தீர்மானங்கள்மாநில செயற்குழு

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!

01 Copy 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 1:

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தில் சாதிப் பாகுபாட்டிற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது அந்த திட்டத்தின் மூலம் 3 பெண்கள் அர்ச்சகர் கல்வியை முடித்து பணியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் அர்ச்சகர் பணியில் நிலவி வந்த பாலின பேதத்திற்கும் முடிவுகட்டப்படும் என்ற செய்தி பெருமகிழ்ச்சி தருகிறது.

தமிழ்நாட்டில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆகலாம் என்ற உத்தரவு கடந்த 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு பல்வேறு தடைகள் எழுந்தன. இந்த நிலையில் கேரளத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண் அர்ச்சகர் நியமனங்கள் சாத்தியமாகின. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் பெற்று அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த ரம்யா, ரஞ்சிதா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய பெண்கள் தேர்ச்சி பெற்று அர்ச்சகர் பயிற்சியை தொடங்கவுள்ள செய்தி வந்துள்ளது. மேலும், 15 பெண்கள் அர்ச்சகர் படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர் என்றும், இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமான கோயில்களில் பெண் அர்ச்சகர்கள் பணியை தொடங்குவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியும் வந்துள்ளது.

இதன் மூலம், அர்ச்சகர் பணியில் நிலவிவந்த சாதி வேறுபாடுகளோடு, பாலின பேதமும் அகலத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். உறுதியோடு செயல்பட்டு இந்த மாற்றத்தை சாத்தியமாக்கியுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழ் நாடு அரசிற்கும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டை முன்னோக்கிச் செலுத்தும் இதுபோன்ற புரட்சிகரமான மாற்றங்களை மக்கள் கொண்டாடி வரவேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 2:-

பெண்களின் குடும்ப உழைப்பினை அங்கீகரிப்போம்! பாலின சமத்துவ நோக்கில் முன்னேறுவோம்! தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – சிபிஐ(எம்) வரவேற்பு

இன்றைய சமுதாய உற்பத்தி முறையில், பெண்களின் வீடு சார்ந்த உழைப்பு பெரும் பங்கு செலுத்துகிறது. விவசாயமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் அதற்கு தேவையான மனித வளத்தை உருவாக்குவதும், வளர்த்தெடுப்பதும், பராமரிப்பதும் பெண்களின் பணியாகவே உள்ளது. ஆனால், அதன் மதிப்பு பொருளாதாரத்தில் கணக்கிடப்படுவதில்லை. பெண்களை, வீட்டு உழைப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற முயற்சியை முதன் முதலில் முன்னெடுத்தது சோசலிச அரசாங்கமே. அவ்வாறு வீட்டு உழைப்பில் இருந்து பெண்களை விடுவிக்க முடியாதபோது, வீடுசார் உழைப்பிற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையும் இதனை தொடர்ந்து பேசி வருகிறது. ஆனாலும், உலகம் முழுவதும் அரசாங்கங்கள் இதனை ஏற்று நடவடிக்கைகள் எடுப்பது குறைவே.

இந்த சூழலில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னோட்டமாக இன்றே பல மகளிருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ 12,000 என்ற அளவில் பெற்று பலனடையும் இந்த திட்டத்தை சிபிஐ(எம்) மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.

இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தும் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டுள்ள மகளிர் மேல் முறையீடு செய்யலாம் என அறிவித்திருப்பது நல்ல அம்சமாகும். மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென்ற சிபிஐ(எம்) கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல் மேலும் விடுபட்டுள்ளவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கிடும் வகையில் சில நிபந்தனைகளை தளர்த்திட அரசு பரிசீலிக்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.