தீர்மானங்கள்மாநில செயற்குழு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஊதிய பாக்கி ரூ.1635 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

தீர்மானம் 2

2014 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதற்கொண்டு ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை  நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.  இதன் அடிப்படையில்  10 ஆண்டுகளாக திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் குறைத்து   வருகிறது.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் 2005ல் , ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை தரப்பட வேண்டும் அரசாங்கம் அறிவித்திருக்கிற சட்ட கூலி முழுமையாக கொடுக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறை செய்திருந்த போதும் நிதி ஒதுக்கீடு குறைப்பு காரணமாக நாடு முழுவதும் ஆண்டு தோறும் 50 சதவிகிதம் வேலை நாட்கள் கூட வேலை வழங்கப்படுவது இல்லை. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 50 சதம் முதல் 55 சதம் வரை தான் வேலை வழங்கப்படுகிறது. வேலை  செய்த 15   நாட்களில் ஊதியம் தரப்பட வேண்டும். காலதாமதமாக வழங்கப்படும் ஊதியத்திற்கு வட்டி சேர்த்து ஊதியம் வழங்க சட்டம் உறுதி செய்துள்ளது. மேலும் இதனை  உச்சநீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு  இந்த சட்டத்தை மதித்து செயல்பட மறுக்கிறது. வேலை முடிந்து மாநிலங்கள் ஊதிய பட்டியல் அனுப்பியவுடன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களுக்கும் மேலாக நிலுவை வைத்து இருக்கிறது. இதனால் தீபாவளி பொங்கல் போன்ற விழாக் காலங்களில் கூட மக்கள் கையில் பணமின்றி துயரத்தில் இருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த மாதம் 13ம் தேதி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி ஊதிய பாக்கியை உடனே விடுவிக்க கேட்டுக் கொண்டார்.   வழக்கம் போல முதல்வர் கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில் தரவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இரண்டு வாரங்களை கடந்த சூழலில் ஒன்றிய அரசாங்கம் நிதியை விடுவிக்காத நிலையில் அடுத்த கட்ட தொடர் முயற்சியாக தமிழக நிதி அமைச்சர் அவர்களும் திமுக எம்பிக்கள் குழு தலைவருமான கனிமொழி அவர்களும் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய ஊதிய பாக்கி ரூ.1635 கோடியை உடனடியாக தர வலியுறுத்தி உள்ளனர். இத்தகைய சூழலில்  ஊதிய பாக்கி,  வேலை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகளும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பாரபட்சத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஒன்றிய அரசு ஏழை,  எளிய மக்களின் கூலி பணத்தை தராமல்  மாநில அரசுகள் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதை முடமாக்கி வருகிறது.  ஆகவே ஒன்றிய மோடி அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 1635 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது

Leave a Reply