தமிழ்நாடு அரசின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் மற்றும் அரசு இணைந்து அமைக்கும் தேடுதல் குழு மூலமாக, பரிந்துரை செய்யப்படும் நபர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, துணைவேந்தராக நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதில் 8 பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன் மூலம் பட்டமளிப்பு விழாக்கள் உள்ளிட்டு பல்வேறு நிர்வாகப் பணிகள் தாமதமாகிறது. தற்போது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கான துணை வேந்தர்களை தேடுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆளுநர் ஆர். என். ரவி
தேடுதல் குழுவில் மூன்று நபர்கள் இடம்பெறுவது பலகலைக் கழக சட்டத்தின் படியான ஒன்றாகும். ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, பல்கலைக் கழக செனட் பிரதிநிதி என அந்த மூன்று பேர் உள்ளனர். இது போதாது யு.ஜி.சி எனச் சொல்லபடும் பல்கலைக் கழக கிராண்ட் கமிசன் பிரதிநிதியும் இதில் இடம் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருகிறார். இச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநரின் செயல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பின்பற்றும் சட்டங்களுக்கு எதிரான ஒன்று ஆகும். அதாவது சென்னைப் பல்கலைக் கழகம் 1923 சட்டத்தின் படி செயல்படுகிறது. இதர 12 பல்கலைக் கழகங்கள், 2017 திருத்தம் செய்யப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழக சட்டங்கள் அடிப்படையில் செயல்படுகிறன. இந்த சட்டத்தின் படிதான் மாநில ஆளுநர் வேந்தராக பொறுப்பேற்று செயல்படுகிறார். தமிழ்நாடு சட்டம் வழங்கும் உரிமையின் படி பொறுப்பேற்ற ஆளுநர், சட்டத்தின் படி, பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்படுவதை, விரும்பவில்லை. இது உயர் கல்வித்துறையின் ஜனநாயக செயல்பாட்டிற்கு ஆபத்தானது. மேலும் ஆர்.எஸ்.எஸ். விரும்பும் நபரை திணிக்கவும், மையப்படுத்தப்பட்ட கல்வி அதிகாரம் என்ற தனது நிகழ்ச்சி நிரலை அமலாக்கவும் இவ்வாறு செயல்படுகிறார்.
மேலும் உச்சநீதிமன்றம் கடந்த 2013ல் வழங்கிய உத்தரவில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. 1956ல் இயற்றப்பட்ட சட்டத்தின் படி, யு.ஜி.சி ன் பிரிவு 26ஐ மாநில அரசுகள் விரும்பினால் பின்பற்றலாம், கட்டாயம் இல்லை. மாநில அரசுக்கு சுதந்திரமாக சட்டம் இயற்றும் உரிமை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. உச்சநீதிமன்றமே நிராகரித்த ஒன்றை ஆளுநர் ரவி தூக்கிப்பிடிப்பது, மாநில உரிமைகளுக்கும், உயர் கல்வியின் ஜனநாயக செயல்பாடுகளுக்கும் எதிரானது ஆகும். ஆளுநர் கூறுவது போல தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இணைப்பதன் மூலம் ஆளுநர் விரும்புகிறவர் துணைவேந்தராக கொள்ளைப்புற வழியில் நியமிப்பதற்கு வழி ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்க ஆளுநர் முயற்சித்து வருகிறார். இதுபோன்று ஆளுநரின் உயர்கல்வி மீதான அத்துமீறிய தலையீடுகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அந்த திருத்தத்திற்கும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இவையனைத்தும் கடுமையான கண்டனத்திற்குரியது.
எனவே, ஆளுநர். ஆர்.என்.ரவி தனது மாநில உரிமைகளுக்கு எதிரான அணுகுமுறையை கைவிட்டு, 3 பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர் பணியிடத்தை நிரப்ப அவசியமான தேடுதல் குழுவை அங்கீகரித்து, பணிகளை துவங்க அனுமதிக்க வேண்டுமெனவும், மாநில மற்றும் பல்கலைக் கலகங்களின் தன்னாட்சி உரிமைகளில் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்) மாநில செயலாளர்