மாநிலக் குழு

மிக்ஜம் புயல்: தமிழக அரசு கோரியுள்ள ரூ. 5060 கோடி இடைக்கால நிவாரணத்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்!

Cpim 1 Copy

மத்தியக்குழுவை அனுப்பி வைத்து வெள்ள பாதிப்புகளை கணக்கிட வேண்டும்!

ஒன்றிய அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

மிக்ஜம் புயல் மற்றும் கனமழை சென்னையில் பல்வேறு பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதுவரை 17 பேர் பலியான துயர செய்திகள் வந்துள்ளன. பாதிப்புகள் குறித்தும், மாநில அரசு கூடுதலாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

            தற்போது, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், வடக்குப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளிக்கரணை, பெருங்குடி, முடிச்சூர், காரப்பாக்கம், வேளச்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.  தாம்பரம் - வேளச்சேரி சாலையும், பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை உள்ளிட்டு அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. படகு அல்லது வான் வழியாகவே நிவாரணப் பொருட்களை வழங்க முடியும் என்ற நிலைமை உள்ளது.

            மதுரவாயல் மற்றும் பெரியமேடு பகுதிகளில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது. திருவொற்றியூர் கொசஸ்தலை ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகள் உருவாகியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நெல் பயிர் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உணவு விநியோக தொழிலாளர்கள் நெருக்கடியில் உள்ளார்கள். ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கை கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

            இந்நிலையில் தமிழக அரசு கேட்டுக் கொண்ட அடிப்படையில் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாயை அரசு உடனடியாக அளித்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது. இதற்கு முந்தைய இயற்கை பேரிடர்களின் போதெல்லாம் மாநில அரசு கேட்ட உதவிக்கும்  ஒன்றிய அரசு வழங்கியதற்கும் இடையே  மலைக்கும் மடுவுக்கும் உள்ள  இடைவெளி இருந்தது என்பதை அறிவோம். இந்த முறையாவது முழுமையான தொகையை வழங்கிட வேண்டும். இது கருணை அல்ல, கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

            எனவே, வரலாறு காணாத மழைப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை  பாதுகாப்பதற்கான கடமையை ஒன்றிய அரசு செய்திட வேண்டும், தமிழக அரசு கோரியுள்ள ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்  என வலியுறுத்துகிறோம்.

            மேலும், தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி மழை, வெள்ளம் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்