தீர்மானங்கள்மாநில செயற்குழு

சிபிஐ (எம்) மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

Cropped Hammer And Sickle.png

15.06.2022

                இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

தீர்மானம் 1 :-

மேகேதாட்டு அணை தொடர்பாக காவிரி ஆணையத்தில் விவாதிப்பதற்கு சிபிஐ(எம்) கண்டனம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் ஜூன் 17 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்கிற அம்சம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதை எதிர்த்து, தமிழ்நாடு அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில், மேகேதாட்டு தொடர்பான விவாதத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அத்துமீறிய நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பாஜக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத வேண்டியுள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான தண்ணீர் வரத்தை பாதிக்கும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரும் கூட மாதவாரியாக கிடைப்பதை தடை செய்வதாகவே இந்த அணை கட்டும் நடவடிக்கை அமைந்திடும். எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டிற்கு காவிரியின் மீதான பாசன உரிமையை நிலைநாட்டும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதோடு, தொடர்ந்து விழிப்புடன் செயல்படுமாறு தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 :-

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

வன விலங்கு காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிகப்படுத்த உச்சநீதிமன்றம் ஜூன் 3 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிக்குள் உள்ள கட்டமைப்புகள் குறித்து மூன்று மாத காலத்திறகுள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், புதிதாக நிரந்தரமான கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் புதிதாக ஒரு கிலோ மீட்டர் விரிவுப்படுத்தப்படுவதால் ஏற்கனவே அங்கு வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை கூட விரிவுப்படுத்தி கட்டிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். பட்டா நிலமாக இருந்தாலும் புதிய கட்டுமானங்களுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட யானைகள் காப்பகம், புலிகள் காப்பகம், வன விலங்கு காப்பகங்களுக்குட்பட்ட மாவட்ட மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை புதிதாக விரிவுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் ஏற்கனவே வசிக்கும் மக்களுக்கு விதிவிலக்கு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

(கே.பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu