தொழில்நுட்ப அடிப்படையில் ‘பெல்’ நிறுவனமே உற்பத்தி செய்கிறது. எனவே இந்தியாவில் தொழில்வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய பெல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று தோழர் பி.ராமமூர்த்தி முன் நின்றார். மக்கள் மத்தியிலும், நாடாளுமன்றத்திலும் இந்த முழக்கம் முன்னெடுக்கப்பட்டது. பெல் நிறுவனத்தினுடைய நவீன தொழில்நுட்பத்தை விளக்கி ‘for whom the BHEL tolls’ என்ற பிரசுரத்தையும் தாயாரித்த பி.ராமமூர்த்தி, பிரச்சனையை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றார். இதனால் பொதுத்துறை நிறுவனமான பெல் பாதுகாக்கப்பட்டது. இதைப்போலவே சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனத்தை ஒட்டுமொத்தத்தில் தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு முயற்சித்த போது சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகளும்,இடதுசாரி இயக்கங்களும் எடுத்த முன்முயற்சியினால் சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக நீடித்து வருகிறது.
நிலப் போராட்டங்களின் விளைவாக…
கேரளாவில் 1957ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் மூலம் வெற்றி பெற்றது. தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அரசாங்கம் அமைந்தது. அந்த அரசாங்கமே, உழுபவருக்கே நிலம் என்ற, விடுதலைப் போராட்ட கால முழக்கத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயல்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கேரளாவைப் போல் நில உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக நிர்ணயிக்கப்பட வேண்டுமென 1961ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் மாநிலந்தழுவிய மகத்தான மறியல் போராட்டம் நடத்தின. 1967ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு நில உச்சவரம்பு சட்டம் திருத்தப்பட்டு 15 ஏக்கர் உச்சவரம்பு என தீர்மானிக்கப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்டாலும் இச்சட்டம் சரியாக அமலாக்கப்படவில்லை. உச்சவரம்புக்கு உபரியாக உள்ள நிலங்களை விவசாயத்தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் விநியோகம் செய்திட வேண்டுமென்று பல கட்ட போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழத்தஞ்சையில் (நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) நடத்தியது. இத்தகைய இயக்கத்தின் விளைவாக கீழத்தஞ்சையில் 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட உபரி நிலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கீழத்தஞ்சை எழுச்சி
கீழத்தஞ்சையில் நிலவுரிமைப் போராட்டம் மட்டுமல்ல; தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும் செங்கொடி இயக்கமே முன்னணியில் நின்றது. அதற்கு எதிரான அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகத்தான் கீழ்வெண்மணியில் , 44 தலித் உயிர்களை, நம் செங்கொடி இயக்க கண்மணிகளை, நிலச்சுவான்தார்கள் உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த கோரச்சம்பவத்திற்கு பிறகு கணபதியா பிள்ளை தலைமையில் ஆணையம்அமைக்கப்பட்டது. இடதுசாரிக்கட்சிகள் மேற்கொண்ட முன்னெடுப்பால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒப்பீட்டளவில் கீழத்தஞ்சையில் சாதியக்கொடுமையும் கணிசமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வரலாறு நெடுகிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அளப்பரிய பணிகளை ஆற்றிய பெருமிதத்தோடு, விழுப்புரம் மாநாட்டின் வழியாக தனது நீண்ட புரட்சிகரப் பயணத்தைத் தொடர்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.