இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.11.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
தீர்மானம் 2 :-
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது ஊராட்சி மன்ற தலைவர் அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து 29.10.2023 அன்று பட்டியலின மக்கள் குடியிருப்புக்களில் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து வீடுகளை அடித்து உடைத்து, தீ வைத்தும், மக்கள் மீது கற்களை வீசியும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இத்ததாக்குதலில் கொடுங்காயங்கள் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த கொடூரமானத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
காவல்துறை இந்தப் பிரச்சனையில், இரு தரப்பினும் கைது என்ற முறையில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையும் கைது செய்திருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, சிறையில் அடைக்கப்பட்ட பட்டியலின மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த கிராமத்தில் சுமூகமான நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
தீண்டாமை உள்ளிட்ட சாதி மேலாதிக்க கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது உரிய குற்ற நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுத்திட வேண்டும். அனைத்து கட்சி – அமைப்புகள் கொண்ட குழுக்கள் அமைத்து சாதிய சக்திகளை தனிமைப்படுத்திட வேண்டும். மக்கள் மத்தியில் அறிவியல் ரீதியான முற்போக்கு கருத்தியலை வளர்த்தெடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்