மாநில செயற்குழு

மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மத வெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப் பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையுடன் அனைத்துப்பகுதி மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திட

தீர்மானம் 1

தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் திட்டமிட்டு சீர்குலைக்க மதவெறி சக்திகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் தமிழ்நாட்டு மக்கள் மதவெறி சக்திகளை புறக்கணித்தே வருகின்றனர். மாநிலத்தின் பொருளாதார நலன்களை முற்றிலும் புறக்கணிக்கிற பாஜக, மக்கள் மத்தியிலேயே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. அவர்கள் மேற்கொண்ட அனைத்து சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும், திசை திருப்பல்களுக்கும் இடம் கொடுக்காமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து அம்சங்களிலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை புறக்கணித்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக  கருதப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்க்கா அமைந்துள்ளது. நீண்ட காலமாக  மக்கள் எவ்வித பிரச்சனையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

                மலை உச்சியில் அமைந்துள்ள தர்க்காவில் கந்தூரி கொடுப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆடு, கோழி பலியிட்டு அன்னதானம் செய்யும் நடைமுறை உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் 25.12.2024 அன்று தர்க்காவிற்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். காலம் காலமாக எவ்வித பிரச்சனையுமின்றி நடைபெற்று வந்த நேர்த்திக்கடன் நடைமுறையையும், சிறுபான்மை மக்களின் கந்தூரி வழிபாட்டு உரிமையையும் தடுத்ததோடு, காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுக்களுடன் கூடிய வழிப்பாதையை எவ்வித உத்தரவுமின்றி அடைத்து பெரிய ரத வீதியில் அமைந்துள்ள மலைப்பாதை வழியாகத் தான் மக்கள் செல்ல வேண்டுமென்று தடுத்த காவல்துறையின் இந்நடவடிக்கை தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்துள்ளது. காவல்துறையினரின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இச்செயலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறது.

                மதுரை மாநகர் மாவட்ட காவல்துறையின் இந்நடவடிக்கைகள் மதவெறியர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கெடு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டுகிறது. மேலும், மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க அனைத்து கட்சிகளும், திருப்பரங்குன்றத்தின் அனைத்துப்பகுதி மக்களும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

                அதேபோல, திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மதமோதலை ஏற்படுத்திட தீய நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவெறி அமைப்புகளின் முயற்சிகளை முறியடித்திட வேண்டுமெனவும், காலம் காலமாக பின்பற்றி வரும் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டுமெனவும், உடனடியாக காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதையை திறக்க வேண்டுமென்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply