போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள பஞ்சபடியை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். டிசம்பர் மாதத்திலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்கிற காரணத்தினால் வேறு வழியின்றி வேலைநிறுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாது.
தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் இருந்த நிலையில் தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்த போதிலும் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ரூ. 1000/- மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பல்வேறு இடர்பாடுகளையும், சிரமங்களையும் ஏற்படுத்துவதுடன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையும் ஏற்படும். பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்களும் இந்த வேலை நிறுத்தத்தால் கவலையை சந்திக்கும் நிலை ஏற்படும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டுமெனவும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்