காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை துவங்குவதற்கு வழக்கமாக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். நடப்பாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது மிக குறைந்தளவே உள்ள நிலையில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இந்தாண்டும் மாநில அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வரவேற்கிறது.
மேட்டூர் அணையில் இவ்வளவு குறைவான அளவில் நீர்மட்டம் உள்ளதற்கு கடந்தாண்டு கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்காமல் சுமார் 99 டி.எம்.சி.யை நிலுவையில் வைத்துள்ளது முக்கிய காரணமாகும். தற்போதைய சூழலில் ஏறக்குறைய குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காவிரியில் கர்நாடக அரசு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் சாகுபடியை மேற்கொள்ள முடியும்.
எனவே, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய அளவு தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை காவிரி மேலாண்மை வாரியம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசும் காவிரியில் தண்ணீர் பெறுவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்