சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளனர். இந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து மக்கள் வரலாறு காணாத இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஒட்டுமொத்ததில் இவ்வியற்கை பேரிடர்களால் பொதுமக்களின் வாழ்விடங்கள், குடியிருப்புகள், கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், மீன்பிடித் தொழில், உப்பளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசமடைந்துள்ளன. வீடுகளில் அளவுக்கதிகமான வெள்ள நீர் புகுந்து வீட்டு உபயோகப் பொருட்களை நாசப்படுத்தியதுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளையும், சேறுகளையும் அப்புறப்படுத்துவது பெரும் பணியாக உள்ளது. தொற்று நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழக அரசின் நிவாரண பணிகள் மற்றும் வழங்கி வரும் நிவாரணத் தொகைகள் ஓரளவு ஆறுதலை தருகின்றன. ஆனால், இப்பேரிடரில் தவிக்கும் மக்களை காப்பாற்ற ஆதரவு கரம் நீட்ட ஒன்றிய அரசு இதுவரை முன்வரவில்லை. தமிழக முதலமைச்சர் புயல் மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென்று பிரதமரை சந்தித்து நேரில் வற்புறுத்தியபோதும், இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்பது ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கை காட்டுகிறது. நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு மறுபக்கம் தமிழக அரசையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
வரலாறு காணாத புயல், தொடர் மழை, வெள்ள பாதிப்பிற்கு பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட 21 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வற்புறுத்தி 2024 ஜனவரி 3 அன்று சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்