மத்தியக் குழு

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ(எம்) அளித்த குறிப்பு!

Statement

தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சியின் பேரில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் அடங்கிய சிபிஐ(எம்) குழு இந்திய தேர்தல் ஆணையத்தைச் சந்தித்தது.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பு பின்வருமாறு;

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பது எனும் தேர்தல் ஆணையத்தின் முன் முயற்சியை வரவேற்கிறோம். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாக இருக்கும் என விரும்பி எதிர்பார்க்கிறோம்.

சமீப காலங்களில் தேர்தல் நடத்தும் முறைகள் குறித்தும் ஜனநாயக முறையைப் பாதுகாப்பது மற்றும் ஆழப்படுத்துவது குறித்தும் தனது அக்கறையை, கட்சி தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது. இக்கடிதத்தின் மூலம் அத்தகைய வலியுறுத்தல்களை மையப்படுத்த விரும்புகிறோம்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எல்லைகள் பற்றி நன்கு உணர்ந்திருக்கும் நிலையிலும், ஆணையம் அத்தகைய தன் எல்லைக்குள் இன்னும் விரிவாக, தனது அதிகாரத்தை மற்றும் நிர்வாக உரிமைகளைச் செலுத்தி, அரசியல் கட்சிகள் மீது செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அதனை நோக்கப்படுத்தி அமைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

EVM, தேர்தல் நிதி வழங்குதல் மற்றும் பெறுதல், ஊழல், கார்ப்பரேட் ஆதிக்கம்/கட்டுப்பாடு, பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவம், பாரபட்சமற்ற சுதந்திரமான தேர்தல் முறைமைகளின் செயல்பாடு மற்றும் ஊடகங்களின் பங்கு – இவை குறித்த ஒட்டுமொத்தமான காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் அரசியல் கட்சிகள் பெறும் தொகுதிகளின்  எண்ணிக்கைக்கும் அவை பெற்ற ஒட்டுமொத்த ஓட்டு சதமானங்களுக்குமான இடைவெளி, மக்களின் ஒட்டுமொத்த தீர்ப்பை பிரதிபலிப்பதாக இல்லை என்பதை அறியத் துவங்கியுள்ளோம்.

இது, அநேக தேர்தல் காலங்களில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பிடத்தகுந்த அளவு வாக்கு சதவீதம் பெற்ற கட்சிகள் அதை பிரதிபலிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கை பெறாதிருப்பதும், அதிக தொகுதிகள் பெற்ற கட்சிகள் வாக்கு சதவீதம் குறைவாக பெற்று இருப்பதும் பார்க்க முடிகிறது.

2014ல் பிஜேபி அகில இந்திய அளவில் வெறும் 31% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் பாதிக்கும் ஏற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது.

19.3% வாக்குகள் பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ்,வெறும் 44 தொகுதிகளையே பெற்றது.

2024 ல், 36.56% வாக்குகள் பெற்ற பிஜேபி 240 தொகுதிகளையும், 21.19% பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் 99 தொகுதிகளையும் பெற்றன.

மாநிலம்ஆண்டுகட்சிவாக்கு சதவிகிதம்வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை
உ..பி.,2024பாஜக9.390
  காங்கிரஸ்9.466
ஒடிசா2024பாஜக45.3420
  காங்கிரஸ்20.521
ஆந்திரா2024ஒய்எஸ்ஆர் காங்.39.614
  டிடிபி37.7915
தில்லி2024பாஜக54.557
  ஆம் ஆத்மி கட்சி18.910
ஆந்திரா2024 சட்டமன்றம்ஒய்எஸ்ஆர் காங்.39.3711
  டிடிபி45135

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்குச் சான்றாக இந்த புள்ளி விவரமே போதுமானதாக உள்ளது.

மேலும் சிறு சிறு அரசியல் கட்சிகள், சில பகுதிகள் அல்லது தொகுதிகளில் பரந்துபட்ட அடிப்படை பெற்றிருப்பினும் தொகுதி ஒன்று கூட பெற இயலாது இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் ஒரு சிறு வாக்கு சதவீத மாறுதலும் தொகுதி எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இத்தகைய வெளிப்படையான காரணங்களாலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை” கோருகிறது.

“சட்ட ஆணையம்” தனது பரிந்துரை ஒன்றில் தற்போதுள்ள 543 இடங்கள் நேரடி தேர்தல் மூலமும் கூடுதலாக 25% இடங்கள் இந்த பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையிலும் நிரப்பப்படலாம் என்று கூறுகிறது.

மேலும் இதே மாதிரியான முறை, மாநில சட்டமன்றங்களின் தேர்தலிலும் செயல்படுத்தப்படலாம்; இத்தகைய நடைமுறை ஒரு கட்டமாகவும் பின்னர் முழுமையாகவும் செயல்படுத்தப்படலாம் என்றும் அது கூறுகிறது.

மிகுந்த விவாதங்களையும், எதிர்க்கருத்துக்களையும் எழுப்பியுள்ள “தொகுதி மறுவரையறை  பரிசீலனை” குறித்த உத்தேச மாறுதல்கள் விஷயத்தில் இப்போது இங்கே கட்சி எதையும் தெரிவிக்கவில்லை.

ஒரே தேர்தல் – பரிந்துரைக்கு எதிர்ப்பு!

ONOE எனப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. இத்தகைய சித்தாந்தம், முற்றிலும் மையப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான அரசை கட்டமைக்கும் என கட்சி கருதுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து நடத்துவதற்காக சில மாநில அரசுகளின் ஆயுட்காலத்தை இம்முறை அபகரிக்கும் அல்லது வெட்டிவிடும். ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆடும் கட்சி பெரும்பான்மை இழந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்தால் எஞ்சியுள்ள காலத்திற்காக மட்டுமே இடைக்கால தேர்தல் நடைபெறும் என இந்த ONOE இன் ஒரு பரிந்துரை கூறுகிறது.

இத்தகைய கூறுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஜனநாயகம், கூட்டாட்சி எனும் இரு முக்கிய அம்சங்களை நீர்த்துப் போகச் செய்கின்றன.

“கேசவானந்த பாரதி” வழக்கில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் “அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை” என்று கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்குறுதிகள்!

சஷாங்கா ஜே ஸ்ரீதரா Vs ஜமீர் அகமது கான் – வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது:

“ஒரு கட்சி, தனது தேர்தல் வாக்குறுதியில் தருவதாகச் சொல்லும் எந்த ஒரு ஏற்பாடும் நேரடியாக அல்லது மறைமுகமாக “நிதி உதவி”யாக இருப்பது, ஊழலான வழிமுறை என்று கருத இயலாது. எனினும் அக்கட்சி அத்தகைய ஏற்பாட்டினை எவ்வாறு வழங்கும் என்ற ஆதாரத்தை குறிப்பிட வேண்டும்” என்று.

மேலோட்டமாக இதனை பார்க்கும்போது வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான அணுகுமுறையை கொண்டிருப்பினும் அரசியல் கட்சிகளின் அடிப்படையான இயக்கத்தை கட்டுப்படுத்தும் மற்றும் சுதந்திரமான தேர்தல் நடவடிக்கைக்கும் எதிரானதாகவும் உள்ளது.

எனவே தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்த ஒரு சட்டம் இயற்றும் நடவடிக்கையையும் கட்சி எதிர்க்கிறது.  “அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்”களுக்கான “தேர்தல் நடத்தை விதிகள் குறித்த வழிகாட்டுதல்கள்” யாவும் “பொதுவான நடத்தைகள்” பிரிவில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது போதுமானதாக உள்ளது.

பணத்தின் ஆதிக்கம்!

பண பலத்தின் தாக்கம் தேர்தல் வெற்றிகளை தீர்மானிக்கும் அம்சமாக மாறியுள்ளது. பண பலமிக்கோர் யாரும் தொகுதிகளை வெல்வதும் கொள்கைகளை செயல்படுத்துவதும் தீர்மானிப்பதும் மக்களின் எதிர்கால வாழ்வியலைத் தீர்மானிப்பதும் எனும் இடத்திற்கு செல்வது என்பது அதிகரித்துள்ளது.

2024 பொதுத் தேர்தலில் வென்று உறுப்பினராகியுள்ளோரில் 93%க்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தேர்தல் ஜனநாயக அமைப்பின் ஆதாரமாக உள்ள “அனைவருக்குமான சமமான ஆடுகளம்” என்கிற தன்மையையே பண ஆதிக்கம் தகர்த்துவிடுகிறது. பொருளாதார ரீதியிலான மேன்மை, தேர்தல் வெற்றிக் காரணியாக மாறி கட்சிகளும் வேட்பாளர்களும் பண அதிகாரம் மிக்கவராக இருந்தாலேயே தொகுதிகள் அதிகம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கருப்புப் பணம், லஞ்சம், சிறுசிறு பரிசுகள் மற்றும் கவனிப்புகள் என இத்தகைய வேட்பாளர்கள் தங்கள் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

இது குறித்து “சட்ட ஆணையம்” தனது அறிக்கையில், “தேர்தல் நிதி வழங்கும்” முறையில் கட்டுப்படுத்தப்படாத தன்மை நீடித்தால் அது இரண்டு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

அ. அத்தகைய நிதி வழங்குகிற தொழில் மற்றும் தனியார் அமைப்புகள், தங்கள் மீதான சட்டபூர்வமான உறுதியான நடவடிக்கைகளை, தங்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லாதவாறு இருக்குமாறு ஆக்கிக் கொள்கின்றன. தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை எதிர்பார்க்கின்றன.

ஆ. அவை கண்காணிப்பு அமைப்புகளை கைப்பற்றுவதோடு மட்டுமின்றி சாதாரண குடிமக்களின் குரலையும் அடக்கிவிடுகின்றன, “பொதுநலன்” என்கிற பெயரில் ” என்று கூறுகிறது.

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் பிப்ரவரி 2024ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் “இது வெளிப்படையாக தன்னிச்சையானது”, என்று கூறியது.  இத்தகைய “கட்டுப்பாடற்ற நிதி வழங்கும் முறை”, தேர்தல் முறைமையின் மீதே நெறிப்படுத்தப்படாத தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்றும் குறிப்பிட்டது. சுதந்திரமான சார்பு ஏதுமற்ற தேர்தல் எனும் அடிப்படைத் தேவையையே அது இல்லாமல் செய்யும்.

தேர்தல் பத்திரம் எனும் முறை முழுமையானதோ குறையற்றதோ அல்ல. நிதி வழங்குபவரை மக்கள் பிரதிநியை எளிதில் தொடர்பு கொள்ளும் அதிகாரம் உள்ளவராக ஆக்குகிறது. அதுவே கொள்கை முடிவுகள் மீதும் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

அரசே நிதி வழங்குவது!

அரசே நிதி வழங்கும் முறை பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் பெரும் பண ஆதிக்கம், லஞ்சம், வாக்குகளைக் கைப்பற்றுதல், நிறுவனப்படுத்தப்பட்ட ஊழல் முதலிய சீர்கேடுகள் களையப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு அடிப்படையில் அந்தந்த கட்சிகள் தேர்தல் நிதியைப் பெறும் வண்ணம், ஒரு பொது நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

தினேஷ் கோஸ்வாமி மற்றும் இந்திரஜித் குப்தா குழு பரிந்துரையான “பகுதி அரசு நிதி ” எனும் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனது முழு ஆதரவை தருகிறது. இதன் மூலம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் சமநிலை ஆடுதளம் கிடைக்கும்.

தேர்தல் செலவினங்களின் உச்சவரம்பு:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 77 வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் மீதான உச்சவரம்பை விதிக்கிறது. ஆனால் ஒரு கட்சி, தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடும் தொகை மீது எந்த ஒரு வரம்பும் குறிப்பிடப்படவில்லை.

இது விதிக்கப்படாதவரை வேட்பாளர் மீது விதிக்கப்படும் உச்சவரம்பு அர்த்தமற்றது. இதற்கு தகுந்தவாறு பிரிவு 77 திருத்தப்பட வேண்டும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது போன்று இருக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையிலான செலவினங்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகின்றன. உண்மையில், தேர்தல் காலம் இதைவிட அதிகமானது. இதுவும் கவனத்தில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் நிலையில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு/ அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பயணம் செய்ய அரசு விமானங்கள் விலையின்றி பயன்படுத்தப்படும் போக்கையும் பார்க்கிறோம். இது பாரபட்சமானது. பிற வேட்பாளர்களுக்கு பாதகமாகவும் அமைகிறது.

ஊடகங்களின் பங்கு!

2014க்கு பிந்தைய காலகட்டங்களில் தேர்தல் காலத்தில், ஊடகங்களின் பங்கு வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்துவதை பார்க்கிறோம். அவை சுதந்திரமான தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கின்றன. ஊடகங்களில் தனிநபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதன் மீதான அவசியமான கட்டுப்பாடுகள் தேவை.

வான்வழி ஊடக அலைவரிசை தனியார்மயமான பின் தனியார் ஊடகப் பெருமுதலாளிகள் அவற்றை ஆதிக்கம் செய்வது கண்கூடு. எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தனியார் ஊடகங்களில் அவர்களுக்கான நேரத்தை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெற உரிய வழிவகை செய்யப்பட வேண்டும்.

EVM, VVPAT

EVM பயன்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முந்தைய காலத்தில் தனது முழு ஆதரவைத் தந்துள்ளது. VVPAT அறிமுகமான பின் EVMகளின் வெளிப்படைத்தன்மைக்கும் இவை உதவியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவை குறித்த, இவற்றின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகங்கள் இன்னும் உள்ளன.

வாக்களிக்கும் இயந்திரம், VVPAT, கட்டுப்பாட்டு அலகு என்ற வரிசை இப்போது பின்பற்றப்படுகிறது. ஒருவர் வாக்களித்ததும் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பது VVPATல் ஒளிர்கிறது.  ஆனால் அதுவே கட்டுப்பாட்டு அலகில் பதிவாகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது.

எனவே அந்த வரிசையை வாக்களிக்கும் இயந்திரம், கட்டுப்பாட்டு அலகு, VVPAT என்று அமைக்கக் கோருகிறோம். நடவடிக்கை எந்திரங்களின் உண்மை தன்மையின் மீதான ஐயங்களை போக்கும்.

VVPAT அறிமுகத்திற்கு முன்னர் EVM ல்உள்ள “சிப்”, வேட்பாளர் / சின்னங்கள் குறித்து, அது பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் போது எந்த விபரத்தையும் அறிந்திருக்காது.

VVPAT அறிமுகத்துக்கு பின்னர் இந்த அறிவு அதற்குப் புகுத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களும் VVPAT, கண்ட்ரோல் யூனிட், வாக்களிக்கும் இயந்திரம் – அமைப்பில் ஈடுபடுவதால் வரிசையின் அமைப்பை, இந்த பரிந்துரையின்படி மாற்றி அமைப்பது என்பது, இயந்திரங்கள் எவையும் முன்னரே சாதகமாக ஆக்கப்படலாம் என்கிற வாய்ப்பிலிருந்து தவிர்க்க பெரிதும் உதவும்.

அ. வரிசையில் அமைப்பை வாக்கு இயந்திரம், கட்டுப்பாட்டு அலகு, VVPAT என மாற்றியமைப்பது.

ஆ. VVPAT தரும் மொத்த மதிப்பீடும், EVMல் பதிவான மொத்த மதிப்பீடும் 100 சதம் சரிபார்ப்பதை உறுதி செய்வது.

இ. தொழில்நுட்ப ரீதியிலான பாதுகாப்பை முழுவதும் உறுதி செய்ய வழிமுறைகளை மறுஆக்கம் செய்வது.

ஈ. தனியார் அமைப்புகளை இந்த எந்திர வடிவமைப்பு, பொருத்துதல், சரிபார்த்தல், பழுது நீக்கும் அம்சங்களிலிருந்து முற்றிலும் விடுவிப்பது என்பவை தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கை விவரங்களில் பிழைகள்!

ஓட்டு எண்ணிக்கை விவரங்களை ஆணையம் வெளியிடுவதில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. குறித்த கால இடைவெளிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கை விவரங்களை தனது இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதத்தை ஏற்க இயலாது.

2024 தேர்தலில், முழுமையான முதற்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை, தேர்தல் ஆணையம் வெளியிட 11 நாட்களையும் இரண்டாம் கட்டத்திற்கு நான்கு நாட்களையும் எடுத்துக் கொண்டது.

துவக்கக் கட்டத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களுக்கும் இறுதியில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களுக்கும் இடையே இருந்த வேறுபாடும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. ஒன்று மட்டும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 தேதிகளில் 60% வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக அறிவித்த ஆணையம் இறுதி தகவலை, ஏப்ரல் 30ல் வெளியிட்ட போது அதனை 66.14 எனவும் 66.71 எனவும் திருத்தி அறிவித்தது.

ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் பகுதி I – 17 C படிவத்தை பதிவேற்றம் செய்து, சதவீதமாக அன்றி முழுமையான வாக்கு எண்ணிக்கையாக அறிவிக்கும் வண்ணம் விதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் 17சியின் பகுதி இரண்டு பதிவேற்றம் செய்யப்படலாம்.

இந்த தருணத்தில், மகாராஷ்டிராத்தில் நடந்த பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2024ல் மகாராஷ்டிரத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலின் போது மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 9,28,90,445 பேர்.

நவம்பர் 2024ல் சட்டமன்ற தேர்தலின் போது, அந்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை  9,77,93,350 ஆக உயர்ந்துவிட்டது அதிர்ச்சியளிப்பதும் பெருத்த கேள்விக்குரியதும் ஆகும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் விதம்

2024 நாடாளுமன்ற பொது தேர்தலின் போது, ஆணையம், தனது cVIGIL app வழியே ஆயிரக்கணக்கான புகார்களை பெற்றுள்ளது. அவற்றின் மீதான முறையான சரியான நடவடிக்கையின்மை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. சட்டவிரோதமான பதாகைகள், சுவரொட்டிகள், மதுப்புட்டிகள் தருதல், பரிசுகள் வழங்குதல் என பல புகார்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன.

மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்வது, வழிபாட்டுத்தலங்களைப் பிரச்சாரத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவது என பல நிகழ்வுகள் நடந்தும் புகார்கள் வந்தும் ஆணையம் பாராமுகமாக இருந்துள்ளது.

பிரதமர் அவர்கள் மீது கூட எழுப்பப்பட்ட இது குறித்த புகார்களை  ஆணையம், கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் தேர்தலின் போதும் பிரச்சாரங்களின் போதும் தேசியச் சின்னங்களை மலிவாக தேர்தல் யுக்தியாகப் பயன்படுத்தியதை நாம் பலமுறை பார்த்தோம்.

இனி “ஆப்ரேஷன் சிந்துர்” கூட ஆளும் கட்சியின் விளம்பரப் பட்டியலில் இருக்கலாம்.

தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டியது ஆணையத்தின் அவசியமான அடிப்படையான கடமையாகும். அதிலிருந்து வழுவுவதும் பாரபட்சமாக இருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

தீவிரமான குற்றப் பின்னணியுடன் சபை உறுப்பினர்கள்!

ADR அறிக்கையின்படி மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 251 பேர் (46%) தங்களைக் குற்றப் பின்னணி உடையோராகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 170 பேர் மீது பாலியல் குற்றங்கள், கொலை, கடத்தல் பிரிவுகளில் வழக்குகள் உள்ளன.

இவைகள் எல்லாம் தெரிந்தே வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று கருத முடியாது. தவறு வேறு எங்கு உள்ளது. எனவே உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் மீது ஆணையம் மறுபரிசீலனை மனு சமர்ப்பித்து குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த தெளிவான தாக்கீதுகளைப் பெற வேண்டும்.

தேர்தல் ஆணைய சீர்திருத்தங்கள்!

உச்ச நீதிமன்றம் 2023ல் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த வழிகாட்டுதல்களை குறிப்பிட்டுள்ளது. பிரதமர், லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவின் மூலமே அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று.

ஆனால் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திருத்தம் மூலம் “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி” என்பதை, பிரதமரால் நியமிக்கப்பட்ட மற்றொரு கேபினட் அமைச்சர் என மாற்றியுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் பாரபட்சமானதும் ஆணையத்தின் சுதந்திரத்திற்கு எதிரானதும் ஆகும்.

நடந்து முடிந்த 2024 தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தல் ஆணையம் பாரபட்சமற்றது வெளிப்படைத்தன்மை மிக்கது என்கிற கருத்துக்களின் மீது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இதன் மீது ஆணையம் கவனம் செலுத்தி அவை சரி செய்யப்பட வேண்டும்.