வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம், இந்திய தேர்தல் ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று கருத்துக்களை கேட்டது. அப்போது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான முறையில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ஆறுமுக நயினார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, என்பதைப் பற்றி கட்சிகளிடம் பேசி கருத்தை அறிவதற்கு மாறாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டு, அதன் பிறகு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்துவது சரியானதல்ல, என்பதுடன் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்கிற பெயரால் ஜனநாயகத்தின் முகத்தையே சிதைக்க நடைபெறும் தீய முயற்சி. இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில், திருத்தத்தை அறிவிக்கிற போதே அதன் கெடுநோக்கம் புரிகிறது. வாக்குரிமை தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1950, வாக்காளர் பதிவுச் சட்டம் – 1960 ஆகிய அனைத்திற்கும் எதிரானதாக, தற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் இருக்கிறது. பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தமிழ்நாட்டில் இவ்வளவு அவசரமாக, சிறப்பு தீவிரத் திருத்தத்தை நடை முறைப்படுத்த முயற்சிப்பது ஏன்? இந்திய குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கிற உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க முடியாது. எனவே, தற்போதைய நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மேலும், இதனை, தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்.” இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்திடம் சிபிஐ(எம்) கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்திடம் சிபிஐ(எம்) கடும் எதிர்ப்பு
posted on







