செய்தி அறிக்கை

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.450 கோடி மோசடி!பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை பெற்றுத்தரக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – சிபிஐ(எம்) கடிதம்!!

Cpim WBS copy

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனத்தில் ரூ. 450 கோடி மோசடி நடைபெற்ற வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைத்து  விசாரிக்கவும், இந்த நிதிநிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்திருந்த 6000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களின் பணத்தை பெற்றுத்தரக் கோரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.


பெறுநர்

            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

அன்புடையீர், வணக்கம்

பொருள்:-   மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனத்தில் ரூ 450 கோடி மோசடி – பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, மூத்த குடிமக்களின் பணத்தை விரைந்து மீட்டுக் கொடுக்க – உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக…

               மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனம், இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்படுவதற்கு முந்தைய காலத்திலிருந்து சுமார் 150 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இதன் தலைமை இயக்குநராக திரு. தேவநாதன் யாதவ் 2016ல் பொறுப்பேற்றதற்கு பிறகு கிட்டத்தட்ட 30,000 போலி பரிவர்த்தனைகள் மூலம் தங்க நகைக் கடன் கொடுத்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ 450 கோடிகளுக்கு மேலாக மோசடி செய்து தனது குடும்பத்தினர் பெயரில் சொத்தாக மாற்றியுள்ளார்.

               இந்நிறுவனத்தில் தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்ற ஏழை, எளிய மக்கள் தங்களது பணத்தை சேமிப்பு கணக்கில் வைத்துள்ளனர். பல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தங்களது ஓய்வூதிய பலன்களை இதில் வைப்பு நிதியாக வைத்துள்ளனர். தங்களது முதிர்வு பணத்தை கேட்டபோது தேவநாதன் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் வைப்புதொகை இழந்தவர்கள் சங்க தலைமையின்கீழ் 6000 வைப்பாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இடைவிடாத போராட்டத்திற்கு பிறகு தேவநாதன் உள்ளிட்ட ஐந்து இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, மிகக்குறைந்த அளவிளான சொத்துகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது.

               இந்த வழக்கை டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் தலைமையிலான குழு  விசாரணை செய்து வருகிறது. இவர் 144 பேர்களின் புகார்களை உள்ளடக்கிய பூர்வாங்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட 6000 புகார்தாரர்களையும் குற்றப்பத்திரிகையில் இணைக்கவில்லை. ரூ. 450 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில் வெறும் ரூ. 33 கோடி மட்டுமே குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால், விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்ற சந்தேகம் வைப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

               இப்பின்னணியில், 100 கோடி ரூபாய் அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் இல்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சொத்துக்களை விற்று வைப்பாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் எனும் நிபந்தனைகளுடன் தேவநாதன் பரோலில் வெளியில் வந்தார். ஆனால், அவர் மேற்கண்ட எந்த நிபந்தனைகளையும் நிறைவேற்றாத காரணத்தினால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

               இந்த நிதி நிறுவனத்தில் வைப்பாளர்களில் பெரும்பகுதியினர் மூத்த குடிமக்களும், ஏழை, எளிய பொதுமக்களும் ஆவர். இந்த பண மோசடியின் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மருந்துகள் வாங்கக்கூட வழியின்றி தவிக்கின்றனர், பலர் இறந்தும் விட்டனர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக இவ்வழக்கு நிலுவையிலிருந்து வருகிறது.

எனவே,

1.            பணத்தை இழந்து பரிதவிக்கும் ஏழை, எளிய மற்றும் மூத்த குடிமக்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைப்பதற்கு விரைவு நீதிமன்றம் அமைத்து இவ்வழக்கை விசாரித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

2.            6000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 144 புகார்களில் மட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட 6000 வைப்பாளார்களையும் இணைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

3.            இந்த நிதி நிறுவன கணக்குகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டுமென்ற நீதிமன்ற ஆணையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.

4.            இந்த நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நீதியும், மொத்த வைப்புத் தொகை ரூ.620 கோடி கிடைப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.

5.            பாதிக்கப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்கும் இடைக்காலமாக ஒரு தொகை கிடைக்கச் செய்து, வறிய நிலையிலிருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தங்களன்புள்ள,

/ஒப்பம்

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்