கடிதங்கள்

கட்டி முடிக்கப்படும் வாரிய வீடுகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கே ஒதுக்கீடு செய்திடுக! சிபிஐ (எம்) வலியுறுத்தல்

            தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சாந்தோம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் 1188 குடியிருப்புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நெச்சிக்குப்பத்தில் வாழும் மீனவ குடும்பங்களுக்கும் வழங்கிட வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.  இந்த வீடுகளில் 2021ல் டுமிங்குப்பம் பகுதியில் உள்ள வாரிய வீடுகள் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் 216 வீடுகளும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 108 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  எஞ்சியுள்ள 864 வீடுகளும் நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

            ஆனால் அரசு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக கடந்த ஏப்ரல் 26 அன்று டுமிங்குப்பம் மற்றும் செல்வராஜ் பகுதி மக்களுக்கு கூடுதலாக 324 வீடுகளை ஒதுக்கீடு செய்து குடியமர்த்த வாரிய அதிகாரிகள் முயற்சித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து 143, 146, 353, 427, 448 ஆகிய பிரிவுகளிலும், பி.பி.டி. சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து பாரதி, ரூபாஷ், ரவிக்குமார், கோசிமணி ஆகியோரை சிறையில் அடைத்துள்ளனர். இன்னும் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இப்பகுதி மீனவ மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவியுள்ளது. தமிழக அரசும், அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதிகளின்படி வீடுகள் ஒதுக்கப்படும் என்று நம்பியிருந்த மீனவ மக்களுக்கு இந்நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

            எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு எஞ்சியுள்ள 864 வீடுகளையும் நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்கிடவும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.