பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் தேடல் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைக்கும் நபரை இணைக்கலாமென்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது, இது ஏற்கத்தக்க முடிவல்ல. இது நீண்ட காலமாக உயர்கல்வியில் ஒன்றிய அரசு அத்துமீறி தலையிடுவதற்கும், மாநில அரசின் அதிகாரங்களை புறந்தள்ளி ஆளுநர் செயல்பட முனைவதற்கும் எதிரான முயற்சிகளுக்கு பின்னடைவாக அமைந்து விடும்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து எடுத்து தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரால் நீண்ட காலம் முடக்கி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனாலும், பொது நல வழக்கு ஒன்றின் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு அது ஆளானது. பிறகு தடையை உச்சநீதிமன்றம் நீக்கினாலும் உயர் நீதிமன்ற வழக்கு முடிகிற வரை துணை வேந்தர் நியமனங்களை மேற்கொள்வதில்லை என்ற உறுதி மொழியை தமிழ்நாடு அரசு தந்திருந்தது. ஆகையால் அந்த சட்டமும் அமலாகாமல், பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் இல்லாமலும் தொடரும் நிலை உள்ளது. இதனால் உயர்கல்வி பெரும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறதென்பது உண்மை. இதற்கான சட்டத் தீர்வு உடனடியாக காணப்பட வேண்டுமென்றாலும், அத்தகைய தீர்வு ஒன்றிய அரசின் அத்து மீறிய தலையீட்டுக்கு வழி வகுப்பதாகவோ, ஆளுநர் மாநில அரசின் உரிமைகளைப் புறந்தள்ள வாய்ப்பு தருவதாகவோ, கல்வியில் சித்தாந்த ரீதியில் ஊடுருவ முனையும் சங்பரிவார முயற்சிகளை அனுமதிப்பதாகவோ அமைந்து விடக் கூடாது. பல்கலைக் கழக மானியக் குழுவின் உறுப்பினரை தேடல் குழுவில் இணைக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம், சங் பரிவார ஆட்களின் கைகளில் உயர் கல்வியை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டதே ஆகும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றியுள்ள முடிவுக்கு எதிராக கருத்து கூறும் போது, கல்வி முழுமையாக மாநில அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் துணை வேந்தர் நியமனப் பிரச்சினையில் மாநில அரசின் நிலைபாடு அமைச்சரின் மாநில பட்டியலில் கல்வி என்னும் நிலைபாட்டை நீர்த்துப் போகச் செய்வதாகும்.
பல்கலைக் கழக மானியக் குழுவின் பணி வரம்பு, கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதாகவே இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களில் உரிமைகளில் தலையிடுவதாக இருக்க முடியாது. ஆகவே இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்க மறுக்கிற ஒன்றிய அரசாங்கம் பின்புற வாசல் வழியாக தனது பிற்போக்குத்தனங்களை அமல்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை உறுதியாக எதிர்கொள்ள வேண்டுமென்றும், சட்டப் போராட்டத்தில் ஏற்கெனவே அரசு எடுத்துள்ள அதிகாரப் பூர்வ நிலைப்பாட்டை தொடர வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







