திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சோலை பழனி (வயது 77) இன்று உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் சோலை பழனி ஆசிரியராக பணியாற்றியவர். 1970களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் உருவாக்கப்பட்ட போது ஆசிரியர்களின் நலன்களுக்காக அயராது போராடியவர். பணியிடை நீக்கம், பழிவாங்கல், சிறைவாசம் அனுபவித்தவர். ஓய்வுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர், மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். குறிப்பாக, செய்யார் பகுதியில் தொழிலாளர்கள் – விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்து கட்சியை கட்டுவதில் முன்னணி தோழராக திகழ்ந்தவர். சிறந்த முற்போக்கு கவிஞர். அவரது மறைவு ஆசிரியர் இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், இயக்க தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







