திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த திரு எஸ்.முனியப்பன் என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 29.8.2025 அன்று 2021ம் ஆண்டின் கோப்பு ஒன்றை எடுத்து வருமாறு அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. பழைய கோப்பு என்பதால் தேடுவதற்கு இயல்பான தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரம்யாவும் அவரது கணவர் ராஜா (எ) மரூர் ராஜாவும் ஊழியர் முனியப்பனை மிகவும் இழிவான முறையில் பேசியுள்ளனர். இதன் பிறகும் முனியப்பனை நகராட்சி ஆணையர் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆணையர் இல்லாத நிலையில் நகர்மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், உறுப்பினர் ரம்யா அவரது கணவர் ராஜா மற்றும் நகராட்சி அதிகாரிகள் நெடுமாறன், பழனி, செந்தில்குமார், ஆனந்தன், திலகவதி, பிர்லா செல்வம், நகர்மன்ற தலைவரின் உறவினர் காமராஜ் ஆகியோர் முனியப்பனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியும், மிரட்டியும் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். தவறு ஏதும் செய்யாத நிலையிலும் முனியப்பன் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் மேற்படி நபர்கள் வாயால் கோட்டால் போதாது என்று முனியப்பனை கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழ வைத்துள்ளனர். அரசு அலுவலகத்திலேயே நடைபெற்ற இந்த சாதிய வன்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சாதிய வன்கொடுமைக்கு ஆளான முனியப்பன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் (உட்கோட்டம்) அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நகர்மன்ற தலைவரின் கணவர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர், அவரது கணவர் ஆகியோரை கைது செய்து உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
நடைபெற்ற இந்த வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை (செப்டம்பர் 4, 2025) திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







