மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் கிழக்குகாட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி இராஜேஸ்வரி மரணம் குறித்து மனிதம் அமைப்பின் சார்பாக உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியீடு

Untitled 1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்று (03.12.2022) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பெரம்பலூர் மாவட்டம், வேப்பத்தட்டை ஒன்றியம், நூத்தபூர் ஊராட்சி, கை.களத்தூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி இராஜேஸ்வரி மரணம் குறித்து மனிதம் அமைப்பின் சார்பாக உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியிட்டு இதன் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மனிதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, எம்.ஜெ.லெனின் மற்றும் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பத்தட்டை ஒன்றியம், நூத்தபூர் ஊராட்சி, கை. களத்தூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்த்த 17 வயது மாணவி இராஜேஸ்வரி மரணம் சம்பந்தமாக, 2022 நவம்பர் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனிதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் அமைப்பின் மாநில குழு உறுப்பினர்கள் சேலம் எம்.குணசேகரன், வழக்கறிஞர்கள் வி.ரங்கராஜன், எம்.ஜே.லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாலர் பே.ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கே.எம்.சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஏ.முருகேசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட குழு உறுப்பினர் ச.பிரியா ஆகியோர் உண்மை அறியும் குழுவில் இடம் பெற்று கண்டறிந்த தகவல்களை கீழே கொடுத்துள்ளோம்.

                  மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு அறிக்கை

நடந்த சம்பவம்

          பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பத்தட்டை ஒன்றியம், நூத்தபூர் ஊராட்சி, கை. களத்தூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் ஆசாரி சமூகத்தை சேர்ந்த ந.இராஜேந்திரன் – பாக்கியம் தம்பதிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். மூத்த பெண் பெயர் சரண்யா (23) க/பெ ராசாராம், அடுத்த மகன்  செந்தில்குமார் (20), அடுத்த மகள் ராஜேஸ்வரி (17) கடைசி மகன்  முருகேசன் (15). ஊரின் வெளிபுறத்தில் வயல் வெளியோடு  இவர்களுக்கு சொந்த இடத்தில் ஓட்டு வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

          மூன்றாவது மகளான ராஜேஸ்வரி உள்ளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி பளியில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தார். இவரை கடந்த 31.08.2022 அன்று இரவு இவரது வீட்டிற்கு பின்புறம் வசித்து வரும் மணிகண்டன் த/பெ இராமசாமி (29), இராமசாமி த/பெ சோலை கவுண்டர், இராணி க/பெ இராமசாமி,  மாரிமுத்து த/பெ வீராசாமி ஆகியோர் மயக்க மருந்து தெளித்து ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர்.   

          31.08.2022 அன்று இரவு 12 மணி அளவில் மாணவி ராஜேஸ்வரியின் தந்தை இராஜேந்திரன்  கை.களத்தூர் காவல் நிலையம் சென்று தனது மகளை காணவில்லை என்று புகார் சொன்னபோது, காவல் நிலையத்தில் இருந்த காவலர் தனது மேல் அதிகாரிக்கு தொலைபேசியில் பேசிவிட்டு காலையில் வரும் படி அனுப்பிவிட்டார் (இராஜேந்திரனுக்கு அந்த காவலர் பெயர் தெரியவில்லை)

          01.09.2022 காலை காவல் நிலையம் சென்ற இராஜேந்திரனை,  சிறப்பு உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன் விசாரித்து புகார் எழுதி வாங்கி உள்ளார். அந்த புகாரில் மேலே குறிப்பிட்டுள்ள உள்ள, கடத்தியவர்களின் பெயரை முழுமையாக இராஜேந்திரன் சொல்லி உள்ளார். அதுமட்டுமில்லாமல், தன் மகன் செந்தில்குமாரிடமிருந்து மணிகண்டன் போன் நம்பரையும் வாங்கி கொடுத்துள்ளார். உடனடியாக சி.உ.ஆய்வாளர் ரவிச்சந்திரன் அந்த மணிகண்டனுக்கு போன் செய்து விசாரித்த போது ’’நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், நாளை தான் வருவேன்’’ என கூறி உள்ளான். அதற்கு சி.உ.ஆய்வாளர் ரவிச்சந்திரன் ”அந்த பெண் மைனர் இந்த திருமணம் செல்லாது” எனகூறி உடனே அழைத்து வரவேண்டும் என கூறி உள்ளார்.

          அதன் பின் இராஜேந்திரனிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி விட்டார். 31.08.2022 அன்று கடத்தி செல்லப்பட்ட மாணவி இராஜேஸ்வரி, 03.09.2022 மாலை 3 மணி அளவில்  கை.களத்தூர் காவல் நிலையத்தி இருப்பதாக தகவல் வந்து, அவரது தந்தை தனது மகளை பார்க்க சென்றுள்ளார்.  அங்கு தனது மகள் கடத்தபட்ட போதுபோட்டிருந்த அதே ஆடையுடன் சற்று மயக்க நிலையில் இருந்துள்ளார்.  காவல் நிலையத்தில் விசாரனையின் போது ”நான் சமயபுரம் கோவிலுக்கு சென்று வந்தேன்” என கூறி உள்ளார்.

          அதை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ”நீ உனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளாய், இதோ உன் மகள் வந்துவிட்டாள் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு அழைத்து செல்” என கூறி தயாரக எழுதி வைத்திருந்த மனுவில் இராஜேந்திரனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்.

          அதன் பின் பலமுறை மணிகண்டன் த/பெ இராமசாமி (29), இராமசாமி த/பெ சோலை கவுண்டர், இராணி க/பெ இராமசாமி,  மாரிமுத்து த/பெ வீராசாமி ஆகியோர் அவ்வப்போது இராஜேந்திரன் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளனர். இதன் உச்சமாக கடந்த 25.10.22 அன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள வாய்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்த மாணவி இராஜேஸ்வரியிடம் இராமசாமியும், மாரிமுத்துவும் செல்போனில் உள்ள ஆபாச படத்தை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி இராஜேஸ்வரி கிராம மக்களால் நெருப்பு மருந்து என அழைக்கப்படும் PARANEX என்ற களைக்கொல்லி மருந்தை அருந்திவிட்டார்.  உடனடியாக அருகில் உள்ள வீரனூர்  ”அருண் கிளினிக்” என்ற மருத்துவமணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்டுவிட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியில் சேலம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.

இதற்கிடையில் மாணவியின் கைப்பட எழுதிய கடிதம் பெற்றொர்களுக்கு கிடைத்துள்ளது.

மாணவியின் கடிதம்  (இணைப்பு -1)

          31.08.2022 அன்று இரவு பக்கத்து வீட்டு ராணி என்பவர் என்னை அழைத்து பேசி என்னுடைய சட்டிரிபிகேட்டை பொய் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டாள். நான் பாத்ரூம் சென்றபோது பக்கத்து வீட்டில் உள்ள ராணி, ராமசாமி, மணி ஆகிய் மூவரும் மயக்க மருந்து தெளித்து கடத்தி சென்றனர், நான் சென்றது ஒரு ஆட்டோ மற்றும் அதில் இருவர் இருந்தார்கள். அறை மயக்கத்தில் கல்யாணம் செய்து, நான் விருப்ப பட்டு கல்யாணம் செய்ததாக சொல்ல வைத்தார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் கொலை செய்வேன் என்றும் என்னை தவறாக படம் பிடித்து வைத்துக்கொண்டும் மிரட்டினார்கள். என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்கள். மறுநாள் சமயபுரம் கோவிலுக்கு சென்றதாக சொல் என்று சொல்லி கட்டாய படுத்தினார்கள் இல்லையென்றால் தவறாக படம் பிடித்து வைத்து இருப்பதை உன் அண்ணனுக்கு அனுப்பினால் உன் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் என மிரட்டினார். மணி என்பவர்தான் மிரட்டினார். மன குழுப்பத்துடன் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று கோவிலுக்கு சென்றதாக சொன்னேன். தினமும் என்னை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிரட்டுகிறார்கள். ராமசாமி என்பவர் மேஎஜர் ஆனதும் உன்னை கடத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர்தான் காரணம். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் காரணம் இல்லை. என் தற்கொலைக்கு இவர்கள் நால்வர்கள்தான் காரணம். என் குடும்பத்தை துன்புறுத்த வேண்டாம். என் குடும்பத்தார் என்னை துன்புறுத்தவில்லை. மாரிமுத்து என்பவர் செல்போனில் உள்ள ஆபாச படத்தை காண்பித்து மிரட்டுகிறார்.

இப்படிக்கு பாதிக்கபட்ட பெண்

ரா ராஜேஸ்வரி

(கல்யாணத்தில் இருந்தவர்கள் சாந்தி, சத்யா, சத்யாவின் கணவன் மாரிமுத்து)

          மேற்கண்ட  கடிதத்தை எழுது வைத்துவிட்டுதான் அந்த மாணவி விஷம் அருந்தி உள்ளார்.

          மாணவி இராஜேஸ்வரி மருத்துவமணையில் இருக்கும்போது அவருடன் இருந்த அவரது சகோதரி சரண்யா எமது உண்மையறியும் குழுவிடம்  கூறியதாவது:

          கடந்த தீபாவளிக்கு மறுநாளான 25 ஆம் தேதி  எனது தந்தை போன் செய்து தங்கச்சி மருந்து குடித்துவிட்டாள் சேலம் மருத்துவமணையில் சேர்த்துள்ளோம் என கூறினார். நான் உடனடியாக மருத்துவமணை சென்றேன். இந்த களைக்கொல்லி மருந்து மிகவும் ஆபத்தனது பிழைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறினர். இதற்கிடையில் 28.10.22 அன்று ஒரு பெண் காவலர் (பின்னர் விசாரித்ததில் அவர்  காவலர் புஷ்பா  என அறிந்துக்கொண்டோம்)  என் தந்தையிடன் எதிர் தரப்பினரிடம் சமாதானமாக போகும் படி இரண்டு முறை வற்புறுத்தினார், ஆனால் என் தந்தை என் பொண்ணோட வாழ்க்கையே போயிடுச்சே என புலம்பியபடி சமாதானமாக போக ஒப்புக்கொள்ளவில்லை. பெண் காவலரிடம் ”என்னம்மா மணிகண்டன் இப்படி பன்னிட்டானே என்ன நடவடிக்கை எடுக்கப்போறீங்க” என்று கேட்டதற்கு, ”உங்க பொண்ணு  பல் இளிக்காமலா அவன் துக்கிட்டு போயிருப்பான்” என்று அலட்சியமாக கூறினார். இராஜேஸ்வரியிடம் செல்போனில் வீடியோ எடுத்து வாக்கு மூலம் வாங்கிக்கொள்கிறேன் என சொல்லிவிட்டு என் தங்கையிடம் நடந்ததை கேட்டார்.

          அதற்கு என் தங்கை ”என்னை ஆட்டோவில் கடத்திச்சென்று திருச்சியில் ஒரு குடோனில் அடைத்து வைத்து தாளி கட்டினார்கள், இரவு பாலியல் வன்புணர்வு செய்தார்கள்” என்று கூறினார். 

          அதன் பின்னர் எனது தங்கையிடம் நான் என்ன நடந்தது என்று கேட்டேன் அதற்கு அவள் மேற்கூறியதையே கூறினார்.

          மேலும் மாணவி இராஜேஸ்வரியின் அண்ணன் செந்தில்குமார் நமது குழுவிடம் பேசும் போது: சேலம் மருத்துவமணையில் நீதிபதி வந்து தனது தங்கையிடம் வாக்குமூலம் வாங்கி சென்றதாக  கூறினார். அதேபோல காவல்துறையினர் எனது சித்தப்பாவிடமும் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளனர் என்றார்.

காவல்துறையின் அலட்சியம்

          மைனர் பெண்ணை கடத்தி, கட்டாய திருமணம் செய்து, வன்புணர்வு செய்து, ஆபாச போட்டோக்களை எடுத்து அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளிகளை திட்டமிட்டு பாதுகாத்த காவல்துறையினர்,    மாணவி விஷம் அருந்திய தகவலை அறிந்த கை.களத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 28.10.2022  அன்று குற்ற எண்: 168/2022 ல் பிரிவு இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 341, 294(b), 354, 509, 506 (2) என வழக்கு பதிவு செய்யப்பட்டது (FIR 168/2022 இணைப்பு  -2)  

          மேற்கண்டவாறு  மிகவும் சாதாரண பிரிவுகளில் வழக்கிட்டதை அறிந்தவுடன்,  கடந்த 31.10.2022 அன்று மாணவி இராஜேஸ்வரியின் தந்தை இராஜேந்திரனும் அவரது மனைவி பாக்கியமும் சேலம் மாவட்ட ஆட்சி தலைவரிடம்  முறையிட சென்று அங்கு ஒரு மனுவை வழங்குகின்றனர். மனு எண் மற்றும் நாள் : TN/HOMEEX/PMB/COLLMGDP/31OCT22/4550509 & Deat; 2022/10/31 – (மனுவும் ரசீதும் இணைப்பு – 3)  அம்மனுவில் பெண் கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் தவறான முறையில் ஆபாச படத்தை எடுத்து காட்டி மிரட்டுதல் தொடர்பாக நடவடிக்கை கோரி உள்ளனர். அதே நாள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி இராஜேஸ்வரியின் அண்ணன் செந்தில்குமார், பாட்டி முத்தம்மாள், மாமன் வெங்கடேசன் ஆகியோர் சென்று மனு அளித்தனர். (புகார் மனு வரிசை எண்: 508 இணைப்பு – 4)

          மாணவி இராஜேஸ்வரியின் மருத்துவமணையில் இருக்கும் போது காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அவரது பள்ளி நோட்டுகள் மூன்றும், அவர் பயன்படுத்திய களைக்கொல்லி மருந்து பாட்டில், வீட்டின் வரைபடம் ஆகியவைகளை எடுத்து சென்றுள்ளனர்.

          இதற்கிடையில் மருத்துவமணையில் இருந்த மாணவி இராஜேஸ்வரியின் படுக்கைக்கு அருகில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தோழர்கள் மூலமாக சேலம் மாதர் சங்க தோழர் மகேஸ்வரி அவர்களுக்கு தகவல் வர, அவர் பெரம்பலூர் மாவட்ட மாதர் சங்க தலைவர் மகேஸ்வரி அவர்களுக்கு தகவல் தருகிறார். உடனடியாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியயை இப்பிரச்சனையில் தலையிடுகின்றனர். 

          இந்நிலையில் 53 மூன்று நாட்கள் மரணத்துடன் போராடிய மாணவி இராஜேஸ்வரி கடந்த 16.11.2022 அன்று மரணமடைகிறார். உடனடியாக மருத்துவமணை வளாகத்தில் திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பினர் கடுமையான போரட்டத்தை நடத்துகின்றனர். போராட்ட செய்தி இணைப்பு – 5) குற்றவாளிகள் மீது உரிய வகையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அதுவரை அந்த மாணவியின் பிணத்தை வாங்க மாட்டோம் என உறுதியா இருந்ததால் வேறு வழி இல்லாமல் சட்ட பிரிவுகளை மாற்றம் செய்யப்பட்டு பிரிவுகள் 341,294(b),363, 366, 366(A),506 (1),305 என இந்திய சட்டம் மற்றும் பிரிவுகள் 11(V)r/w12 Pocso Act என பதியப்பட்டது.  (சட்டபிரிவு மாற்றல் அறிக்கை – இணைப்பு – 6)

          17.11.2022 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்பினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்த சென்றபோது காவல்துறையினர் தடுத்தனர். பின்பு அமைப்பின் தலைவர்கள் மட்டும் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனு அளித்தனர். (போராட்ட செய்தி இணைப்பு – 7)

          மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்  அளித்த மனுவில் “கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தற்கொலைக்கு தூண்டுதல், ஆபாச புகைப்படம் எடுத்தல் பிரிவுகளில் வழக்கிட வேண்டும் என்றும்,  குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த கை.களத்தூர் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் மீது நடவடிக்கை” எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். (மனு இணைப்பு – 8)

          அதன் பின்னர் காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிபாளர் திரு. மணி இ.க.ப அவர்கள் பேச்சு வார்த்தையில் கை,களத்தூர் காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், சேலம் மருத்துவமனையில் மாணவியின் தந்தையிடம் பேரம் பேசிய பெண்காவலர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சம்பந்தபட்ட காவல் நிலைய பெண்காவலர்கள் அணிவகுப்பு நடத்தப்படும், வேண்டுமானால் விசாரணை அதிகாரியை மாற்றுகிறோம் என உறுதி கூறினார்.

          பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் காவலர்கள் நூத்தபூரில் உள்ள மாணவி இராஜேஸ்வரியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு இரண்டு செல்போன்களையும், நோட்டுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதை அறிந்து உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டதும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திருப்பி அளித்தனர்.

களத்தில் சந்தித்தவர்கள்

          22.11.22 அன்று பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பத்தட்டை ஒன்றியம், நூத்தபூர் ஊராட்சி, கை. களத்தூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தில் உள்ள மாணவி இராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்றோம். கை.களத்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரமும் நூத்தபூர் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ தள்ளி இரண்டு ஊருக்குமான எல்லையில் உள்ளடங்கி காட்டு வயலுடன் வீடு உள்ளது. நூத்தபூர் கிராமத்தில் 12க்கும்  குறைவான ஆசாரி சமூக குடும்பங்களே உள்ளது. மிகவும் சிறுபான்மையாக சமூகமாக இக்கிராமத்தில் உள்ளனர். பெரும்பானமை சமூகமாக கவுண்டர்கள் உள்ளனர்.

          குற்றவாளியான மணிகண்டன் தாத்தா, மறைந்த சோலை கவுண்டர் இப்பகுதியில் நன்கு அறியப்பட்டவாராக உள்ளார். மணிகண்டன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் இராஜேஸ்வரியின் வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். இராஜேஸ்வரியின் வீட்டின் பின்புறம் மிக அருகில் மணிகண்டன் வீடு உள்ளது. இவர்கள் இடத்தை அடைத்துவிட்டால் வாகனத்தில் செல்ல இயலாது. இவர்கள் காட்டை வாங்கினால்தான் அல்லது இணைத்துக் கொண்டால்தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு நிரந்தர வழி கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது.

          நவம்பர் 24 ஆம் தேதி நாம் சந்தித்த இராஜேஸ்வரியின் மூத்த சகோதரி சரண்யா இதை உறுதி படுத்தும் விதத்தில் எங்கள் நிலத்தின் மீது அவர்களுக்கு எப்போதும் கண் இருந்தது. என்னையே அவர்கள் என் திருமணத்திற்கு முன் கடத்த பார்த்தார்கள். நான் தப்பிவிட்டேன் இப்போது என் தங்கை மாட்டிக்கொண்டாள் என்று குறிப்பிட்டார்.

          வாசலுக்கு அடுத்து உள்ள சுவற்றில் இராஜேஸ்வரி புகைபடமாக இருக்க, காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருந்த அவர்களது ஓட்டு வீட்டில் இராஜேஸ்வரியின் தந்தை இராஜேந்திரன், தாயார் பாக்கியம், அண்ணன் செந்தில்குமார், தம்பி முருகேசன், பாட்டி முத்தம்மாள் ஆகியோரை சந்தித்து  நடந்த சமபவங்கள் குறித்து உரையாடினோம். 30 வயதுடைய மணிகண்டன் 17 வயதுடைய தங்கள் குழந்தையை கடத்தி சென்று செய்த அட்டூழியத்தின் அதிர்ச்சி கலையாமல் கண்ணீருடன் பேசினார்கள்.

          24.11.2022 அன்று கை.களத்தூர் காவல் நிலையம் சென்ற போது காவல் நிலையத்தில் அஞ்சலி, மேனகா என்ற இரு பெண் காவலர்கள் இருந்தனர். உதவி ஆய்வாளர் பழனிசாமி வெளியே சென்றிருப்பதாக கூறினர், சிறப்பு  உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறினர்.

11.22 AM; 9498159364 என்ற உதவி ஆய்வாளர் பழனிசாமி அவர்கள் எண்ணிற்கு 9488763666 என்ற எண்ணிலிருந்து 24.11.2022 அன்று தொடர்பு கொண்டோம். அவர் எடுக்கவில்லை. பின்னர் 11.24 AM மணிக்கு அவர் அழைத்தார். நாம் இராஜேஸ்வரி மரணம் தொடர்பாக தங்களை சந்திக்க வந்துள்ளோம் என கூறியவுடன். நான் கோர்ட் டூட்டிக்கு செல்கிறேன் என்றார். அதற்கு நாம் பரவாயில்லை அடுத்து மாவட்ட கண்காணிபாளர் அலுவலகம்தான் வருகிறோம். பெரம்பலூரில் சந்திக்கலாமா என்றோம். சரி வாருங்கள் என்றார்.

          அதற்கிடையில் மங்களம்மேடு காவல் நிலையத்தில் ஆய்வாளர் நடராஜனை சந்திக்க சென்றோம். அவர் இறையூர் சென்றிருப்பதாக காவல் நிலையத்தில் கூறினர்.

          12.52 PM, 12.54 PM, 12.55 PM, 12.57 PM என தொடர்ந்து தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் 12.59 PM மணிக்கு உதவி ஆய்வாளர் பழனிசாமி 8248829418 என்ற வேறு ஒரு எண்ணிலிருந்து 948876366 என்ற நமது எண்ணுக்கு 24.11.2022 அன்று அழைத்து நான் கோர்ட்டுகுதான் வருகிறேன் என்றார்.

          முப்பது நிமிடங்கள் காத்திருந்த பின்னர் 01.25 PM க்கும் மீண்டும் போன் செய்தோம் அவர் எடுக்கவில்லை. மீண்டும் 01.31 PM க்கு போன் செய்த போது அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தார்.

அதேபோல…

          இராஜேஸ்வரி கடத்தபட்ட போது சமாதானம் எழுதி வாங்கி அனுப்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன் அவர்களுக்கு 11.40 AMக்கு  அவரது 9498159398 என்ற எண்ணிற்கு 9488763666 என்ற எண்ணிலிருந்து 24.11.2022 அன்று தொடர்பு கொண்டோம். நாம் யாரென்று விசாரித்தார். நாமது விபரங்களை கூறி 31 ஆம் தேதி கடத்தபட்ட இராஜேஸ்வரி வழக்கில் எதற்காக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கேட்டோம்.

          “இதையெல்லாம் போனில் பேசமுடியாது, நேரில்தான் பேச வேண்டும் என்றார்”. எப்போது சந்திக்கலாம் என்று கேட்டபோது ”நான் மெடிக்கல் லீவில் இருப்பதால் டிசம்பர் 4 ஆம் தேதிதான் வரமுடியும் என்று கூறிவிடார்.

          சேலம் மருத்துவமணையில் சமாதானமாக போகச்சொன்ன, இராஜேஸ்வரி நடத்தை குறித்து இழிவாக பேசிய காவலர் புஷ்பா அவர்கள் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தார்.

          இறுதியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. உடனடியாக அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு “எங்கள் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ்பாபு தங்களை சந்திக்க விரும்புகிறார்” என செய்தி அனுப்பினார். பதில் இல்லாத காரணத்தால்

          1.50 PM க்கு 6374111389 என்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எண்ணிற்கு 9488763666 என்ற எண்ணிலிருந்து 24.11.2022 அன்று நாம் தொடர்பு கொண்டோம். போனை எடுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ”என்ன விசயம்” என்று கேட்டார். தங்களை சந்திக்க சென்னையிலிருந்து வந்துள்ளோம் என்றோம். மீண்டும் “என்ன விசயம் சொல்லுங்க” என்றார். கை.களத்தூர் காவல் நிலைய எல்லை கிராமத்தை சேர்ந்த மாணவி இராஜேஸ்வரி மரணத்தில் கை.களத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் என்று துவங்கியதுமே…

          ”இல்லை, இந்த பிரச்சினை முடிந்துவிட்டது. உங்கள் கட்சிகாரர்கள் வந்தார்கள், பேசினார்கள், வழக்கெல்லம் போடபட்டுவிட்டது. இது குறித்து இனி நான் பேச தயாரில்லை என்று கூறினார்.” மிக்க நன்றி நாங்கள் அப்படியே பதிவு செய்து கொள்கிறோம் என கூறினோம்.    

          மாணவி இராஜேஸ்வரி 10ஆம் வகுப்பு படித்த நூத்தபூர் உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியரை சந்தித்தோம். அவர் மாணவி குறித்து மிகவும் உயர்வாக குறிப்பிட்டார். பள்ளியின் போர்டில் ஒவ்வோர் ஆண்டும் முதலிடம் பிடிக்கும் மாணவியின் பெயர் குறிப்பிடும் பலகையில் இரா.இராஜேஸ்வரி 414 மார்க் முதலிடம் என குறிக்கப்படுள்ளது.

          அதேபோல கை.களத்தூர் மேல்நிலைப் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பில் 538 மார்க்குகள் பெற்று பள்ளியில் இரண்டாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக தேர்ச்சியானதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டார். இவர்தான் மேற்படிப்புக்கான கவுன்சிலிங் உதவிகளை செய்துள்ளார்.

          அதேபோல காவல்துறையினர் இப்பள்ளிக்கு வந்து மாணவி இராஜேஸ்வரியின் மார்க் ஷீட்டை பெற்றுச்சென்றதையும் அறியமுடிந்தது.

சந்தேகங்கள்:

1. 31.08 22 அன்று புகார் மனுவை பெறாமல் கை.களத்தூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் திருப்பி அனுப்பியது ஏன்?

2. 01.08.22 அன்று கடத்திவர்கள் பெயர்களை மாணவியின் தந்தை இராஜேந்திரன் குறிப்பிட்டு சொல்லியும் புகார் மனுவை பெற்றுக்கொண்ட கை.களத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?

3. புகாரை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன் மாணவியின் தந்தை இராஜேந்திரனிடம் வெற்று காகிதத்தில் கையெப்பம் வாங்கியது ஏன்?

4. போனில் கடத்திச்சென்ற மணிகண்டனிடம் பேசிய சி.உ.ஆய்வாளர் ரவிச்சந்திரன் மைனர் பெண்ணை திருமணம் செய்ததை அறிந்த பின்னும் அமைதி காத்தது ஏன்?

5. ஒரு மைனர் பெண் காணவில்லை என்ற புகார் மனு வந்ததை அறிந்தும் கை.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6. மாணவி தொலைந்து இரு தினங்களாக கை.களத்தூர் காவல் நிலையத்திற்கு பொறுப்பு அதிகாரியான மங்களமேடு ஆய்வாளர் நடராஜன் இப்பிரச்சனையில் தலையிடாதது ஏன்?  

7. மாணவியை கடத்தி சென்ற மணிகண்டன் குழுவினர் காவல் நிலையத்தில் மாணவியை கொண்டு வந்து ஒப்படைக்கும் போது வழக்கு பதிவு செய்யாமல் சமாதானம் பேசி மாணவியின் தந்தையிடம் எழுதி வாங்கியது ஏன்?

8. குற்றவாளிகளை காப்பாற்ற கை.களத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் கடுமையாக முயற்சிப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன? 

9. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சொன்னது போல பெண் காவலர்கள் அணிவகுப்பு நடத்தாமல் அவர்களை பாதுகாத்தது ஏன்? 

          மேற்கண்டவைகளில் 1 – 7 பணிகளை காவல்துறையினர் முறையாக செய்திருந்தால் மாணவியின் வீட்டிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்திருக்காது, மாணவி இராஜேஸ்வரி விஷம் அருந்தி இருக்க மாட்டார். தேவையில்லாமல் ஒரு மரணம் நிகழ்ந்திருக்காது.

#  மாணவி விஷம் அருந்திய பின்பும் கூட முதல் தகவல் அறிக்கை மிகவும் எளிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மைனர் பெண்ணை கடத்தியது, கட்டாய திருமணம் செய்தது, தற்கொலைக்கு தூண்டியது, போக்சோ போன்ற எந்த  பிரிவுகளும் சேர்க்கபடவில்லை.

# மாணவியின் மரணத்திற்கு பின்னர் நடந்த போராட்டத்திற்கு பிறகுதான் மேற்கண்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டது. ஒருவேலை மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர் வாலிபர் அமைப்புகளும் போராடாமல், பிணத்தை வாங்க மாட்டோம் என உறுதியா நிற்காமல் இருந்திருந்தால் இந்த வழக்குகள் கூட போட்டிருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

# குற்றவாளி மணிகண்டன் தரப்பினர், தங்கள் வீட்டிற்கும், நிலத்திற்கும் செல்ல வழி இல்லாத காரணத்தால் கட்டாய திருமண உறவு மூலம் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டனரா என்ற கோணத்திலும் யோசிக்க வேண்டி உள்ளது.

பரிந்துரைகள்

1.       மாணவி இராஜேஸ்வரி கட்டாய திருமணம் செய்யப்பட்டு வன்புணர்வு செய்யபட்டதாக தெரிய வருவதால் போக்சோ சட்ட பிரிவு 3 மற்றும் 4, குழந்தை திருமண தடை சட்டம் 9 மற்றும் 10 ன் கீழ் கூடுதல் பிரிவுகள், தற்கொலைக்கு துண்டிய குற்றப்பிரிவு எண்களையும் மற்றும் ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய குற்றப்பிரிவு எண்களையும் கூடுதலாக சேர்த்து முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.

2.       மாணவி இராஜேஸ்வரி கடத்தலின் போதும், திருமணத்தின் போதும் உடன் இருந்ததாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆட்டோவில் இருந்த இருவர் மேலும் சாந்தி, சத்யா, சத்யாவின் கணவர் ஆகியோர்களையும்  மேற்கண்ட வழக்குகளில் இணைத்து கைது செய்திட வேண்டும்.    

3.       காவல்துறை தக்க நேரத்தில் கடமையை செய்திருந்தால் மாணவி இராஜேஸ்வரிக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது. குற்றவாளிகளை காப்பாற்றும் குற்றத்தை செய்த கை.களத்தூர் உதவி ஆய்வாளர் பழனிசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன், காவலர் புஷ்பா, ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.       ஊரின் வெளியில் சிறுபான்மை சமூகமாக வசிக்கும் மாணவி இராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு பாதுகாப்பும், உரிய இழப்பீடும் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

5.       இந்த வழக்கு முடிந்துவிட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகிறார். இது குறித்து பேசவே அவர் தயாராக இல்லை. இனியும் இந்த மாவட்ட  காவல்துறை இந்த வழக்கில் உள்ள உண்மையை விசாரிக்காது என்பதால் இந்த வழக்கை முதலிலிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்.