செய்தி அறிக்கை

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

Kb Statement New

அகில இந்திய தலைமையின் ஆதரவோடு தொடரும் பாஜகவின் அடாவடி அரசியலை, தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, அரசியலாக்கிட பாஜகவினர் முயற்சித்தார்கள். அது சாத்தியமாகாத அதிருப்தியில், நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீசி வன்முறையைத் தூண்டும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. குற்றமிழைத்தோர் அனைவருமே பாஜகவினர் என்பதும், திட்டமிட்டே வன்முறையில் ஈடுபட்டுள்ளதும் வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனாலும், பாஜக தலைமை திசைதிருப்பிக் கொண்டுள்ளது.


இது மட்டும் தனித்த சம்பவமாக இல்லை. கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உண்மைக்கு மாறான தகவலை தொடர்ந்து கூறி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள பாரத மாதா ஆலயத்திற்கு சென்ற பாஜக நிர்வாகிகள், பூட்டியிருந்த கதவை உடைத்து திறந்துள்ளனர். பாஜகவினரின் இத்தகைய அடாவடி முயற்சி கடும் கண்டனத்திற்குள்ளானது; காவல்துறையும் வழக்கு பதிவு செய்தது. ஆனால், பாஜகவின் தலைமையோ இதை மென்மையான வார்த்தைகளோடு ‘கதவு சேதமாகவில்லை’ என்று வியாக்கியானம் செய்தது.


திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரான பாஸ்கர், பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்டுள்ளார். பாஜக தலைமையில் இருந்து இதற்கும் எந்த விளக்கமோ கண்டனமோ வரவில்லை. பாஜகவின் மாவட்ட தலைவரே இத்தகைய குற்றச்செயல்களில் தயக்கமின்றி ஈடுபட்டுள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. ‘பெரியார் சிலையை உடைப்போம்’ என்று வன்முறை உருவாக்கும் விதமாக பேசுவது, வாகனங்களை உடைத்து சேதமாக்குவது, கோயில் வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று ஆங்காங்கே பல்வேறு அடாவடிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.


கடந்த 2020 ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில், தனிப்பட்ட விரோதத்தில் நடந்த கொலையை, மத அடிப்படையில் திசை திருப்பும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டனர். காவல்துறையின் முறையான விசாரணைக்கு பின், பாஜக சதிச்செயல் அம்பலமானது. திருப்பூரில் பாஜக நிர்வாகி ஒருவரின் தற்கொலையை கொலையாக ஜோடித்து ‘பந்த்’ போராட்டம் வரை நடத்தினார்கள். தொடரும் இவர்களின் அடாவடி அரசியலுக்கு இதுவெல்லாம் எடுத்துக்காட்டுகள் ஆகும்.


இத்தகைய பாஜகவின் அடாவடி அரசியலை மக்களும், ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரசு உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது

– கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் சிபிஐ (எம்)