ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு கண்டனம்.
1931 ஜூலை 13 அன்று டோக்ரா ராணுவத்தால் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ஸ்ரீநகரில் உள்ள நக்ஸ்பந்த் கல்லறைக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சென்றபோது காவல்துறையினர் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி உட்பட இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் அங்கே போய் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவாறு தடுத்து அவர்கள் அனைவரையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதையும் கண்டிக்கிறது.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தனது சொந்த ஆணைகளையும் பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்களையும் அமல்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு ஓர் உதாரணம் தியாகிகள் தின விடுமுறையை ரத்து செய்ததாகும். இதற்குப் பதிலாக, சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொன்றதற்குப் பொறுப்பான மகாராஜாவின் பிறந்தநாளை விடுமுறையாக அறிவித்திருக்கிறது.
ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சுமூகமான செயல்பாட்டை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தியாகிகள் தின விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், ஜம்மு – காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்துப் பாதுகாத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.
முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஜம்மு- காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலுக்கு துணைநிலை ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.







