மாநில செயற்குழு

தஞ்சை அருமலைக்கோட்டை தலித் முதியவர் வன்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தஞ்சை அருமலைக்கோட்டை தலித் முதியவர் வன்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Copy

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதியவர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச் செயலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பட்டியல் சமூக முதியவர் 62 வயதான அருணாச்சலம் அதே ஊரைச் சேர்ந்த விவேக் என்கிற இளைஞனால் சாராய பாட்டிலால் கழுத்திலும் உடலிலும் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.  ஊர் மக்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னணியில் குற்றவாளி நள்ளிரவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய வன்செயல்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது கவலையளிக்கிறது. அரசு இயந்திரமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீண்டாமை கொடுமைகளும், வன்செயல்களும் அதிகமாக நடந்தேறுகிற பகுதிகளை அடையாளம் கண்டு பட்டியல் சாதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் தீருதவியை தாமதமின்றி வழங்கிட வேண்டும். அரசு வேலையை அருணாச்சலம் மகன் மணிகண்டனுக்கு விரைந்து வழங்கிட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் போராட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும் அளித்த உறுதிமொழிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்) மாநில செயலாளர்