இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..
நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 என அனைத்து இடங்களையும் கைப்பற்றி மகத்தான வெற்றியை குவித்துள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட தமிழகம் மற்றும் புதுவை வாக்காளப் பெருமக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தனது நன்றியையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த சரித்திர சாதனையை சாத்தியமாக்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தோழர்கள் என அனைவருக்கும் கட்சியின் மாநிலக்குழு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறுவோம் என முழக்கமிட்ட பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல தொகுதிகளில் காப்பு தொகையை இழந்துள்ளதும், சில தொகுதிகளில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள பேராதரவுக்கு அடையாளமாகும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். வேட்பாளர்களுக்கு வாக்களித்த மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி வாக்காளர்களுக்கும், வெற்றிக்கு துணை நின்ற கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சி தோழர்கள் என அனைவருக்கும் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவே ஆகும். கடந்த முறை போல அவர்கள் நினைத்ததையெல்லாம் சட்டமாக்க முடியாத நிலையை இந்த தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என அவர்கள் கொண்டு வர நினைத்த சட்டங்களையும், திட்டங்களையும் அவர்களால் நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பது இந்தியாவின் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.
தேர்தல் நேரத்தில் பாஜகவின் தேர்தல் பத்திர மோசடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியதும் அவர்களின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் சர்வாதிகார மக்கள் விரோத, மனித விரோத காட்டாட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் நடத்தி வந்துள்ள போராட்டத்தின் விளைவாகவே பாஜக கூட்டணிக்கு கடிவாளம் இடுவதாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த பாஜகவுக்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் பதிலளித்துள்ளனர்.
மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற அரசியல் சட்ட விழுமியங்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் மன்றமாக நாடாளுமன்றம் அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்றபோதும் பாஜக தனது குதர்க்க புத்தியை காட்டவே செய்யும். தேர்தல் களத்தில் மட்டுமின்றி போராட்ட களத்திலும் இந்த பாசிச பாணி சக்திகளை முறியடிக்க சமரசமற்ற சமர்க்களம் காண உறுதியேற்க வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் சிபிஐ (எம்) மாநிலக்குழு அறைகூவி அழைக்கிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்