ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைதீர்மானங்கள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

கல்வியில் சமயப் பாடங்களை திணிக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை திரும்பப்பெற சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

Cpim 2 11111

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (27.08.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் – 2:

கல்வியில் சமயப் பாடங்களை திணிக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை திரும்பப்பெற சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் “முருகன் திருக்கோயில்களில் மாணவ – மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்துவது” என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதக் கோட்பாட்டையும் பரப்புவது அரசின் பணியாக இருக்க கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.  தமிழகம் கல்வித்துறையில்  மதச்சார்பின்மைமிக்க மாநிலமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்திற்கு என்று தனி கல்விக் கொள்கை அறிவித்து அதற்கான நிபுணர் குழுவையும் அமைத்து அதன் பரிந்துரைகளையும் அரசு பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது முருகன் மாநாட்டு தீர்மானங்கள்  கல்வியை மதச்சார்புடையதாக்குவது மட்டுமின்றி மாணவர்களையும் அறிவியல் சிந்தனைக்கு எதிராக வளர்த்தெடுக்கவே பயன்படும். மேலும் மாணவர்களை மத ரீதியாக பிளவுபடுத்துவது மதச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங்கள் கலகங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.  இதை முறியடிக்கும் நோக்கத்தில் அரசு பணிகளை மேற்கொள்வதை விடுத்து அறிவியலுக்கும், மதச்சார்பின்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், பிற்போக்கு வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாகவும் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது ஏற்புடையதல்ல. கல்வியில் சமயப் பாடங்களை புகுத்தும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்.