செய்தி அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!

Firefox Screenshot 2022 12 31t11 41 24.379z

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

2022-ஆம் ஆண்டின் படிப்பினைகளை அனுபவ உரமாக்கி பூத்துவரும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் சமத்துவ உலகைப் படைப்பதற்கான போராட்டங்கள் மேலும் வலிமையோடு நடக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும்.

உலகம் முழுவதும் வல்லரசு நாடுகளின் பிடி இறுகி வந்தபோதும், அதை எதிர்த்த மக்கள் போராட்டங்களும் எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயமாக்கல் கொள்கையால் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் கொடூரமாக சுரண்டப்படுகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாப வெறிக்கு உலக மக்களின் வாழ்க்கை பணயமாக வைக்கப்படுகிறது. லத்தீன்-அமெரிக்க நாடுகளில் சோசலிச மற்றும் இடதுசாரி சக்திகள் ஆட்சிக்கு வந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.

முதலாளித்துவத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் வெற்றியில் தான் இந்தப் பூவுலகின் அமைதியும் மக்களின் எதிர்காலமும் அடங்கியுள்ளது.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அரசியல் சாசன விழுமியங்களான மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி என அனைத்தையும் அரித்து தின்று கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் சனாதனத்தின் சாரமான மனுஸ்மிருதியை வைக்கத் துடிக்கிறது.

ஒன்றிய பாஜக அரசு, அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் என அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்து வருகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை பல மடங்கு வீரியத்தோடு நடத்தும் ஆண்டாக இந்தாண்டு அமையட்டும்.

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் ஏவலாட்களாக செயல்படுகிறார்கள். இந்த அத்துமீறல் தடுத்து நிறுத்தப்பட்டால் தான் கூட்டாட்சியை பாதுகாக்க முடியும். தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் புறக்கணித்து இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை திணிக்கத் துடிப்பது இந்திய ஒருமைப்பாட்டையே அர்த்தமிழக்கச் செய்துவிடும். அனைத்து மொழிகளும் பன்முகப் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியாவிலேயே முன்னுதாரணமான அரசாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு பல்வேறு துறைகளில் தடம் பதித்து முன்னேறி வருகிறது.

தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்திற்கென்று தனி கல்விக் கொள்கை உட்பட பல்வேறு நல்ல விசயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், சாதிய ஒடுக்குமுறைகள், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள், தீண்டாமைக் கொடுமைகளின் தீவிரத் தன்மை அதிகரித்துள்ளன. இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த கொடுமை தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவற்றிற்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றிய – மாநில அரசுகளுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது. இதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெறுப்பு அரசியல் ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரத்தால் மோசமாக முன்னெடுக்கப்படுகிறது. நம் நாடு சுதந்திர தின பவள விழாவை கொண்டாடி முடித்துள்ள நிலையில் விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலால் உருவான மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, இறையாண்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றை இந்திய மக்கள் பாதுகாப்பதற்கு முன்னேறிச் செல்லும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமையட்டும் என நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம்.