பெறுதல்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
கடலூர் மாவட்டம்
அன்புடையீர், வணக்கம்.
கடந்த 15 மே 2025 வியாழக்கிழமை அதிகாலை கடலூர் சிப்காட்டில் நடந்த விபத்து குறித்து எங்கள் கட்சியின் சார்பில் கடந்த 17.05.2025 அன்று எங்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜி.மாதவன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலான குழு கள ஆய்வு செய்து இந்த மனுவை தங்களுக்கு அளிக்கிறோம்.
கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகம் மற்ற தொழிற்சாலை வளாகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்குக் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொழிற்சாலை வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இங்கு இருப்பது கிராமங்களும் குடியிருப்புகளும்தான். அதன் பின்னால்தான் தொழிற்சாலைகள் இங்கு வந்தது. ஆகவே மற்ற தொழிற்சாலை வளாகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த தொழிற்சாலை வளாக தகவமைப்பின்படி இங்குக் கூடுதல் கவனம், கூடுதல் கண்காணிப்பு, கூடுதல் மேற்பார்வை தேவைப்படுகிறது என்பதை முதலில் சுட்டிக்காட்டுகிறோம்.
இந்த நிலையில் கடந்த 15 மே 2025 வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்த டேங்க் வெடித்ததில் இரசாயன நீர் சிதறி அருகிலுள்ள வீடுகளில் கடல் அலையின் சீற்றம் போல் உள்ளே புகுந்துள்ளது சேதப்படுத்தியது. நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் செய்வதறியாது அலறி அடித்துக் கொண்டு, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும், உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
கடலூர் சிப்காட்டில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிற்சாலையில் தலா 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு ராட்சத டேங்க் உள்ளது. இந்த சாயத் தொழிற்சாலையிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் சூடான நிலையில் இந்த டேங்குகளில் சேகரித்து வைத்து பின்னர் அதனைச் சுத்திகரித்து ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி, பின்னர் அதனை அருகில் உள்ள கடல் மற்றும் ஆறுகளில் விடுவது வழக்கம்.
டேங்கிலிருந்து வெளியேறிய நீர் பழுப்பு நிறத்திலும் அதிலிருந்து வரக்கூடிய வாடை சாய எரிப்பு வாடை போல கடுமையாக இருந்தது இதனால் இந்த பகுதியிலிருந்த மக்கள் மூச்சுத் திணறல், எரிச்சல் தலைவலி வயிறு போக்கு போன்ற உடனடியாக உடல் உபாதைகளுக்கு ஆளானதாகத் தெரிவித்தார்கள். மேலும் அப்பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என்றும், இழந்த உடைமைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இடிந்த வீடு மற்றும் சுற்றுச்சுவரைப் புதிதாகக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர்.
பல வீடுகளின் சுவர்கள், மதில் சுவர்கள் இடிந்து உள்ளது. வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள், துணி மணிகள், பாத்திரங்கள் முழுமையாகக் கழிவுநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. தொழில் சார்ந்த உபகரணங்கள் குறிப் பாக வெல்டிங் மிஷின், ட்ரில்லிங் மெஷின் போன்றவையும் சேதமடைந்து உள்ளது. கால் நடைகள் மற்றும் கோழிகள் பாதிப்புக்களாகி உள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட 36 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இன்றும் அந்த இடத்திலிருந்து துர்நாற்றம் போகவே இல்லை. இந்த பின்னணியில் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
1. வெளியேறிய சுத்திகரிக்கப்படாத இந்த கழிவு நீரை செப்டிக் டேங்க் சுத்தம்செய்யக்கூடிய டேங்கர் லாரியை கொண்டு உறிஞ்சி எடுத்து தொழிற்சாலைக்குள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இந்த மாசுபட்ட நீர் வெளியேறிய அந்த பகுதியில் உள்ள மண்ணில் ஊறி இருந்தது அவற்றை அகற்ற அல்லது மாசு தன்மையை ஆய்வு செய்து அதைச் சமன் படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தகவல் இல்லை. மாசுபடுத்தும் இந்த செயலுக்குக் காரணமான தொழிற்சாலை நிர்வாகம் மாசுபட்ட நீர் வெளியேறிய பகுதியில் உள்ள நிலங்களை ஆய்வு செய்து அதன் மாசுத் தன்மைக்கேற்ப அதைச் சமன்படுத்திச் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2. கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலைகளின் செயல்பாடு மாசு காரணமாக இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்துத் தீர்வு காண்பதற்காக முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னு அவர்களால் உத்தரவிடப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வந்த கூட்டமானது கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது.
3. இந்தக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் உள்ள குறைபாடுகளை விதிமீறல்களை அரசின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக தீர்வு கண்டு பேராபத்துக்களைத் தவிர்க்க வாய்ப்பாக இருக்கும் என்று நன்கு தெரிந்திருந்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோப்புகளை வைத்து இந்த கூட்டம் நடத்த நாள் ஒதுக்கி தர வேண்டி நீண்ட காலமாக அணுகாமல் உள்ளதால் இந்த கூட்டம் நடைபெறாமல் உள்ளது உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் கவனம் எடுத்து இந்தக் கூட்டத்தை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. Public liability insurance act (பொதுப் பொறுப்பு காப்பீட்டுச் சட்டம் ) மூலம் இந்த தொழிற்சாலை மாசு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற மக்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆலை நிர்வாகமே கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும்
5. ரசாயன தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் ரேடியேட்டர் பாய்லர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய ஆய்வுத்துறை முறையாக ஆய்வு செய்கிறதா? ரசாயனப் பொருட்கள் இருப்பு வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் அது முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்திட வேண்டும். ரியாக்டர்கள், டேங்குகள், பாய்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதோடு ஆபத்தான உபகரணங்களில் சேப்டி வால்வு பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.
6. அபாயகரமான ரசாயனங்களைக் கையாளக்கூடிய தொழிற்சாலைகள் தங்கள் அருகாமையில் இருக்கக்கூடிய கிராமப் பகுதியில் உள்ள வசிக்கக்கூடிய மக்களுக்கு தாங்கள் பயன்படுத்தக்கூடிய ரசாயனங்கள் தங்கள் தொழிற்சாலையிலிருந்து உருவாகக்கூடிய கழிவுகள் உள்ளிட்டவை குறித்து தெளிவான விளக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிலிருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது அல்லது தப்பித்துக் கொள்வது என்ற விளக்கங்களையும் அது போன்ற ஒரு அவசர நிலையில் யார் எந்தெந்த நிலைகளிலிருந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மற்றும் ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டு இருக்க வேண்டும் அவ்வாறு செய்திருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நிச்சயமாகக் குறைந்திருக்கும் அல்லது இல்லாமல் போயிருக்கும் குறிப்பாகப் பகுதி வாழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருந்திருப்பார்கள் ஆகவே உடனடியாக கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளாகத்தில் உள்ள மக்களுக்கு இந்த ஒரு ஒத்திகை நிகழ்வு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட வேண்டும்.
7. சுற்றுச் சூழல் மாசு குறித்து முறையான பரிசோதனை நடைபெறவில்லை இதற்கான நவீன இயந்திரங்கள் இல்லாத நிலை உள்ளது எனவே இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
8. சிப்காட் தொழிற்சாலைகளின் சி எஸ் ஆர் நிதியைப் பெற்று அப்பகுதியில் நவீன மருத்துவமனையைத் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. அந்த தொழிற்சாலை வீடுகளிலிருந்து பத்தடி கூட இடைவெளி இல்லாமல் அவ்வளவு நெருக்கத்தில் அமைவதற்கு எப்படி சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு துறை அனுமதி வழங்கியது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது அதேபோல் சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநரகம் இதில் எவ்வாறு தலையீடு செய்தார்கள் என்பதும் கேள்வியாக இருக்கிறது.
10. 15 ஆண்டுகளுக்கு முன்னர் National Environmental Engineering Research Institute சிப்காட் பகுதியை ஆய்வு செய்து, மற்ற இடங்களை விட இப்பகுதியில் புற்று நோய் வருவதற்குப் பல மடங்கு வாய்ப்பு உள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் அதன் பின் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறி உள்ள சூழலில் ஒட்டு மொத்த சிப்காட் வளாகங்களில் உள்ள சுற்றுச்சூழல் குறித்த ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிகையை (Integrated Environmental Impact Assessment Report) தாக்கல் செய்ய தாங்கள் ஆவண செய்ய வேண்டும்.
11. இந்த விபத்திற்கு காரணமான நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் மீது மக்களுக்கு தீங்கு மற்றும் பாதிப்பு ஏற்படுத்தல், பொது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.