இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு தமக்கிருந்த சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கவலை தெரிவித்துள்ளது.
பிற மதங்களுக்கு மாறியோருக்குப் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை மறுத்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்போடு இணைத்துப் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பும் அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதிக் கொள்கைகளுக்கு ஒரு பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது.
“சமூக நீதியை மதம் தீர்மானிக்க முடியாது”
சமூக நீதி என்பது மத அடையாளத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல; வரலாற்று ரீதியான ஒடுக்குமுறை, சாதிய பாகுபாடு, கல்வி–வேலைவாய்ப்பு–பொருளாதார வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஆகிய எதார்த்தங்களின் அடிப்படையிலேயே அது தீர்மானிக்கப்படவேண்டும்.
மதம் மாறுவதால் சாதி அடிப்படையிலான பாகுபாடோ, அதனுடன் தொடர்புடைய சமூக–பொருளாதாரப் பின்னடைவுகளோ தானாக மறைந்துவிடுவதில்லை. மதம் கடந்தும் சாதிய ஒடுக்குமுறை நீடிக்கும் நிலையில், மதம் மாறியதை மட்டுமே காரணம் காட்டி இடஒதுக்கீட்டுச் சலுகையை மறுப்பது, சமத்துவம் மற்றும் சமூக நீதி என்னும் அரசமைப்புக் கொள்கைகளையே குலைக்கிறது. மதம் மாறியவர்கள், மாறுவதற்கு முன்பு தங்களுக்குக் கிடைத்த சலுகைகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது.
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சரிசெய்ய வேண்டும்
இந்தத் தீர்ப்புகளால் ஏற்படும் பாதகமான விளைவுகளை, பொருத்தமான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் மூலம் களைய வேண்டும்; மத அடையாளத்தைப்பொருட்படுத்தாமல், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, மதம் மாறியோருக்கும் இடஒதுக்கீட்டுச் சலுகையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.
இடஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படட்டும்
இந்தச் சலுகை விரிவாக்கப்படுவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. எனவே, நீதித்துறை விதித்துள்ள இடஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பை நீக்கும் வகையிலும் பொருத்தமான அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > அரசியல் தமைமைக்குழு > மதம் மாறியோருக்கு இடஒதுக்கீடு மறுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதியை மதம் தீர்மானிக்க முடியாது; அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சரிசெய்க! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல்!
மதம் மாறியோருக்கு இடஒதுக்கீடு மறுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதியை மதம் தீர்மானிக்க முடியாது; அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சரிசெய்க! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல்!
posted on







