செய்தி அறிக்கைமாநில செயற்குழு

ஆதரவற்றோர், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

11

ஒன்றிய பாஜக அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்படி (AAY) பயனாளிகளுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கி வரும் குடும்பத்திற்கு 35 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை என்பதை மாற்ற திட்டமிட்டிருக்கிறது. அதன்படி நபர் ஒருவருக்கு 7 கிலோ என்கிற வகையில் கொடுக்கப்படும் என்றும் ஒரு நபராக இருந்தால் 7 கிலோ, இரண்டு நபர் குடும்பத்திற்கு 14 கிலோ, நான்கு நபர் குடும்பத்திற்கு 28 கிலோ, 5 நபருக்கு மேல் இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு 35 கிலோ மட்டுமே என்று மாற்ற திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி அந்தியோதயா அன்னயோஜனாவிற்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும் 99 லட்சம் டன் என்பது குறைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  நபர் வாரி என்றால் 5 பேருக்கு அதிகமாக இருந்தால் அதை அதிகரித்து தர வேண்டும். ஆனால், அதற்கு மாறாக உச்சவரம்பு 35 கிலோ என்று வைத்துவிட்டு குறைப்பது என்பது மிகவும் வறுமையிலும், ஆதரவற்ற நிலையிலும் இருக்கக் கூடிய தனி நபர்கள் அல்லது வறுமையில் உழலும் குடும்பங்களை வெகுவாக பாதிக்கும். இதன் மூலமாக தமிழகத்தில் மட்டும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டை வைத்திருக்கும் 18,64,000 குடும்பங்களும் சுமார் 70 லட்சம் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்று அனைத்து மாநிலங்களுமே பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. 2011-12க்கு பிறகு தனிநபர் உணவு நுகர்வு குறித்த கணக்கீடுகள் நடத்தப்படவில்லை. விலைவாசி நுகர்வு குறியீட்டு எண்ணை மாற்றி அமைப்பதற்காக 2023-24 ஆம் ஆண்டில் தான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதே இந்த கணக்கெடுப்பு தொழிலாளர்களையும்  அரசிடமிருந்து இலவசமாக உணவு பெறும் குடும்பங்களையும் பாதிக்கும் என்று சொல்லப்பட்டது இப்போது அது உண்மையாகியிருக்கிறது.

இந்தியாவில் பன்முக வறுமை (Multidimensional Poverty) விகிதம் 16.96 சதவிகிதம். இந்நிலையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் அமலுக்கு வருமானால் நிச்சயமாக பல மாநிலங்களில் பன்முக வறுமை நிலை விகிதம் அதிகரிக்கக் கூடும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபத்தில் உச்சவரம்பு வைக்காத பாஜக அரசு ஏழை, எளிய ஆதரவற்ற மக்களின் சாப்பாட்டு தட்டில் இருக்கும் உணவுக்கு உச்சவரம்பு விதிப்பது கொடூரமான செயலாகும். எனவே, ஒன்றிய பாஜக அரசு உணவுப் பாதுகாப்பு திருத்தச் சட்ட வரைவில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்குவது தொடர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்