செய்தி அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி ஆணை வழங்கல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!

Tnpsc

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த 27.11.2024 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவில் 957 பேர் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இந்த தேர்வு முடிவினை எதிர்த்து சிலர் வழக்குத் தொடுத்திருந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தேர்ச்சிப் பெற்ற 957 பேருக்கு பணி ஆணை வழங்கிட வேண்டுமென தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு  வெளியாகி கடந்த 7 மாத காலமாகியும் சாலை ஆய்வாளர் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது; இதனால் தேர்வில் வெற்றிப்பெற்ற 957 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி ஆணை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி கடந்த 06.07.2025 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (04.08.2025) 957 பேருக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்கிட உத்தரவிட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.