மாநில செயற்குழு

காவல்துறை மானியக்கோரிக்கை சிபிஐ(எம்) சட்டமன்றக்குழு தலைவர் தோழர் நாகை மாலி பேச்சு

Statement poste

காவல்துறை மானியம் – 2025

தோழர் நாகை மாலி உரை

அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வடிவங்களில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கும் போக்கு உள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகளை வீடுகளுக்குச் சென்று இரவோடு இரவாக கைது செய்வது, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தடுத்து நிறுத்தி கைது செய்வது திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பது, குறிப்பாக பெண் தொழிலாளர்களை இத்தகைய அணுகுமுறையுடன் கையாளுவது ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

குறிப்பாக சென்னையில் 22.04.2025 அன்று மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் என்று கூட பாராமல் அவர்களை சென்னைக்கு வரவிடாமல் ரயில், பஸ் நிலையங்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளதானது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

இதுபோன்று தலைநகரில் ஜனநாயக ரீதியில் போராட்டம் என்று அறிவித்தால் சென்னை எல்லைக்குள்ளேயே வரவிடாமல், ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்து அடைத்து வைக்கும் போக்கு கைவிடப்பட வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுகிறேன்.

கடலூர் மாவட்டம், மலையடிக்குப்பத்தில் தலைமுறை தலைமுறையாக முந்திரி விவசாயம் செய்து வந்த நிலங்களை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அழித்த போது நிர்க்கதியாக நின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என்று கூட பாராமல், அத்துமீறி பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றியது, காவல்துறையின் அத்துமீறிய செயல் என்று பார்க்கிறேன். காவல்துறையின் இதுபோன்ற அடாவடி செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்திய விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவில்லை என போராடிய விவசாயிகளுக்கு  ஆதரவாக, அவர்களோடு நின்ற அரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பி. டில்லிபாபுவை, திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் என்பவர், சட்டையைப் பிடித்து இழுத்தும், ஒருமையில் பேசியும், கைது செய்து கிரிமினல் குற்றவாளியை கையாளுவது போல் கையாண்டு வண்டிக்குள் தள்ளியுள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் தலைவர்களை கைது செய்கிற போது கண்ணியமாகவும், சுயமரியாதை பாதிக்காத வகையிலும் காவல்துறை நடந்து கொள்வதை மாண்புமிகு நமது முதலமைச்சர் அவர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நலப் போராடடங்களில் ஈடுபட்ட எங்கள் கட்சியின் சங்கரன் கோவில் நகரச் செயலாளர் தோழர் அசோக் மீது சங்கரன் கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் மனிதஉரிமையை மீறும் வகையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை எதிர்த்து மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டு, காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கிடவும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காவல் ஆய்வாளர், அதிகார துஷ்பிரயோகத்துடன் மக்கள் பணி செய்து வரும் அசோக் மீது ஏராளமான வழக்குகளை புனைந்து, உள்நோக்கத்துடன், ரௌடி பட்டியலில் இணைத்துள்ளார். சட்டவிரோதமாக  ரௌடி பட்டியலில் சேர்த்துள்ள இவரை அதிலிருந்து  நீக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உள்துறை செயலாளர், டிஜிபி என மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. கடந்த ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நான் உரையாற்றுகையில் இதனை  வலியுறுத்தியுள்ளேன்.  ஆனால்  இதுவரை அவர் பெயர் ரௌடி பட்டியலிலிருந்து நீக்கவில்லை. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் தலையிட்டு அசோக் அவர்களை ரௌடி பட்டியலில் இருந்து நீக்கவும், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தவும் கேட்டுக் கொள்கிறேன்.

கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்டு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை அறவே ஒழித்திட இன்னும் வேகமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை தடுக்க தவறும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு  காவல்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்திட வேண்டும். சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களின் மீது புகார் கொடுக்கும் போது  போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறையினர் உறுதி செய்திட வேண்டும்.

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள், தாக்குதல்கள் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதை காவல்துறை உறுதி செய்திட வேண்டும். இப்படிப்பட்ட வழக்குகளை நீர்த்துப்போகச் செய்து விடக் கூடாது. காவல்துறை  இதில் உறுதியாக இருக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பெண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்கள், காவல் அலுவலகங்களில் விசாகா கமிட்டி கட்டாயம் அமைத்திட வேண்டும். பெண் காவலர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு, குடியிருப்பு ஒதுக்கீடு இவற்றில் முன்னுரிமை அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுப்பதற்கான செயல்திறனை அதிகரிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் காவல்துறைக்கு வழங்கப்பட வேண்டும். போலி இணைய தளங்களை கண்டறிந்து அவைகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் உரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

காவல்துறையில்  Sanctioned Posting DGP-யிலிருந்து காவலர் வரை 1,24,933 அனுமதிக்கப்பட்டது. இதில் 13042 பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக உள்ளது. இதனால் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் பெரும் தடையாக உள்ளது. காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதோடு, தற்போது மக்கள் தொகைக்கேற்ப காவல் நிலையங்களையும், கவலர்களையும் கூடுதலாக நியமித்திட வேண்டும்.

காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு உடனே செயல்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சங்கம் உள்ளது. ஆனால் கடைநிலை காவலர்களுக்கு சங்கம் வைத்துக் கொள்ள உரிமை மறுக்கப்படுகிறது. காவலர்கள் சங்கம் வைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை காவலர்கள் மூலமாகவும், சில அரசியல் கட்சிகள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பல மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கிறது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் கூடுதல் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளுக்கு காவலர்கள் சென்று விடுகிறார்கள். அதோடு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே, காவலர்களுக்கு வார விடுமுறை, 8 மணி நேரம் சுழற்சி முறை வேலை, பணியிட மாறுதல், சங்கம் வைக்கும் உரிமை  போன்றவைகள் வழங்கிட வேண்டுகிறேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி தேவையற்றது. நேரடியாகவே உதவி ஆய்வாளராகவே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

புகார் தெரிவிக்க காவல்நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எந்த புகார் கொடுத்தாலும் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரக் கூடிய முறையில் அரசியல் கட்சிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தும் போது போராட்டம் நடத்தக் கூடிய இடங்கள் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் இடங்களை அதிகப்படுத்தவும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு பெரிய இடத்தை தேர்வு தருவதற்குமான ஜனநாயக உரிமைகளை தங்கள் ஆட்சியில் விரிவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய காவல் படைகள் மற்றும் பிற மாநிலங்களின் காவலர்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் காவலர்களின் சம்பளம் குறைவு என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். காவலர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 4 ஆண்டுகளில் என்கவுண்டர் என்பது 19 முறை நடந்துள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது கவலை தரும் விசயமாக நான் பார்க்கிறேன். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தீயணைப்பு

தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களைபூர்த்தி செய்திட வேண்டும். தீயணைப்பு போலீசாருக்கான குடியிருப்புகளையும் கூடுதலாக்கிட வேண்டும்.

தொகுதி கோரிக்கைகள்

கந்தர்வக்கோட்டை தொகுதி, கறம்பக்குடியில் பேரூராட்சி அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் தீயணைப்புத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகமே ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கு வேறு பகுதியை தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அவசரத்திற்கு தீயணைப்புத்துறை அலுவலகத்தை நாடுவதில் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கறம்பக்குடி பேரூராட்சி பகுதியிலேயே தீயணைப்புத்துறை புதிய கட்டிடம் கட்டிட வேண்டுகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டையில் டி.எஸ்.பி. அலுவலகம் அமைத்திட வேண்டும்.

கீழ்வேளூர் தொகுதி வேளாங்கண்ணியில் வேளாங்கண்ணியைச் சுற்றியுள்ள 5 காவல்நிலையங்களை உள்ளடக்கிய டி.எஸ்.பி. சப் டிவிசன் அமைக்கப்பட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் – ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு காவல் அவுட் போஸ்ட் நிறுவப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நாகூர் மற்றும் வெளிப்பாளையம் காவல்நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கான பழைய குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து வசிக்க தகுதியற்றவைகளாக உள்ளன. இவைகளுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எனது கீழ்வேளூர் தொகுதியில் வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்திற்கும், கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கும் சொந்த கட்டிடம் இல்லை. நீண்ட காலமாக இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும் நடவடிக்கை இல்லை. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க தாங்கள் அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply