ஆவணங்கள்தீர்மானங்கள்மத்தியக் குழு

அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் மீதான அறிக்கை (ஜூலை 30-31, 2022 இல் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)

Cc Doc

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மத்தியக்குழு
அரசியல் வளர்ச்சிப் போக்குகளின் மீதான அறிக்கை
(ஜூலை 30-31, 2022 இல் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது)

Download PDF: https://cpimtn.org/wp-content/uploads/2022/09/Polar-July-30-31.pdf

சர்வதேச வளர்ச்சிப் போக்குகள்

உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துவருகிறது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்வதற்கும் நவீன தாராளமயம் எந்தத் தீர்வையும் வழங்க இயலாத வகையில் உள்ளதானது அதன் திவால் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு மாறாக,  இந்த பலவீனமான பொருளாதார செயல்திறன் நிலைமையிலும் கூட, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் லாபத்தை அதிகரிக்கும் பாதையிலேயே தொடர்ந்து செல்வதற்கே நவீன தாராளமயம் அழுத்தம் கொடுக்கிறது. உலகப் பணக்காரர்கள், தொடர்ந்து மேலும் அதிகமான செல்வத்தைக் குவித்து வருகின்றனர். மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல் மேலும் அதிகரித்துள்ளதையே இது பிரதிபலிக்கிறது. இந்தப் பொருளாதாரச் சரிவுடன் சேர்ந்து பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மேலும் கடுமையான தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மேலும் மோசமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்படுதல் என வரிசை கட்டி வருகின்றன. 

உலகப் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரம் தொற்று நோய்க்கு முந்தைய நிலைக்கு மீள்வதற்கு மாறாக,  எதிர்மறை வளர்ச்சியைக் காண்கிறது. ஜூன், 2022இன் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கை, ஜனவரி – டிசம்பர்,  2022க்கான உலகளாவிய வளர்ச்சிக் குறியீட்டை முந்தைய 4.1 சதவிகிதத்திலிருந்து 2.9 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. 

உலகப் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்தால் ஒரு தீவிரமான தேக்கநிலை ஏற்படும். அதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மேலும் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது. 

வளர்ந்த நாடுகளின் பொருளாதார மந்தநிலை கூர்மையடைந்து, 2021இல் 5.1 சதவிகிதத்திலிருந்து 2022இல் 2.6 சதவிகிதமாகவும், 2023இல் 2.2 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் மற்றும் சந்தையின் வளர்ச்சிவிகிதம் 2021இல் 6.6 சதவிகிதத்திலிருந்து 2022இல் 3.4 சதவிகிதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் வருட சராசரியான 4.8 சதவிகிதத்தைவிட இது மிகக் குறைவாகும். இந்த அறிக்கையின்படி, முந்தைய கணிப்பிலிருந்து கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வளரும் பொருளாதாரங்களிலும், 80 சதவிகிதம் குறைந்த வருமானம் கொண்ட ஏழை நாடுகளிலும் வளர்ச்சிவிகிதம் குறையும் என்று திருத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச நிதியமும் (ஐ.எம்.எஃப்.) 2023க்கான தன்னுடைய கணிப்பில் உலகளாவிய மந்தநிலை ஏற்படும் என தீவிர எச்சரிக்கை விடுத்து வளர்ச்சி விகிதங்களைக் குறைத்துள்ளது. 

உக்ரைன் போர்

இருதரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்த ரஷ்ய-உக்ரைன் போர் தற்போது ஐந்தாவது மாதமாக நீடித்து வருகிறது. ரஷ்யத் துருப்புகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் படைகளுடன் சேர்ந்து மேற்கு உக்ரைனில் உள்ள டான்பாஸின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. 

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை மேலும் தூண்டியுள்ளது. உலக விநியோக சங்கிலித்தொடரில் சீர்குலைவு ஏற்பட்டது. இதன் காரணமாகக் கடுமையான உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு தீவிர பணவீக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது ஐரோப்பாவாகும். 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ் நேட்டோ, உக்ரேனியப் படைகளுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் போர்த் தடவாளங்களை அதிக அளவில் வழங்கிவருகிறது.  23வது காங்கிரஸின் மதிப்பீட்டின்படி, அமெரிக்கா/நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போரின் ஆடுகளமாக உக்ரைன் மாறியுள்ளது. 

மேற்கு ஆசியாவில் மாற்றப்படும் சமன்பாடுகள்

உக்ரைன் போர், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவின் விளாடிமீர் புடின் இருவரும் தனித்தனியாக மேற்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளுக்குச் சென்றனர். ஜோ பைடனின் நான்கு நாள் பயணம் இந்தப் பிராந்தியத்தில் வாஷிங்டனின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஈரானைக் கட்டுப்படுத்துவது, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்க உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வற்புறுத்தியது உள்ளிட்டு அவர் வெளிப்படையாக அறிவித்த எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. சவுதி அரேபியா, அமெரிக்கா கோரிய எரிபொருள் ஒப்பந்தத்தை நிராகரித்தது. 

அதேசமயம், சவுதி அரேபியாவுடனான ரஷ்யாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் புடின் வெற்றி பெற்றார். எண்ணெய்வள நாடுகளின் அமைப்பான ஒபெக் பிளஸ்-இன் பிரிக்க முடியாத அங்கத்தினராக ரஷ்யாவை சவுதி அரேபியா வகைப்படுத்தியது.  மேலும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய் அளவை இரட்டிப்பாக்கியது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை மீறி, சவுதி அரேபியா, ஏப்ரல் – ஜூன் 2022க்கு இடையில் ஏறக்குறைய 6.5 லட்சம் டன் எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது.

புடினின் ஈரான் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவக் கூட்டணியை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படையாக ஆதரித்தது. ரஷ்யாவும் ஈரானும் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அமெரிக்க டாலரை உலக நாணயமாக உபயோகிப்பதை நிறுத்துவதே எங்கள் முன்னுரிமை என இரு நாடுகளும் பகிரங்கமாக அறிவித்தன. ரஷ்ய – ஈரான் ராணுவக் கூட்டணி மூன்று அம்சங்களில் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை 1) பிராந்திய பிரச்சனைகள் 2) பொருளாதார ஒத்துழைப்பு 3) பாதுகாப்புக் கூட்டணி.

ஆயினும், புடினின் துருக்கி பயணம் மற்றும் எர்டோகனுடனான அவரது சந்திப்பு ஒரு கலவையான விளைவுகளை ஏற்படுத்தியது. கருங்கடல் வழியான போக்குவரத்தில் சில முன்னேற்றங்களை எட்டிய போதும், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சிரியாவின் வடக்குப் பகுதியில் ராணுவத் தலையீட்டை துருக்கி வற்புறுத்தியதை, ரஷ்யா ஈரான் ஆகிய இரு நாடுகளும் எதிர்த்தன. 

சட்டவிரோத பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு

மேற்கு ஆசியப் பயணத்திற்கு முன்னதாக ஜனாதிபதி பைடன் இஸ்ரேலுக்கு வருகை புரிந்தார். அமெரிக்கா-இஸ்ரேலுக்கு இடையிலான வலுவான நட்புறவை, மேற்கு ஆசியாவிற்குக் காட்டுவதற்கான முயற்சியே இந்த வருகை. 

ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் ஆறு இடங்களில், புதிய சட்டவிரோதக் குடியிருப்புகளில் இஸ்ரேலிய இராணுவ மற்றும் காவல் துறையின் பாதுகாப்பின் கீழ் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அதிகாரிகளின் ஆதரவுடன், பாலஸ்தீனிய நிலங்களில் சட்டவிரோதக் குடியேற்றங்களின் விரிவாக்கம் தொடர்கிறது. பாலஸ்தீன தலைநகர் ரமல்லாவைச் சுற்றியும், ஹீப்ரான் மற்றும் சால்ஃபிட்டிலுள்ள புராதன வரலாற்றுக் குடியேற்றங்களைச் சுற்றியும் தங்களது குடியிருப்புகளை அமைப்பதே அவர்களது தற்போதைய முயற்சியாகும். பாலஸ்தீனியர்களின் நடமாட்டத்தைத் தடைசெய்யும் புதிய சோதனைச் சாவடிகளை இஸ்ரேல் அமைத்து வருகிறது.

மேற்காசிய நாற்கரப் பாதுகாப்பு (QUAD)

அதிகாரப்பூர்வமாக ஐ2யூ2 (I2U2) என அழைக்கப்படும் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணி, வெளிப்பார்வைக்கு, பொருளாதார ஒத்துழைப்பு வணிகம் மற்றும் முதலீடுகளை, தத்தமது பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பரஸ்பரம் அடையாளம் காணப்பட்ட துறைகளில் கூட்டு முதலீட்டை நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளில் இது நாட்டம் செலுத்துகிறது. மேற்காசிய நாற்கரப் பாதுகாப்பு எனக் குறிப்பிடப்படும் இந்தக் கூட்டணியின் அரசியல் முக்கியத்துவம், மேற்கு ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளை ஊக்குவிப்பதாகும். ஆயினும் அமெரிக்காவைத் தவிர, இஸ்ரேல், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மற்ற மூன்று நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை. 

கொலம்பியா ஜனாதிபதி தேர்தல்

கொலம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இடதுசாரி கெரில்லா வீரரான குஸ்டவோ பெட்ரோவின் வெற்றி, லத்தீன் அமெரிக்காவில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. பாரம்பரியமாக, அமெரிக்க சார்பு வலதுசாரிக் கட்சிகளால் ஆளப்பட்ட நாட்டை வழிநடத்தும், முதல் இடதுசாரி ஜனாதிபதியாக பெட்ரோ இருப்பார். பெட்ரோவிற்கு முன் எந்த இடதுசாரி வேட்பாளரும், கொலம்பியாவில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியதில்லை. 

விவசாயம் மற்றும் தொழில் துறையை மீள்கட்டமைப்பு செய்தல், சமூக நலத் திட்டங்களை விரிவாக்குதல், பணக்காரர்களுக்கு வரி விதித்தல்,  பொருளாதாரத்தில் புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் கைவிடுதல் ஆகியவற்றுக்காகபெட்ரோ பிரச்சாரம் செய்தார்.

கொலம்பியாவில் இடதுசாரிகள் பெற்ற இந்த வெற்றியானது, லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் வளர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. சிலி, வெனிசுலா, பொலிவியா, பெரு மற்றும் ஹோண்டுராஸைத் தொடர்ந்து இந்த இடது வெற்றி அமைந்துள்ளது. 

பிரான்ஸ் தேர்தல்கள்

2022க்கான பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்கள், ஏப்ரல் 10 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்றன. முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறவில்லை. எனவே இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் இமானுவேல் மேக்ரோன், மரி லீ பென்னைத் தோற்கடித்து மீண்டும் பிரான்ஸின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடதுசாரி வேட்பாளர் மெலென்சோன் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 142 ஆக (32.64 சதவிகிதம்) இருமடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. மொத்தம் 577 இடங்களில் 246 இடங்களை மட்டுமே பெற்ற இமானுவேல் மேக்ரோனுக்கு   பெரும்பான்மை கிடைக்கவில்லை. மே மாதத்தில் உருவாக்கப்பட்ட NUPES என அழைக்கப்படும் கூட்டணியில், வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்தன. அவர்களது உடன்படிக்கையின்படி, நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் பொதுவான கொள்கைகளில் ஒன்றிணைந்து செயலாற்றும் அதேநேரத்தில் – மெலென்சோன் ஏப்ரலில் ஜனாதிபதி தேர்தலில் தோற்றதை அடிப்படையாகக் கொண்டது – தங்கள் கொள்கைகளில் வேறுபடும் இடங்களில் சுதந்திரமாக செயலாற்றும் உரிமையும் கொண்டுள்ளனர்.

மரி லீ பென்னின் தீவிர வலதுசாரி தேசியக் கூட்டணி 89 இடங்களைக் கைப்பற்றியது (17.30 சதவிகிதம்). இது அக்கட்சியின் அதற்கு முன்பிருந்த 8 இடங்களைவிட பத்து மடங்கிற்கு மேல் அதிகமாகும். எனவே, மிகப்பெரிய தனி எதிர்க்கட்சியாக அது உருவெடுத்துள்ளது. 

ஐரோப்பாவில் விவசாயிகளின் பெரும் போராட்டங்கள்

ஐரோப்பாவின் பல நாடுகளில் விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாற்றியமைக்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக, முதன் முதலில் டச்சு நாட்டு விவசாயிகள் தெருவில் இறங்கினர். கால்நடைகளால் உருவாகும் நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் அமோனியா உமிழ்வுகளைக் குறைப்பதற்கான இலக்கை, அந்த விதிகள் நிர்ணயித்தன. பசுமைத் தொழில்நுட்பங்களுக்கு மாறுவது கட்டுப்படியாகாத நிலையில், அரசின் மானியம் இல்லாமல் பலர் விவசாயத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சம் நிலவியது. அதைத் தொடர்ந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போலந்து நாட்டைச் சார்ந்த விவசாயிகளும் தெருக்களில் இறங்கி பணவீக்கம், மலிவு விலை இறக்குமதிகள், அதிக வட்டிவிகிதங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எனப் போராட்டத்தை விரிவுபடுத்தினர்.

உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள்

ஜூன் மாதம் 3 நாள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள ரயில்வே தொழிலாளர் சங்கம் மீண்டும் ஜூலை 27 அன்று பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச் சூழல் தொடர்பாக வேலை நிறுத்தம் செய்தது. இங்கிலாந்தில், அனைத்துத் தொழிற்சங்கங்களும் வாழ்க்கைச் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளதை எதிர்த்தும், பணிச்சூழல் மேம்பாடு மற்றும் ஊதிய உயர்வு கோரியும், வேலைநிறுத்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும், இதேபோன்ற போராட்டங்களை உழைக்கும் மக்களும் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளனர். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கோரி, 70,000க்கும் மேற்பட்ட பெல்ஜியத் தொழிலாளர்கள், பிரஸ்ஸல்ஸில் ஊர்வலம் நடத்தினர்.

இலங்கை

ராஜபக்ச ஆட்சியின் கீழ் இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் எழுச்சி; ஜனாதிபதி மாளிகையை மக்கள் கையகப்படுத்தியது; பிரதமரின் வீடு எரிப்பு ஆகியவை, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச முதலில் மாலத்தீவுக்கும் பின்னர் குறுகிய கால விசாவில் சிங்கப்பூருக்கும் தப்பிச்செல்லும் நிலைக்கு வழிவகுத்தன. ஜனாதிபதியின் தனிப்பட்ட, அதிகாரப்பூர்வ சலுகைகளைப் பயன்படுத்தி, ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அவர், பின்னர் பதவி விலகினார். 

அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தனக்கு பதிலாக ஜனாதிபதியாக நியமித்துவிட்டு அவர் தப்பி ஓடினார். நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ரணில், “பாசிஸ்டுகள் அரசாங்கத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்” என்று கூறி, இராணுவத்தையும் காவல்துறையையும் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து, கொழும்பு உட்பட மேற்கு மாகாணம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2022, ஜூலை 20 அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார்.  இலங்கையில், இடைக்கால ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர். வெளியேற்றப்பட்ட கோத்தபய ராஜபக்ச ஆட்சியின் வேட்பாளராகவே பரவலாகக் கருதப்பட்ட ரணில், மும்முனைப் போட்டியில் மொத்தமுள்ள 225 வாக்குகளில் 134 வாக்குகளைப் பெற்றார். அவர் முன்னாள் ஆளுங்கட்சி உறுப்பினரும், தற்போது சுயேச்சை வேட்பாளருமான டல்லஸ் அழகப்பெருமா (82 வாக்குகள்), ஜே.வி.பி.யின் அன்னகுமார திஸ்ஸநாயக்க (3 வாக்குகள்) ஆகியோருக்கு எதிராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரமதாசா, டல்லஸுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து போட்டியிலிருந்து விலகினார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்களின் கட்சியான சிறிலங்கா புதுஜன பெரமுனா அல்லது மக்கள் முன்னணி ஆதிக்கம் செலுத்துகிறது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க, கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். முக்கியமான சவால்களில் முதன்மையானது அவரது பதவிக்கு எதிரானது. அவர் பிரதமர் பதவியிலிருந்தும் அதைத் தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதி பதவியிலிருந்தும் வெளியேற, சமீப கால மக்களின் எழுச்சி அழுத்தமாகக் கோரியது. தற்போதைய நெருக்கடி ஏற்பட்டதற்கு முக்கிய காரணமானவராக அவர் பார்க்கப்படுகிறார். மக்களின் போராட்டங்களுக்கு எதிரான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

அவர் அதிபராகப் பதவி ஏற்றதற்கு எதிரான போராட்டங்களும் தொடரும் வாய்ப்புகள் உள்ளன. இலங்கையின் பொருளாதாரம், சுமார் 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன், எரிபொருள் தட்டுப்பாடு, அந்நிய செலாவணி கையிருப்புக் குறைவு மற்றும் சுற்றுலாத்துறையின் கடுமையான சரிவு போன்றவற்றால் நெருக்கடிக்கு உள்ளாகி, தடுமாறி வருகிறது. ஜனாதிபதி, சர்வதேச நிதியத்தை ஒரு பெரிய பெயில் – அவுட்டிற்கு ஒப்புக் கொள்ள வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், மக்கள் மீது அதிக சுமைகளை சுமத்தும் கடுமையான நிபந்தனைகளும் அதன் கூடவே வரும். 

மியான்மர்

மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு சமீபத்தில் நான்கு அரசியல் கைதிகளை தூக்கிலிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அரசு எந்தவொரு அரசியல் நல்லிணக்கத்திற்கும் தயாராக இல்லை என்ற தெளிவான செய்தியை உலகிற்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளது. இது, குறைந்தபட்சம் ஜனநாயகம் திரும்பும் என்ற மாயையைத் தற்போதைக்குக் குலைத்துள்ளது. பிப்ரவரி 2021இல் ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்த ராணுவ ஆட்சிக்குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்தவுடன், ஆங் சான் சூ கியை கைது செய்தது. ரகசிய விசாரணைகள் மூலம் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை சுமத்திய ராணுவம் ஆறு பொய்யான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்து 11 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. கைது செய்யப்பட்ட 14,000க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளில் 11,000 பேர் இன்னும் சிறைகளில் உள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆர்வலர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு பத்து லட்சத்திற்கும் மேலானோர் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். எனினும், இதற்கான எதிர்ப்பு, ஒரு தலைமறைவு வன்முறை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தன்னுடைய கெரில்லா மற்றும் ஸ்னைப்பர் தாக்குதல்கள் மூலம் ராணுவத்திற்கு குறிப்பிடத்தகுந்த இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பு இயக்கம் ஒரு மாற்று தேசியக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளதாகவும், அதன் மூலம் நாட்டில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறிக் கொள்கிறது. கடுமையான நெருக்கடியுடன் கூடிய ஒரு காலகட்டமும், அதிக மனித உயிர்களைக் காவு கோரும் நீண்ட நெடிய போராட்டமும் தொடரும் எனத் தெரிகிறது. இந்த நிலைமை, மக்கள் அகதிகளாகச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, அனைத்து அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மியான்மரின் பொருளாதாரம் 18 சதவிகிதமாக, கடுமையாகச் சுருங்கியுள்ளது. இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019இன் உற்பத்தியைவிட 13 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய நிலைமை

நமது 23வது கட்சி காங்கிரஸ் நடந்து ஏறக்குறைய நான்கு மாதங்களாகின்றன. அதன் அரசியல் தீர்மானத்தில் நாம் கணித்திருந்த முக்கியப் போக்குகள், நம்மை உறையச்செய்யும் வகையில் உண்மையாகியுள்ளன. பாசிச ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் கொடூரமான நோக்கங்கள் அச்சுறுத்தும் வகையில் வெளிப்பட்டு வருகின்றன. வெறித்தனமாகத் தொடரும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள், வலுப்படும் வகுப்புவாத – கார்ப்பரேட் கூட்டணிகள், தேசிய சொத்துகளை சூறையாடுதல், குரோனி முதலாளித்துவத்தை ஊக்குவித்தல், அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்குதல் போன்ற பல்முனைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இவை இந்தியாவின் பொருளாதார அடித்தளத்தை அழித்து, மக்கள் மீது அதிக சுமைகளை சுமத்துகின்றன. 

எதேச்சாதிகாரத்தை முழு மூச்சில் திணித்தல், அரசியல் எதிரிகளை அழித்தொழிக்க அமலாக்கத்துறை / குற்றப் புலனாய்வு அமைப்பு போன்ற மத்திய அமைப்புகளின் துஷ்பிரயோகம், கொடூரமான தடுப்புக்காவல் சட்டங்களைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்கள் ஆகியவை தீவிரமடைந்து வருகின்றன.

இந்தக் காலகட்டத்தில், மக்களின் பல்வேறு தரப்பினரிடையே மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புகள் பெருகிவரும் போக்கையும் கட்சி காங்கிரஸ் அவதானித்துள்ளது. 

பொருளாதார நெருக்கடி

மோடி அரசின் பொருளாதார மீட்சி பற்றிய அதிரடிப் பிரச்சாரங்களைப் பொய்யாக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரம் ஆழ்ந்த மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு வெறும் 0.8 சதவிகிதம் மட்டுமே. 

உலக வங்கி, ஜனவரி மாதத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் குறியீட்டை 8.7 சதவிகிதமாக கணித்திருந்தது. அதை ஜூன் மாதத்தில் 7.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இத்தகைய மிக அதிக அளவான 1.2 சதவிகிதக் குறைப்புக்கு, அதிகரித்து வரும் பணவீக்கமும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளுமே காரணமாகும். 

ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் நடந்த தன் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், 2021-22ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதங்களைக் காலாண்டு வாரியாக வெளியிட்டுள்ளது. அதில், முதல் காலாண்டில் 16.2 சதம், இரண்டாவது காலாண்டில் 6.2 சதம், மூன்றாவது காலாண்டு 4.1 சதம் மற்றும் நான்காவது காலாண்டில் 4 சதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  முதல் காலாண்டுக்கும் நான்காவது காலாண்டுக்கும் இடையே வளர்ச்சிவிகிதம் நான்கு மடங்குக்கு மேல் குறைந்துள்ளது. 

இதனோடு கூடவே மொத்த மற்றும் சில்லறை வணிகத்தில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

வெளிநாட்டு நிதி வெளியேற்றம்

இந்தியாவில் முன்னெப்போதும் கண்டிராத அளவில் நடப்புக் கணக்கிலும் பற்றாக்குறை (105 பில்லியன் டாலர், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம்) நிலவுகிறது. 2021 செப்டம்பர் முதல் அன்னியச் செலாவணிக் கையிருப்பு 70 பில்லியன் டாலர் அல்லது 11 சதவிகித அளவிற்குக் குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், 2.24 லட்சம் கோடிகளை வெளியே எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்வதைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி 16.5 பில்லியன் டாலர் அளவிற்குக் கையிருப்பிலிருந்து வெளியிட்ட போதிலும், 1 டாலர் = ரூ.80 என வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.

இந்தப் பொருளாதார மந்தநிலை பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மேலும் மேலும் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

வேலையின்மை

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான CMIE-ன் அறிக்கைப்படி, ஜனவரி – ஏப்ரல், 2022 காலகட்டத்தில் 20 – 24 வயது இளைஞர்களில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாக (42%) இருந்தது. 25 – 29 வயதிற்கு உட்பட்டவர்களில் இது 60 லட்சத்திற்கும் அதிகமாகும் (12.72%). தீவிரமாக வேலை தேடும் 15 வயதுக்கு மேற்பட்ட மொத்தம் 3 கோடி வேலையில்லா இளைஞர்களில் 20 – 29 வயதினர் மொத்தம் 80 சதவிகிதம் பேர் ஆவர்.  

15 – 64 வயதிலான இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 67% அல்லது சுமார் 90 கோடி பேர். இவர்களில் 61.2% பேர் வேலை எதுவும் இல்லாத காரணத்தால் வேலை தேடுவதையே   நிறுத்திவிட்டனர். தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு 38.8% குறைந்துள்ளது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது கிராமப்புற பெண்கள்தான். அவர்களின் வேலைப் பங்கேற்பு விகிதம் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை றுதித் திட்டம்

ஏற்கெனவே கிராமப்புறங்களில் கடுமையான துயரங்களோடு வேலையின்மையும் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு நிதியை அளிக்காதது கொடூரமான வேலை மறுப்பிற்கும், சரியான நேரத்தில் ஊதியம் வழங்காமல் இருப்பதற்கும் வழிவகுத்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2022 ஜூலையில், இத்திட்டத்தின்கீழ் வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை 7.26 கோடியாகும். இதில் 20%, அதாவது 1.47 கோடி வேலை தேடுபவர்களுக்கு, வேலை மறுக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த நிதி வெட்டு நடவடிக்கையானது, முன்னரே கொடுக்கப்படாமல் இருந்த ரூ.1,498 கோடி ஊதிய பாக்கி தீர்க்கப்படாமல் இருக்கவே வழிவகுத்தது.  இதில் ரூ. 862.57 கோடி 2021- 2022 வரையிலான ஊதியமாகும்.  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சட்டத்தின்படி தேவைக்கேற்ப வேலை உத்தரவாதம் மற்றும் அனைத்து ஊதியங்களும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். 

இத்தகைய உச்சபட்ச வேலையின்மை மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் கடுமையான வீழ்ச்சி நிலவும் சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கோடிக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஒரே ஆதாரமாக உள்ளது. இதற்கான ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும்.

உச்சத்தைத் தொட்ட பணவீக்கம்

வருடாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீடு மே 2022இல், 15.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 1998க்குப் பிறகான மிக உயர்ந்த அளவாகும். உணவுப் பொருட்களின் விலை 14.4 சதவிகிதமும், வாழ்வாதாரப் பொருட்களின் விலை 19.71 சதவிகிதமும், எரிபொருட்கள் விலை 40.63 சதவிகிதமும், உற்பத்திப் பொருட்களின் விலை 10.11 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. உயர்வு

இவை அனைத்திற்கும் மேலாக, அரிசி, கோதுமை, பால் மற்றும் அனைத்து அன்றாடப் பயன்பாட்டுக்குரிய அத்தியாவசியப் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டால் அவற்றிற்கு ஜி.எஸ்.டி. உயர்வு என்ற சமீபத்திய அறிவிப்பு சுமைகளின் மேல் வைக்கப்பட்ட புதிய சுமையாகும். 

சுதந்திர இந்தியா, பொதுமக்கள் நுகர்வுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தின் வரிக் கொள்கையைக் கைவிட்டது. ஆனால், விடுதலைப் பெருவிழாவின் 75வது ஆண்டில் இதுவே மக்களுக்கு இந்த மோடி அரசின் பரிசு. 

அதிகரிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டவற்றில் தகனக் கட்டணம், மருத்துவமனை அறைகள், எழுதும் மை போன்றவையும் அடங்கும். தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து சொந்த சேமிப்புப் பணத்தை மக்கள் எடுக்கவும்கூட காசோலைகளுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி.க்கு முந்தைய காலகட்டத்தில் 30 – 45 சதவிகிதமாக இருந்த ஆடம்பரப் பொருட்கள் மீதான வரி 18 – 28 சதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அத்யாவசியப் பொருட்களின் மீதான வரிச்சுமை தொடர்ந்து அதிகரிக்கிறது. இது ஜி.எஸ்.டி.யை, ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் பிற்போக்கான வரி விதிப்பு முறையாக மாற்றியுள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இந்த வரி உயர்வுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் எழவில்லை என்பது அப்பட்டமான பொய்யாகும். கேரள முதல்வர் மாநில அரசின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், 2021 நவம்பரில், முதன் முதலில் இந்த முன்மொழிவுகள் வைக்கப்பட்டபோதே, கேரள நிதி அமைச்சர் தம் ஆட்சேபணைகளைத் தெரிவித்தார் என்பதையும் நினைவூட்டினார். 

இந்த விலைவாசி உயர்வானது, மேலும் இன்னல்களைச் சுமத்தி மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துவருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் தேவையின் அளவையும் குறைத்து வருகிறது. சுருங்கிவரும் உள்நாட்டுத் தேவை, உற்பத்தி செயல்பாடுகளை முடக்கி மேலும் வேலை இழப்பிற்கு வழிவகுக்கிறது.  

கோதுமை கொள்முதலின் வரலாறு காணாத வீழ்ச்சி

மோடி அரசு,  நடப்பு ரபி பருவத்தில் கோதுமை கொள்முதல் அளவை 1 கோடியே 95 லட்சம் மெட்ரிக் டன்னாகக் குறைத்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும். இன்னும் சொல்லப்போனால், அரசாங்கத்தின் சொந்த இலக்கான 4 கோடியே 44 லட்சம் மெட்ரிக் டன்னைவிட இது 50% குறைவாகும். அதே நேரத்தில் கோதுமை உற்பத்தி 10 கோடியே 5 லட்சம் மெட்ரிக் டன்களாக மதிப்பிடப்பட்டது. இது முந்தைய மதிப்பீட்டின் அளவைவிட கிட்டத்தட்ட 6% குறைவாகும். இதைத் தொடர்ந்து, 10 மாநிலங்களுக்கு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய கோதுமை ஒதுக்கீடு அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் உள்ள கோதுமை இருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.

பொது விநியோக முறை முற்றிலும் பயனற்றதாக போவதைத் தடுத்து, அதனை வலுப்படுத்த, போதுமான அளவு உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

சமத்துவமின்மையின் அருவெறுக்கத்தக்க அளவு

வகுப்புவாத – கார்ப்பரேட் கூட்டணி, குரோனி (தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாகச் செயல்படுதல்) முதலாளித்துவம் மற்றும் தேசிய சொத்துக்களின் கொள்ளை ஆகியவை வருமானம் மற்றும் செல்வ ஏற்றத் தாழ்வுகளை அருவெறுக்கத்தக்க மட்டங்களுக்கு கொண்டு செல்வதை துரிதப்படுத்துகின்றன. மும்பை பங்குச் சந்தை அறிவிப்பின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 2021-22இல் 9.3 லட்சம் கோடிக்கு மேல் லாபத்தை, கூட்டாக ஈட்டியுள்ளன. முந்தைய ஆண்டைவிட இது 70 சதவிகிதம் அதிகமாகும். இது, தொற்று நோய்க்கு முந்தைய 10 ஆண்டுகளின் (2010 – 20) ஆண்டு சராசரியை விட மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

‘தி எக்கனாமிஸ்ட்’ வெளியிட்ட ‘க்ரோனி கேப்பிட்டலிஸம் இன்டெக்ஸ்’படி, கடந்த ஆறு ஆண்டுகளில் க்ரோனி முதலாளித்துவம் மூலமாக மட்டுமே, பில்லியனர்களின் சொத்துக்களில்  இந்தியாவின் பங்கு 29 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அப்பட்டமான ஆதார் முறைகேடுகள்

2013இல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டமும் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இத்திட்டத்தில், தற்போது 7.9 கோடி குழந்தைகள் பயனடைகின்றனர். ஆனால், போலிப் பயனாளிகளைக் களையெடுப்பது என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த சட்டபூர்வ உரிமை மறுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 23% பேர் மட்டுமே ஆதார் அட்டை வைத்துள்ளனர். தற்போது, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் உலக அளவில் மோசமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற இந்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும். 

பழங்குடியினர் உரிமைகள் மீதான தாக்குதல்

வனப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளைத் திருத்துவதன் மூலம், பழங்குடியினரின் உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களை மோடி அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திருத்தங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியக் காடுகளைத் தங்கள் லாபத்தைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளவும், கையகப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த விதிகள், கிராம சபைகளுக்கான அதிகாரங்களை நீக்குகின்றன. வன நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு, பழங்குடியின சமூகங்கள் மற்றும் வனங்களில் பாரம்பரியமாகக் குடியிருப்பவர்களின் முன்அனுமதி கட்டாயம் என்ற அவர்களது உரிமையை மறுக்கிறது. இது பழங்குடியின சமூகங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும். 

இந்தத் திருத்தப்பட்ட விதிகள், நமது வனங்களின் பெரும் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தனியார்துறைத் திட்டங்களுக்கும் ஒப்படைப்பது மட்டுமல்லாமல், புதிய காடுகள் வளர்ப்பு என்ற பெயரில் வனமற்ற பிற அரசு நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்தவும் உதவுகின்றன. எனவே, இது நிலமற்றவர்களின் அடிப்படை உரிமையான வாழ்விட உரிமை கோரிக்கை மீது  விழுந்த அடியாகும். 

பேரழிவு தரும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, காடுகளின் அழிப்பை எளிதாக்குவதற்கு மோடி அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேலும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மனித உயிர்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகள் பெருமளவில் அழிந்தன. தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய பருவநிலை மாற்றம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகின்றது. உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்க, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கட்டாயம் உதவ வேண்டும். 

கல்வி மீதான தாக்குதல்

கொரோனா தொற்று நோயின் போது இருந்த கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு வெறித்தனமாக அமலாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் கல்வியை ஆன்லைனில் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. லட்சக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிற்றல் விகிதம் ஆபத்தான அளவிற்கு அதிகரித்துள்ளது. கல்வியின் மதச்சார்பற்ற அறிவியல் பூர்வ உள்ளடக்கத்திற்கு எதிராக ஒரு அருவருக்கத்தக்க வெறித் தாக்குதல் நடத்தப்படுகிறது. 

அக்னிபாத்

தேசப்பாதுகாப்புப் பணிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அக்னிபாத் திட்டம் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலேயே உள்ளது. நான்கு வருட காலத்திற்கு ‘ஒப்பந்த அடிப்படையில்’ சிப்பாய்களை பணியமர்த்துவதன் மூலம் திறமைமிகு ஆயுதப்படைகளை உருவாக்க முடியாது. இவர்களில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளராக பின்னர் முறைப்படுத்தப்பட உள்ளனர். ஓய்வூதியம் தராமல் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், நமது தொழில்முறையிலான ஆயுதப் படைகளின் தரம் மற்றும் செயல்திறனை கடுமையாக சமரசம் செய்துகொள்ளும் வகையில் உள்ளது. 

இந்திய ராணுவத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆள்சேர்ப்பு நடக்கவில்லை. ஆயுதப்படைகளில் வழக்கமாக வீரர்களைச் சேர்ப்பதற்கு பதிலாகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் ஒப்பந்தப் படைவீரர்களுக்கு நான்காண்டுகளுக்குப் பிறகு வேறு எந்த வேலைவாய்ப்பும் இல்லாமல் செய்துவிடுகிறது. இது அவர்களைத் தீவிரவாத குழுக்களுக்குச் சேவைசெய்யும் போராளிகளாக மாற்றும் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கும். ஏற்கனவே கடுமையான புறச்சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள நமது சமூகக் கட்டமைப்பில், இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இது ஆர்.எஸ்.எஸ்.-ன் பாசிச நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்ய, இந்திய ஆயுதப் படைகளை மறுசீரமைக்கும் முயற்சியே. பி.டி.சாவர்க்கர் ‘இந்துத்துவா’ என்ற சொல்லாடலை உருவாக்கியபோது, அதனை செயல்படுத்த ஒரு முழக்கத்தைத் தந்தார். “ராணுவத்தை இந்துமயமாக்குங்கள்; இந்துத்துவத்தை ராணுவமயமாக்குங்கள்” என்பதே அது. இந்தத் திட்டம் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற நமது அரசியல் அமைப்பின் மீதான கடுமையான தாக்குதலையே எடுத்துக் காட்டுகிறது.

வளர்ந்து வரும் எதிர்ப்புகள்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நிரந்தர வேலை கோரி இளைஞர்கள் பங்குபெற்ற மாபெரும் போராட்டங்கள் வெடித்தன. மதச்சார்பற்ற ஜனநாயக இளைஞர் அமைப்புகள் ஒன்று கூடி, வேலை வழங்கக் கோரி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. 

அக்னிபாத்துக்கு எதிராக, விவசாயிகளின் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுடன் இணைந்து நிரந்தர பாதுகாப்பான வேலைவாய்ப்பைக் கோரி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். 

மேலும் விவசாயச் சட்டங்களை ரத்து செய்தபோது அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மின்சாரச் சட்ட திருத்த மசோதா குறித்து அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்துள்ளது. இதற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

2022, ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 15 வரையிலான ஒன்றரை மாத மாணவர் பேரணி ‘கல்வியைப் பாதுகாப்போம்; அரசியலமைப்பைப் பாதுகாப்போம்; இந்தியாவைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கங்களோடு நடைபெறுகிறது. இதற்காக, ஐந்து குழுக்கள் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்து கிளம்பி இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும். 

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள், மக்கள் அறிவியல் இயக்கங்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், ஆசிரியர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பலர் பங்கேற்கும் நாடு தழுவிய போராட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. உணவுப் பாதுகாப்புக்காகவும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மாதர் அமைப்பு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றது.

பெரிய அளவில் தனியார்மயமாக்கலுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. பொதுக் காப்பீட்டு ஊழியர்கள் ஜூலை 15 அன்று, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தோடு, மற்றொரு வேலை நிறுத்தத்திற்கும் தயாராகி வருகின்றனர். தபால் ஊழியர்கள், ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அங்கன்வாடி – ஆஷா திட்ட பணியாளர்கள் போராட்டமும் தொடர்கிறது. 

தீவிரமடையும் சர்வாதிகாரத் தாக்குதல்கள் 

23வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் கவனப்படுத்தியுள்ள அனைத்துப் போக்குகளும், பாசிச ஆர்.எஸ்‌.எஸ்.-இன் இந்துத்வா நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து வெறித்தனமாக செயல்படுத்தப்படுகிறது என்பதையே காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மோடி அரசின் அரசியல் ஆயுதங்களாக, அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் தொடர்ந்து செயல்படுகின்றன. 

பண மோசடி தடுப்புச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தங்கள் அரசியல் அமைப்பின்படி செல்லுபடியாகும் என்று சமீபத்தில், (ஜூலை 27) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது, பா.ஜ.க. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மேலும் முன்னெடுத்துச் செல்ல அமலாக்கத் துறை கையாண்ட வலுவான தாக்குதல் தந்திரங்களை மேலும் வலுப்படுத்தும். 2002 – பண மோசடி தடுப்புச் சட்டத்தில், மோடி அரசாங்கம் 2019இல் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களையும் உச்ச நீதிமன்றம் சட்டப்படியானவை என்று உறுதி செய்துள்ளதன்மூலம் அமலாக்கத்துறைக்கு கொலை ஆயுதங்களை அளித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் மேலவையில் பி.ஜே.பி.க்கு அப்போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், விவாதத்திற்கு உட்படுத்தப்படாமலே பண மசோதாவாக அரசால் நிறைவேற்றப்பட்டது என்ற உண்மையை இந்த மூன்று உறுப்பினர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு விவாதிக்காமல் தவிர்த்துள்ளது. ஆயினும், இந்தப் பிரச்சனைக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வுதான் முடிவுகாணவேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தண்டனை தரப்படுவதற்கு முன், முதல் தகவல் அறிக்கை போலில்லாமல், அவர் மீதான அமலாக்கத்துறையின் குற்ற அறிக்கை அவருக்கு அளிக்கப்படவோ அல்லது முறையாகத் தாக்கல் செய்யப்படவோ அவசியமில்லை என்றாகிறது. இது குற்றம் சாட்டப்பட்டவரின் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை தன்னிச்சையாகவும் அநீதியாகவும் மீறுவதாகும்.  அமலாக்கத் துறை கைது செய்வதற்கான காரணத்தை கைது செய்யும்போது தெரிவித்தாலே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இது கைதுக்கான காரணத்தைத் தெரிவிக்காமலே, சொத்துகளை கைப்பற்றுவதற்கும் முடக்குவதற்கும் மற்றும் தேடுதல் வேட்டைக்குமான   அமலாக்கத்துறையின் எதேச்சதிகாரங்களை வலுப்படுத்துகிறது. மேலும் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம் சுமத்துபவரிடமிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான சுமையாக மாற்றப்படுகிறது. ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்ற நீதியியலின் அடிப்படையையே இது தலைகீழாக மாற்றுகிறது. 

நாடாளுமன்ற நடைமுறைகள் மீதான தாக்குதல்: மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தின் மீதும் அதன் ஜனநாயக செயல்பாடுகளின் மீதும் இதுவரை கண்டிராத அளவிலான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பற்றியெரியும் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளைத் தன் மிருகபலத்தின் காரணமாக விவாதிக்க மறுப்பது நாட்டின் நீடித்த இடையூறுகளுக்கான அடிப்படைக் காரணமாகும். முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்புக் கூட்டத்தொடரில் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்திராத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விவாதமோ, பரிசீலனையோ இன்றி சட்டங்கள் சிதைக்கப்படுகின்றன. இதனால், நாடாளுமன்றத்திற்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழிக்கிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைத்தல்: மத்திய அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்வதை வாடிக்கையாகவே கொண்டுள்ள பா.ஜ.க., இதனுடன் தன் அதீத பணபலத்தையும் சேர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களைக் சீர்குலைக்கப் பயன்படுத்துகிறது. மகாராஷ்டிர மாநில மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த சிவசேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் முதலில் சூரத், பின்னர் கவுகாத்தி, பின்னர் கோவா என மூன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டதற்குப் பின்னர் அங்கு நடந்த சமீபத்திய ஆட்சிக் கவிழ்ப்பைக் குறிப்பிடலாம். இது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும்.

மனித உரிமைகள் மற்றும் குடிமக்கள் உரிமைகளுக்காக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போராடிவரும் டீஸ்தா செதல்வாட் மிகவும் வெட்கக்கேடான வகையில், கண்டனத்திற்குரிய முறையில் கைது செய்யப்பட்டார். நீதியியல் மாண்புகளையே தலைகீழாக மாற்றிய, புகார்தாரரைக் குற்றம் சாட்டப்பட்டவராகக் கருதும், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வின் சர்ச்சைக்குரிய தீர்ப்பே இந்தக் கைதுக்கு வழி வகுத்தது. முன்னாள் காவல்துறை அதிகாரிகளான ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் (ஏற்கனவே மற்றொரு வழக்கில் சிறையில் உள்ளார்) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உண்மைகளை சரிபார்க்கும் தேடுதளமான ‘ஆல்ட் நியூஸ்’ சமூக இணையதளத்தின் இணை நிறுவனர் ஜுபைர் அகமது சந்தேகத்தின் அடிப்படையில் அதிர்ச்சியூட்டும் வகையில் கைது செய்யப்பட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக நச்சுமிக்க வெறுப்பையும்  மற்றும் பயத்தையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்துத்துவ சக்திகளால் பரப்பப்படும் போலிச் செய்திகளை அம்பலப்படுத்துவதில் ஆல்ட் நியூஸ் மகத்தான சேவை செய்துவருகிறது. மோடி அரசில், வெறுப்பூட்டும் பேச்சை ஊக்குவிப்பவர்கள் மற்றும் வன்முறைக்கு வித்திடுபவர்கள் அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். அதேசமயம் வெறுப்புப் பேச்சுகளை அம்பலப்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நபிகள் நாயகத்துக்கு எதிராக பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்து உலக அளவில் கண்டனம் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அவரது கருத்துகளுக்கு எதிராக, கடுமையான கண்டனம் தெரிவித்தது. ஆயினும் அரசின் பாதுகாப்பில் சுதந்திரமாக இருக்கும் இந்த செய்தித் தொடர்பாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மையை மக்கள் முன் வைத்த ஜுபைர் போன்றவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். 

எனினும், உச்சநீதிமன்றம் இறுதியாக உத்தரப்பிரதேச காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஆறு வழக்குகளிலும் ஜுபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.  ஜுபைரை விசாரிக்க அமைக்கப்பட்ட உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் கலைத்தது. 

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர். பத்திரிகையாளர்கள் உட்பட பலர் காவலில் உள்ளனர். ஜுபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்போது உச்சநீதிமன்றம், “கைது செய்யும் அதிகாரத்தை, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்”, என்று கூறியது. நீதிமன்றங்கள் தலையிடாதவரை பா.ஜ.க. அரசுகள் அத்தகைய வேறுபாட்டை ஏற்காது என்பது தெளிவு.

வகுப்புவாதப் பிளவை தொடர்ந்து ஆழப்படுத்துதல்

அதே நேரத்தில் வகுப்புவாதப் பிளவு தொடர்ந்து ஆழப்படுத்தப்படுகிறது. பஜ்ரங் தள் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள், பல மாநிலங்களில் மசூதிகளின் வாசல்களிலும், முஸ்லிம்கள் வாழும் இடங்களிலும் ஆத்திரமூட்டல்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டங்கள், அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவதற்கும், பெரிய அளவில் கைதுகள் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஏழு மாநிலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடந்தன. 

ஹிஜாப் அணிதல், ஹலால் இறைச்சி, தொழுகைக்கான அழைப்பு மற்றும் லவ் ஜிகாத் போன்ற பிற பிரச்சனைகள் சிறுபான்மையினரைக் குறிவைக்க பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வகுப்புவாதப் பிளவு முயற்சிகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலும் நிகழ்ந்தன. டெல்லி மற்றும் பல பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பெரிய அளவில் புல்டோசர் அரசியல் நிகழ்த்தப்பட்டு, முஸ்லிம் சிறுபான்மையினரைக் குறி வைத்து அவர்களின் வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் இடித்துத் தகர்க்கப்பட்டன. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரால் புல்டோசர்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோத கட்டமைப்புகள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. அவை எதையும் பா.ஜ.க. மாநில அரசுகளோ அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறையோ பின்பற்றுவதில்லை.

உதய்ப்பூர் மற்றும் அமராவதியில் நடந்த கொடூரமான கொலைகள், இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களின் பழிவாங்கல் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இக்கொலைகள் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்களின் கைவேலை என்பது பின்னர் தெரியவந்தது. வகுப்புவாத வன்முறை மற்றும் பதட்டத்தைத் தூண்டுவதே இதன் நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால் இந்தக் கொலைகளுக்கும் பா.ஜ.க.விற்குமான தொடர்பு அம்பலமானதால் பதட்டங்கள் தணிந்தன. 

கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. கிறித்துவ மதத்திற்கு மாறிய பழங்குடியினரின் பழங்குடி அந்தஸ்து பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் பழங்குடி சமூகங்களைப் பிளவுபடுத்தும் தீய பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தொடங்கியுள்ளது. இந்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. 

பி.ஜே.பி.யும் இந்துத்துவா அமைப்புகளும் தீவிரவாதம் மற்றும் வெறுப்பு என நச்சு பிரச்சாரங்களுடன் சேர்த்து, வகுப்புவாதப் பிளவுகளை நிலை நிறுத்தவும் ஆழப்படுத்தவும், சிறுபான்மையினருக்கு எதிராகப் பிரச்சனைகளைத்   தூண்டுவது தொடரும் என்பது இப்பொழுது தெளிவாகிறது. இத்தகைய தந்திரங்கள் தேர்தல் நேர அணி திரட்டல் என்ற நோக்கத்துடன் மட்டும் நின்றுவிடாது. வரும் நாட்களில், இது ஒரு நிரந்தர அம்சமாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். நமது 23வது கட்சி காங்கிரஸில் குறிப்பிடப்பட்டதுபோல, இந்துத்துவ அடையாளத்தை வலுப்படுத்தி மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாகத் திருப்பி ஒருங்கிணைப்பதன் மூலம் அவர்களின் நோக்கமான இந்துராஷ்டிராவை அடைய முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள முக்கிய மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் இந்த தொடர்ச்சியான வகுப்புவாதத் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் நமது கட்சியும் இடதுசாரிகளும் அந்த மாநிலங்களில் நமது பலம் குறைவாக இருந்தாலும், இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டத்தை நடத்த ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியக் குடியரசின் தன்மையை மாற்றுதல்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் உச்சியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில் விழா நடத்தி பிரதமர் தேசியச் சின்னத்தை திறந்து வைத்தார்.

அரசியலமைப்புச் சட்டம் நமது ஜனநாயகத்தின் மூன்று முக்கிய அம்சங்களான நிர்வாகம் (அரசு), சட்டமன்றம் (நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகள்) மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றையும் தெளிவாகப் பிரிக்கிறது. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார் மற்றும் ஒத்திவைக்கிறார். பிரதமர் அரசு நிர்வாகத்தின் தலைவர். சட்டமன்றம் மற்ற பொறுப்புகளோடு, சட்டங்களை இயற்றுவதற்கும் நிறைவேற்றுவதற்கும், அதற்குப் பொறுப்பானவர்களை நியமிக்கவும் சுதந்திரமான அதிகாரம் கொண்டுள்ளது. இந்த மூன்று பிரிவுகளுக்கிடையேயான இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வு நிர்வாகத்தின் தலைவரால் தகர்க்கப்படுகிறது. 

இன்னும் கூடுதலாக, இந்த விழாவில் பிரதமர் இந்து சமயச் சடங்குகளைச் செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களுக்கும் தங்கள் நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கவும், வெளிப்படுத்தவும் உரிமையையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. இது பறிக்க முடியாத உரிமை. அதேநேரம், அரசு எந்த ஒரு நம்பிக்கையையோ மதத்தையோ கடைப்பிடிக்கவோ தூக்கிப் பிடிக்கவோ கூடாது என்று தெளிவாக வரையறுக்கிறது. மோடி தலைமையின் கீழ் உள்ள இந்திய அரசு இந்துத்துவ அரசாங்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. அயோத்தியில் கோயில் கட்டும் பணியை பிரதமர், குடியரசுத் தலைவர், உத்தரபிரதேச ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தனர். முன்னதாக, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், நாட்டின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீர் கலைக்கப்பட்டது சட்டபூர்வமாக்கப்பட்டது.  இப்போது நாடாளுமன்றக் கட்டிடத்தின் உச்சியில் நடத்தப்பட்ட இந்த இந்து மதச் சடங்கு இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் தன்மையை பாசிச ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறது. 

குடியரசு தலைவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கட்சி காங்கிரஸின் அரசியல் நிலைப்பாட்டின் புரிதலோடு, கட்சி வழிகாட்டுதல்படி, இந்துத்துவத்திற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளைப் பரந்த அளவில் அணிதிரட்டி வருகிறோம். இந்த அடிப்படையில், இந்தத் தேர்தல்களில், பாசிச ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் இந்த பா.ஜ.க. அரசுக்கு எதிரான அரசியல் தத்துவார்த்தப் போட்டியாக அதிகபட்ச மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து போட்டியிட நாம் பாடுபட்டோம். இறுதியாக, திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் யஸ்வந்த் சின்ஹா அப்பதவியை ராஜினாமா செய்த பிறகு, பிரதான மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவரது வேட்பு மனுவை ஆதரித்தன. இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட பெயர்களான சரத் பவார், ஃபரூக் அப்துல்லா போன்றவர்கள் போட்டியிட மறுத்துவிட்டனர். கோபால் காந்தியை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தவும் காந்தி X கோட்சே என பிரச்சாரம் செய்யவும் பரவலாக உடன்பாடு ஏற்பட்டது. கோபால் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திவந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் போட்டியிடவேண்டாம் என்று அவர் முடிவு செய்ததால் நெருக்கடி உருவானது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி நெருங்கிவந்ததால், எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக போட்டிப் போடவேண்டிய கட்டாயத்தில் யஸ்வந்த் சின்ஹா போட்டியிடுவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது. 

தொடர்ந்து, பா.ஜ.க. திரௌபதி முர்முவின் பழங்குடி அடையாளத்தை முன்னிறுத்தி அவரைத் தனது வேட்பாளராக அறிவித்தது. இது தனி நபர்களுக்கோ அடையாளத்திற்கோ நடக்கும் போட்டி அல்ல; அரசியல் தத்துவார்த்த ரீதியிலான போட்டி என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.  ஆரம்பத்தில் யஸ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க ஒப்புக்கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒரு பழங்குடி இன வேட்பாளரை எதிர்க்க முடியாது என்று கூறி அணி மாறியது. ஜார்க்கண்ட் பழங்குடி இன அடையாளத்தின் அடிப்படையிலேயே தனி மாநிலமாக உருவானதாகும். மகா விகாஸ் அகாதி அரசு கவிழ்ந்த பிறகு சிவசேனாவும் பி.ஜே.பி.யின் வேட்பாளரை ஆதரித்து அணி மாறியது. 

ஆரம்பம் முதலே பி.ஜே.பி. முன்னணியில் இருந்தது. பிஜு ஜனதா தள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவு கிட்டியதும் அது அறுதிப் பெரும்பான்மை பெற்றது. எனினும் யஸ்வந்த் சின்ஹா 1952க்குப் பிறகு எந்த ஒரு எதிர்க்கட்சி வேட்பாளரும் பெற்றிராத அளவிற்கு அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார். திருமதி முர்மு பெற்ற 6,76,893 வாக்குகளுக்கு எதிராக 3,80,177 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். 

இதைப்போலவே, திருமதி மார்கெட் ஆல்வா, காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததும் துணைத் தலைவர் தேர்தலுக்கு அவர் பெயரை முன்மொழிய உடன்பாடு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 6இல் நடக்க உள்ள இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் நடுநிலைமை வகிக்கும் என அறிவித்துள்ளது. திரிணாமுலின் இம்முடிவு, அமலாக்கத்துறை சோதனைகள் மற்றும் மேற்குவங்கத்தில் வேலை நியமன ஊழல் தொடர்பாக திரிணாமுல் அமைச்சர்களின் கைதுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. 

குடியரசு துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் தொகுப்பில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இரு அவைகளின் எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு தெளிவான சாதகமாக இது உள்ளது. 

ஒட்டுமொத்தத்தில், இத்தேர்தலில் ஒரு திறம்பட்ட கூட்டுப் போராட்டத்தை நடத்த பா.ஜ.க. அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையவில்லை. 

கேரள வளர்ச்சிப் போக்குகள்

ஒன்றிய பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளைத்  தவறாகப் பயன்படுத்தி, கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடத்தல் குற்றம், மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், தேசிய குற்றப்புலனாய்வு முகமை நீதிமன்றத்தில், தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்த தேசியப் புலனாய்வு முகமை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, ஆர்.எஸ்.எஸ். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த ஒருவர், ஜாமீனில் வெளியே வந்தவுடன், முதல்வர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது ஆதாரமற்ற தனிப்பட்ட தாக்குதல் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வெட்கமின்றி காங்கிரசும் பா.ஜ.க.வும் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்பெண்மணியின் குற்றச்சாட்டுகளை எதிரொலித்தன. இதை சாக்காகப் பயன்படுத்தி தேசியப் புலனாய்வு முகமை கையாளும் ஒரு வழக்கில் அமலாக்கத் துறையும் நுழைய முயல்வதாகவும் வெளிப்படையான காரணங்களுக்காக இந்த வழக்கை கேரளாவிற்கு வெளியே பா.ஜ.க. ஆளும் மாநிலத்திற்கு மாற்றும் முயற்சியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடது ஜனநாயக முன்னணி இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஓராண்டு முடிவடைந்ததிலிருந்தே, அதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கியது. தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பதவி விலகக் கோரியதைத் தொடர்ந்து சில்வர் லைன் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இடது முன்னணி அரசுக்கு எதிராக, மத்திய அமைப்புகள் மூலம் விசாரணை கோரும் பா.ஜ.க.வின் பாட்டுக்குத் தாளம் போடுகிறது. 

கேரளாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி கிடைக்காதபடி மத்திய அரசு தலையீடு செய்து வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறது. கேரள சுற்றுலா வளர்ச்சித் துறை சர்வதேச அளவில் அங்கீகாரமும் புகழும் பெற்றது‌. சுற்றுலாத்துறைக்கான அனைத்து நிதியுதவிகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  இத்தகைய நிதிமறுப்பு மத்திய தொகுப்பிற்கு கேரளாவின் பங்கைச் செலுத்த முடியாமல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது தவிர நிதி ஆயோக்கின் நிதியிலிருந்து கேரளாவிற்கான பங்கும் 10-வது நிதி ஆணையத்தில் 3.8 சதத்திலிருந்து 15-வது நிதி ஆணையத்தில் 1.9 சதமாகக் குறைந்துள்ளது. பா.ஜ.க. அரசு, மாநில அரசுக்கு வருடாந்திர கடன் பெறும், முறையான வழிமுறைகளை மறுத்து, நிதிப் பற்றாக்குறை மூலம் அதன் குரல்வளையை நெறிக்க முயற்சிக்கிறது. ஆண்டு வரவு செலவுப் பட்டியலில் திட்டமிடப்படாத கடன் அல்லது மாநில அரசின் உத்தரவாதத்துடன் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் கடன் ஆகியவை, மாநில அரசின் மற்ற கடன்களைப் போலவே கருதப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல. இது முன்னெப்போதும் நடைமுறையில் இருந்ததில்லை. மேலும் மத்திய அரசிற்கும் இது பொருந்தாது. இது மாநிலங்களின் நிதியாதாரத்தைக் குறைக்கும் திட்டமிட்ட முயற்சியாகும். ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களுக்குத் தரவேண்டிய பங்கு தரப்படாத நிலையில், கேரளாவின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும். கேரளாவை பாரபட்சமாக நடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியை பா.ஜ.க. அரசு அரசியல் ரீதியாக அணி திரட்டப் பயன்படுத்தமுடியும் என்று நம்புகிறது.

இந்திய மாணவர் சங்கப் போராட்டத்தை அடுத்து வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி.யின் அலுவலகம் தாக்கப்பட்டதை கட்சி உடனடியாகக் கண்டித்தது. மாநில காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. மாநிலம் முழுவதும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் இதற்கு எதிரான போராட்டங்களை நடத்தியது. அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஆகியவை மக்களிடையே எதிர்ப் பிரச்சாரத்தை நடத்தி அரசாங்கத்தை அவதூறு செய்யும் சதியை அம்பலப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட மையங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. 

திரிபுராவில் வளர்ச்சிப்போக்குகள்

சட்டசபைத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் பா.ஜ.க., திரிபுராவில் முதல்வரை மாற்றியுள்ளது. இது அரசு தன் முழுத் தோல்வியை தெளிவாக ஒப்புக்கொள்ளும் செயலாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்கள் மேலும் நமது கட்சிக்கு எதிரான பாசிசத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 2020-21இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் முற்றிலும் மோசடியானவை. 95 சதவிகிதத்துக்கு அதிகமான இடங்களில் பா.ஜ.க. போட்டியின்றி வெற்றி பெற்றது. இன்னும் ஆறு மாதங்களில் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் மக்கள் தீவிரமாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அச்சமூட்டும் பயங்கரவாத சூழல் தொடர்கிறது. 

சமீபத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

நமது தொகுதியான ஜுபராஜ்நகரை இழந்தோம். 51.8% வாக்குகள் பெற்று பா.ஜ.க. வெற்றி பெற்றது. நமக்கு 39.2% கிடைத்தது.

நான்கு இடங்களில் பா.ஜ.க. மூன்றில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதியை பா.ஜ.க.விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது. முன்னாள் சமஸ்தானத்தின் அரசர் – காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவரின் மகனால் உருவாக்கப்பட்ட புதிய பழங்குடியின கட்சியான திப்ரா மோத்தா, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட சுர்மா தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் ஆதரவுடன் 30.7% என கணிசமான வாக்குகளைப் பெற்றது.

மொத்தத்தில், இந்த 4 இடைத்தேர்தல் இடங்களில், பா.ஜ.க. 44.9% இடது முன்னணி 22.01% காங்கிரஸ் 20.1% பெற்றுள்ளன

பழங்குடியின மக்களிடையே திப்ரா மோத்தா முதன்மையான கட்சியாக உருவெடுத்துள்ளது. பி.ஜே.பி. இரண்டாவது இடத்தையும், இடது முன்னணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. திப்ரா மோத்தா எந்தத் திசையில் செல்லும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வங்கத்தில் வளர்ச்சிப்போக்குகள்

மேற்கு வங்க மாநில முதல்வரின் நம்பிக்கைக்குரியவரும், திரிணாமுல் காங்கிரஸின் வலிமை மிக்க மனிதரும், தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியை, 2014இல் வங்காளத்தில் உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்த போது நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, ஜூலை 23 அன்று அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதல் சோதனையில், அவரது நெருங்கிய கூட்டாளியிடமிருந்து பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் ரூ.21 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத்துறை கைப்பற்றியதால், அமைச்சருக்கு ஊழலில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொரு அமைச்சர், ஒரு எம்.எல்.ஏ. மற்றும் பலர் மீதும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் இந்த நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் நடைபெற்றன. 

நாரதா மற்றும் சாரதா உள்ளிட்ட (மத்திய அமைப்புகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளன) முந்தைய சிட் ஃபண்ட் ஊழல்கள் மற்றும் தற்போதைய நிகழ்ச்சிப் போக்குகள், திரிணாமுல் அரசாங்கத்தில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது என்ற கட்சியின் கருத்து சரியானது என்பதை நிரூபித்துள்ளன. இதுதவிர, பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் வழக்கில் 41 தனி நபர்கள் மீது, கடந்த ஜூலை 20ம் தேதி, மத்தியப் புலனாய்வுத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் இணைந்து, திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரான முதல்வரின் மருமகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் இந்தக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெரும் பணப்பரிமாற்றம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பின. எனினும், ஜூலை 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இவர்களது பெயர்கள் இல்லை. 

ஜூலை 13 அன்று, அப்போது மேற்குவங்க ஆளுநராக இருந்த, தற்போது பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளரையும், அசாம் முதலமைச்சரையும் மேற்குவங்க முதலமைச்சர் டார்ஜிலிங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். தனது மருமகனைப் பாதுகாக்கும் அதேவேளையில், பார்த்தா சட்டர்ஜியை கைது செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலிலிருந்து ஒதுங்கி இருக்கும் திரிணாமுல் காங்கிரஸின் முடிவு, இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்டதாக பரவலான ஊகங்கள் உள்ளன. 

திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஜனநாயக விரோத, வன்முறை, பயங்கரவாத அரசியலுடன் சேர்ந்து ஆழமாக வேரூன்றிய மிகப்பெரிய ஊழலிலும் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

தொகுப்புரை

பா.ஜ.க. தனது வகுப்புவாத கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க, தனது அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவருகிறது. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சனைகளில் கூட, உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த முடியவில்லை. கட்சி காங்கிரஸின் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, இடைப்பட்ட காலத்தில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரட்ட முடியாத தனது இயலாமையை காங்கிரஸ் கட்சி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், நமது கட்சி தனது தனிப்பட்ட செயல்பாடுகளை அனைத்து மட்டங்களிலும் முன்னெடுப்பது அவசியமாகும்.  அதே வேளையில், இடதுசாரி ஒற்றுமைக்காக கட்சி தீவிரமாக முயற்சிசெய்யும். இக்காலகட்டத்தில் சில மாநிலங்களில் மற்ற ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுடன் கைகோர்த்து, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாதத்திற்கு எதிராக நிகழ்ச்சிகளையும், அணிதிரட்டல்களையும் கட்சி வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத, புல்டோசர் அரசியலுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கும் அதேநேரத்தில், உள்ளூர் மற்றும் மாநில அளவில் இத்தகைய போராட்டங்களைக் கட்டியெழுப்ப கட்சி தனது முழு ஆற்றலையும் அர்ப்பணிக்க வேண்டும்.

மத்தியக் கமிட்டியின் போராட்ட அழைப்புகள்:

  1. ஆகஸ்ட் 1 – 15, இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, கட்சி அலுவலகங்கள் அனைத்திலும் தேசியக் கொடியை ஏற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையை உறுதிமொழியாக ஏற்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக, அரசியல் சாசன விழுமியங்கள், ஜனநாயக உரிமைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறித்த தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். 
  2. செப்டம்பர் 14 – 24, மக்களின் வாழ்வாதாரத்தின்மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் குறித்த பிரச்சாரத்தை நடத்தவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலக் குழுவால் இதற்கென உறுதியான ஒரு செயல்திட்டம் தீட்டப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரம் மாநிலத் தலைநகரங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முடிவடையும். 
  3. 23வது காங்கிரஸின் முடிவுப்படி மக்கள் எதிர்கொள்ளும் உள்ளூர் பிரச்சனைகள் மீது உள்ளூர் போராட்டங்களை நடத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  4. கேரள இடது முன்னணி அரசை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரங்களை நடத்த வேண்டும். இடது முன்னணி அரசு பின்பற்றும் மக்கள் நலத்திற்கான மாற்றுக் கொள்கைகளின் சிறப்பு அம்சங்களும் இந்தப் பிரச்சாரத்தில் உள்ளடங்கியிருக்க வேண்டும்.