மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த பெருமழை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு பகுதியும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாழ்பட்டு போயின. 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி பழுதாகியுள்ளன. இத்தகைய கடும் பாதிப்புகள் இருந்த போதிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பெருமளவு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இரவு – பகல் பாராமல் மீட்பு பணிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய மாநகராட்சி, உள்ளாட்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட ஊழியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ரூ. 5060 கோடி ஒன்றிய அரசிடம் கோரியது. ஒன்றிய அரசு மாநில அரசு கோரியுள்ள நிதியில் 10 சதவிகிதம் கூட வழங்கவில்லை. ஒன்றிய அரசு இதுகாறும் தமிழகத்தின் பால் கடைபிடித்து வரும் பாரபட்ச அணுகுமுறையை கைவிட்டு இயற்கை பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு கோரியுள்ள ரூ. 5060 கோடி இடைக்கால நிவாரண நிதியை உடன் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், வேளாண்மை மற்றும் கால்நடை பாதிப்புகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6000 தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மக்களுக்கு உதவிகரமாக அமைந்திடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் (குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும்) ஒருவர் கூட விடுபடாமல் நிவாரணத் தொகையினை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். வெள்ள நீரில் மூழ்கிய இரு சக்கர வாகனங்களுக்கும் பழுது நீக்கிட உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதேபோல, சிறு-குறு தொழில் நிறுவனங்களில் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் இயந்திரங்கள் பாதிப்படைந்துள்ளது. இத்தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் (இன்சூரன்ஸ் செய்யாத நிறுவனங்கள் உட்பட) உரிய நிவாரணங்கள் வழங்கிட வேண்டும்.
வடசென்னையில் பக்கிங்காம் கால்வாயில் வெள்ள நீரோடு எண்ணெய் கழிவுகளும் கலந்தது கால்வாய் ஓரங்களில் உள்ள வீடுகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் முழுமையாக பாதித்துள்ளது. இக்கழிவுகள் எவ்வாறு நீரோடு கலந்தது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு எண்ணெய் கழிவுகள் கலக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை அந்த நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
முந்தைய இயற்கை இடர்பாடு காலங்களில் ஏற்படாத வகையில் தகவல் தொலைதொடர்பு முழுவதும் சீர்குலைந்துள்ளது. இதனால் மக்கள் கூடுதலாக அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணத்தை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்.
உள்கட்டமைப்புகளை சீர்படுத்திட வேண்டும்
மழைக்காலங்களில் சென்னை மாநகரமும், அருகமை மாவட்டங்களும் சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அதிகரித்து வரும் நகர் மயம், சென்னையை நோக்கி அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து குடிபெயர்வது, வளர்ச்சி என்ற பெயரில் அடிப்படை கட்டுமானங்கள் சீர்குலைக்கப்படுவது, ஏரிகள் தூர்வாரி பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால் அடிக்கடி சென்னை மாநகரம் வெள்ள பாதிப்புகளுக்கு உட்படுகிறது. கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு, கூவம் ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நில காடு போன்றவைகள் பெரிய நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்கு குந்தகமின்றி பொருத்தமான குடியிருப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு தொலைநோக்கு பார்வையோடு கட்டமைப்புகளை பலப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உயர்மட்ட ஆணையத்தை அமைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
ஆர்.கே.நகரில் நிவாரணம் வாங்கச் சென்ற சிறுமி மரணம்
ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிவாரணம் வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி யுவஸ்ரீ (வயது 13) என்ற மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திடவும், இந்த மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்