மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிஐடியு மாநில துணை தலைவருமான தோழர் இ. பொன்முடி (வயது 73) அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் இ. பொன்முடி பின்னி இன்ஜினியரிங் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்து நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்ட பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், சிஐடியுவிலும் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர தொழிற்சங்க பணியில் ஈடுபட்டவர். சென்னையில் மெப்ஸ் தொழிற்சங்கத்தை உருவாக்கி தனது இறுதி நாள் வரை அத்தொழிலாளர்களின் நலன்களுக்காக அரும்பாடு பட்டவர். சென்னையில் பல்வேறு தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்து அதன் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர். தொழிலாளர்களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். அவரது மறைவு தொழிற்சங்க இயக்கத்திற்கும், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது துணைவியார், மகன்கள் மற்றும் உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.