சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கை

உலகமே எதிர்பார்த்த நிலவுப் பயணம் வெற்றி சாதித்துக் காட்டிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சிபிஐ (எம்) வாழ்த்து

Photo 2023 08 23 19 00 54

மனித குலத்தை புதிய எல்லைக்கு எடுத்துச் சென்றுள்ள சந்திராயன் 3 விண்கலம், நிலவில் வெற்றிகரமாக இறங்கியிருக்கும் செய்தி பெரும் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இம்மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அவர்களது கடும் உழைப்பிற்கு நமது பாராட்டுக்கள். இம்மகத்தான சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த (விழுப்புரம்) வீரமுத்துவேல் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சிபிஐ (எம்) தெரிவித்துக் கொள்கிறது.

            இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் இந்த சாதனை, சுயசார்பு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதில் நமக்குள்ள திறனையும், அறிவியலை கைக்கொள்ளும் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.

            சந்திராயன் 2 இல் கிடைத்த படிப்பினையில் இருந்து கற்றுக்கொண்டு பிழைகளை நீக்கி அடுத்த முயற்சியை வெற்றிகரமாக்கியுள்ள விஞ்ஞானிகள் அனைவருக்கும் சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இந்தச் செய்தி, பல்வேறு மூட நம்பிக்கைகளை உடைத்து ஒவ்வொரு வீட்டிலும் அறிவியலின் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. அண்டத்தின் எந்தவொரு பகுதியும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டதல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

            அறிவியல் சிந்தனைகள் சமுதாயத்தில் பரவலாகும்போது அது தேச வளர்ச்சியில் மிக அற்புதமான பங்களிப்பை கொடுக்கும் என்பதை இந்த நிகழ்வும் நிரூபித்துள்ளது. சந்திராயன் வெற்றியை கொண்டாடுவோம், அறிவியல் சிந்தனையை உயர்த்திப்பிடிப்போம் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்