செய்தி அறிக்கை

நாமக்கல்லில் இளம்பெண் படுகொலை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வற்புறுத்தல்!

01 Copy

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர் ஊராட்சி, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி கடந்த 11.3.2023 அன்று ஆடு மேய்க்கச் சென்றவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

            இந்த வழக்கில் அப்பகுதியில் ஆலைக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த 17வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்த கொடூரமான பாலியல் வன்புணர்வு படுகொலையை ஒரு சிறுவனால் மட்டுமே செய்திருக்க முடியாது என அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகம் உருவாகி உள்ளது. உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிட வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

            எனவே, இப்பிரச்சனையில் தமிழக அரசு உடன் தலையிட்டு மேற்கண்ட வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திட வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்டவரின் குழந்தைகளின் எதிர்கால வாழ்வினை பாதுகாப்பதற்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் அப்பகுதியில் பொது அமைதி நிலவிட வருவாய் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.