பட்டியலின மக்களுக்கான ஒன்றிய அரசின் துணை திட்டம் எந்தவிதத்திலும் முறையாக அமலாக்கப்படவில்லை என்பதும், படிப்படியாக இந்த திட்டத் திற்கான பட்ஜெட் மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கணிசமாக குறைக்கப்பட்டே வந்துள்ளது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், 10 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அவரது பதவிக் காலம் முடிவடைந்த பின்னர், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தாமதமாக, பத்தாண்டுகள் கழித்து தற்போது ஒன்றிய அரசு பதில் அனுப்பியுள்ளது.
அந்த பதில் மூலம் அதிர்ச்சிகர விபரம் தெரியவந்துள்ளது. 2012 மே 14 அன்று மாநிலங்களவையில் ஒரு சிறப்புக் குறிப்பை முன்மொழிந்து, பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டமும், அதற்கான நிதி ஒதுக்கீடும் முறையாக அமலாக்கப்படவில்லை என்று டி.கே.ரங்கராஜன் உரையாற்றினார்.
அப்போதைய பட்ஜெட்டில் பட்டியலின மக்களுக்கு 16.7 சதவீதம் ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக வெறும் 7 சதவீதம் அளவிற்குத்தான் அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. அதை சுட்டிக்காட்டிய டி.கே.ரங்கராஜன், நிதி ஒதுக்கீடு மிகக்குறைவு என்பது மட்டுமல்ல; ஒன்றிய அரசு பணியிடங்களில் கணிசமான எண்ணிக்கையில் பட்டியலினத்தவருக்கான பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
2012 மே 14 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய இந்த கேள்விகளுக்குதான், 2022 நவம்பர் 10 அன்று – 10 ஆண்டுகள் கழித்து – தற்போதைய ஒன்றிய மோடி அரசு, டி.கே.ரங்கராஜனுக்கு பதில் அனுப்பி வைத்துள்ளது.
பத்து பக்கங்கள் கொண்ட அந்த பதிலில், பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டத்திற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட, கடந்த 8 ஆண்டு காலத்தில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்பதும் வெளிப்பட்டுள்ளது.
2012 முதல் 2022 வரை பட்டியலின துணைத் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஒன்றாகவும், அதன் திருத்தப்பட்ட மதிப்பீடு கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும் பெரும் தோல்வி ஏற்பட்டிருப்பதை பதில் கடிதம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
பட்டியலின மக்களிடையே 63.5 சதவீதம் மட்டுமே எழுத்தறிவு, 41.2 சதவீதம் அளவிற்கு மகளிரிடம் ஊட்டச் சத்து குறைபாடு உள்பட சமூக குறி யீடுகளிலும் பெரும் பின்னடைவு நீடிக் கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக டி.கே.ரங்கராஜன் கூறுகையில், “10 ஆண்டுகளுக்குப் பின்பு மோடி அரசு பதில் அனுப்பியுள்ளது. அரசாங்கங்கள் மாறினாலும் அரசு (State) என்பது தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிற ஒன்று. அந்த அடிப்படையில் இந்த பதிலை தற்போது அனுப்பியுள்ளனர் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. காலதாமதம் ஆனாலும் இதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள விபரங்கள் முக்கியமானவை.
இன்றும் பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டம் முறையாக, முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. இந்தப் பதில் கடிதத்தை அனுப்பியதோடு ஒன்றிய அரசு தனது கடமை முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. பட்டியலின துணைத் திட்டத்தை உறுதியாக அமலாக்க வேண்டும். அதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. துணைத் திட்ட அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக வலுவான தலையீட்டை செய்வது அவசியமாகும். அதை ஜனநாயக கடமையாக மாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இப்பிரச்சனையை மேலும் மேலும் உறுதியோடும், வலுவோடும் எடுத்துச் செல்லும். பட்டியலின துணைத் திட்டத்தை முழுமையாக அமலாக்கச் செய்வது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முக்கியமான கடமை என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. இதற்கான போராட்டத்தில் கட்சி எப்போதும் முன்னணியில் நிற்கும்” என்று கூறினார்.
பட்டியல் இனத்தவருக்குத் துணைத்திட்டம் என்பது பட்டியலினத்தவரை சமூகத்தில் முன்னேற்றிட 1970களில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இதன்படி அரசு மற்றும் பொதுத்துறைகளில் பட்டியலின மக்களை வேலைக்கு எடுப்பது, கல்வி நிலையங்களில் அவர்களுக்கான ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, சமூக ரீதியாக மற்ற பகுதியினருக்கும் பட்டியல் பகுதியினருக்கும் இருக்கிற இடைவெளியை சுருக்குவதற்காக இந்தத் துணைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
2012-13லிருந்து 2022-23 வரை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி
(ரூபாய் கோடியில்)
வருடம் மொ.ஒதுக்கீடு திட்ட மதிப்பீடு
2012-13 37113.03 33085.04
2013-14 41561.13 35800.60
2014-15 50548.16 33674.74
2015-16 30850.88 34674.74
2016-17 38832.63 40919.70
2017-18 52603.33 5234.72
2018-19 56618.50 62473.86
2019-20 81340.74 72936.29
2020-21 83256.62 82707.51
2021-22 126259.20 139956.42
2022-23 142342.36
போதிய நிதி அளிக்கப்படவில்லை
012 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய 16.5 சத விகித ஒதுக்கீட்டிற்குப் பதில் 0.7 சதவிகிதமே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டி.கே.ரங்கராஜனின் 14.5.2012 அன்றைய கேள்விக்கு 10.11.2022 இல் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார் அனுப்பியுள்ள பதிலின் முக்கிய அம்சங்கள் இங்கு அளிக்கப்படுகின்றன: “அனைத்து மாநிலங்களும் / அமைச்சக மும் / துறைகளும் தாங்கள் ஒதுக்கும் நிதியில் குறிப்பிட்ட சதவிகித நிதியைப் பட்டியலின மக்களுக்கான முக்கிய துறைகளுக்குக் கட்டாயம் ஒதுக்கீடல் செய்திட வேண்டும் என்று அறி வித்துள்ளோம். மற்றும் இதனைக் கண்கா ணிக்கச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் 31 ஜனவரி 2017 உத்தரவு பிறப் பித்தேன்” என்று அமைச்சர் கூறியுள்ளார். 2021-22இல் 17அமைச்சகங்கள், குறிப்பிட்ட 16.2 சதவிகிதம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், ஏன் 22 அமைச்சகங்கள் 15 சதவிகி தத்திற்குக் குறைவாக ஒதுக்கீடு செய்தது என்பது பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.
பட்டியலினத் துணைத் திட்டத்திற்கு அமைச்சரகம் / துறைகள் ஒதுக்கீடு செய்த விபரம்
2016-17 2017-18 2018-19 2019-20 2020-21 2021-22
16.2 சதவிகிதத்திற்கு
மேல் ஒதுக்கீடு செய்தவை 7 9 9 20 20 17
15 சதவிகிதத்திலிருந்து
16 சதவிகிதம் வரை
ஒதுக்கீடு செய்தவை 5 6 6 0 0 0
15 சதவிகிதத்திற்கும்
கீழ் ஒதுக்கீடு செய்தவை 15 11 14 21 21 22
அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
பிரதமர் கையாளக் கூடிய பணியாளர் மற்றும் பொதுக்குறைகள் அமைச்சகம், பட்டி யலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பின்னடைவு பணியாளர்கள் காலி இடங் களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை இக்கடிதத்தில் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது மொத்தம் உள்ள இப்பகுதிக்கான 76,137 காலி இடங்களில் 26,472 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. இதில் அரசுக்கு அக்கறை இல்லை.
காவல் நிலையங்களில் பாகுபாடு
பட்டியலினத்தவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றால் அங்கு அவை எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதும் இல்லை என்றும் இக்கடிதம் ஒப்புக் கொள்கிறது. பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட அநீதி தொடர்பான வழக்குகளில் 3 சதவிகி தத்திலிருந்து 8 சதவிகிதம் வரையே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கள் குறித்த அனைத்து மாநிலங்களின் ஆலோ சனை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாநிலங்களும் எதார்த்த நிலைகளைக் குறிப்பிட்டனவே தவிர இதை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இது விஷயத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தனது 17.06.2022 கடிதத்தின் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் சில ஆலோச னைகளைத் தெரிவித்துத் தனது கடமையை முடித்துக் கொண்டுள்ளது. அதாவது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) உடனே பதிவு செய்ய வேண்டும்; எஃப்.ஐ.ஆர் மீது வழக்கு உடனே தொடுக்கப் பட வேண்டும்; பட்டியலின மக்கள் குடி யிருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு கொடுக்கப் பட வேண்டும் போன்றவற்றில் கவனம் இல்லை என்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இப்பிரச்சனையை மேலும் மேலும் உறுதியோடும், வலுவோடும் எடுத்துச் செல்லும். இதற்கான போராட்டத்தில் கட்சி எப்போதும் முன்னணியில் நிற்கும்.
இதர பிரிவினருக்கும், பட்டியலினத்தவருக்கும் இடைவெளி
(சதவிகிதத்தில்)
விபரம் இதரர் பட்டியலினத்தவர்
எழுத்தறிவு 72 63.5
ஊட்டச்சத்து
குறைபாடு
(மகளிரிடம்) 33 41.2
குழந்தைகளிடம்
குறைந்த எடை 39.1 47.9
வீட்டு வசதி 66.1 38.3
கழிப்பிடம் இல்லாத
நிலைமை 49 65
கிராமப்புற வறுமை 14.9 20.6
நகர்ப்புற வறுமை 14.5 25.3
இடைவெளி குறையவில்லை
பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் சமூகத்தில் இவர்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது என்பதாகும். ஆனால் கீழ்க்கண்ட தகவல் இடைவெளி குறையவில்லை என்பதையே விளக்குகிறது. இந்த இடைவெளியை மேலும் குறைத்திட அரசு முன்வர வேண்டும்.
தலித் தொழில் முனைவோருக்கு வங்கிக் கடன்
சமூகத்தில் பின்தங்கியுள்ள பட்டியலினத்தவர்கள் தொழில் தொடங்கி வங்கிக் கடன் பெறுவது என்பதும் கவனிக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது. ரிசர்வ் வங்கி இதில் 2011-12க்கான தகவலைக் கொடுத்து, இது 33.8 சதவிகிதம் குறைந்துள்ளது என்ற தகவலைத் தந்துள்ளது. இக்கடிதத்தில் இது தவிர ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ்ப் பட்டியலினக் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிக வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை, படிக்கும் குழந்தைகள் பற்றிய எண்ணிக்கைகளும் தரப்பட்டுள்ளன.