வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மின்நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்திட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட வேண்டுகிறோம்.
பெறுதல்
மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
பொருள்: மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்திட கோருதல் தொடர்பாக:
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு அரசு நிவாரணங்களை அளித்து வருவதை வரவேற்கின்றோம்.
கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 7.12.2023க்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்களுக்கு 18.12.2023 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பகுதி மின் நுகர்வோர்களே இதனால் பயன்பெற முடியும். அதே சமயம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் பயன்பெறும் வகையில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு 30.12.2023 வரை நீட்டிக்க வேண்டுமெனவும், இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்