அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது. சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையும், நிரந்தர வருமானமும் சமூகத்தில் சிறு பகுதியினருக்குத் தான் இருக்கிறது. மிகப் பெரும்பாலானவர்கள் முறைசாராத் தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளுமே ஆவர். இத்தகைய பகுதியினர் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் சுமார் 7 கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேசன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.
எனவே அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குவதன் மூலம் 7 கோடி மக்கள் பயன் அடைய முடியும். எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்யாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.