வங்கதேச நிலைமை:
வங்கதேச இடைக்கால அரசாங்கமும் அதிகாரிகளும் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் முழுமையான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என சி.பி.ஐ(எம்) மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் செயல்பாடுகளை வங்கதேச அரசு நிர்வாகம் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பதாகத் தெரிகிறது
அதே சமயம், இந்தியாவில் பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்வ அமைப்புகள் தூண்டுதலான பிரச்சாரத்தின் மூலம் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரத்தை வளர்க்க முயற்சிக்கின்றன. இவ்வாறான அணுகுமுறை வங்கதேச சிறுபான்மையினர் நலன்களை மனதில் கொண்டு நடப்பவை அல்ல.
இருநாடுகளிலும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள், மக்கள் நலனுக்கு தீமை விளைவிக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலுவாக இயங்கிட வேண்டுமென அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுக்கிறது.
வழிபாட்டு தலங்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்:
பல நூற்றாண்டுகளாக மசூதிகளாக வழிபடும் இடங்களை இந்து கோவில்கள் இருந்ததாக கூறி சர்ச்சையை கிளப்பும் வகையில் தற்போது கீழமை நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலை கடும் கவலைதருகிறது.
வாரணாசி, மதுராவுக்குப் பிறகு சம்பாலில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியை ஆய்வுக்கு உட்படுத்தும் உத்தரவை கீழமை நீதிமன்றம் பிறப்பித்தது. இதன் விளைவாக அங்கு வன்முறை வெடித்து நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அஜ்மீரில் உள்ள சிவில் நீதிமன்றத்தில், அஜ்மீர் ஷரீப் தர்காவின் இடத்தை ஆய்வு செய்யுமாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991-ஐப் பின்பற்றி இவ்விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது மிகவும் வேதனையானது. 2019-ல் அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர் கொண்ட அமர்வு, வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் 1991-ன் செல்லுபடியாகும் தன்மையையும் அதன் அமலாக்கத்தையும் உறுதிப்படுத்தியிருந்தது.
எனவே இச்சட்டத்திற்கு மாறாகச் செயல்படும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் தலையிடுவது உச்ச நீதிமன்றத்தின் தார்மீகக் கடமையாகும்.
வயநாடு நிவாரணத்திற்கு உடனடியாக நிதி வழங்கிடுக!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவியை மறுக்கும் ஒன்றிய அரசின் அலட்சிய போக்கு கடும் விமர்சனத்திற்குரியதாகும்.
கேரள மாநில அரசு ரூ.214 68 கோடி அவசரகால உடனடி நிவாரணம் தேவையென வேண்டுகோள் விடுத்ததுடன், முழுமையான விரிவான மீட்புக்கும், மறுசீரமைப்பிற்கும் ரூ.2,319.10 கோடியும் என்று கேட்டு
நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த நிதியும் ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. வயநாடு நிலச்சரிவை “இயற்கை பேரிடர் ” என அறிவிக்க மறுக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்யவும் மறுக்கிறது. இந்தச் செயல்கள் யாவும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மட்டுமல்லாமல் மனிதாபிமானமற்ற ஒன்றிய அரசின் அணுகுமுறையையும் அம்பலமாக்கியுள்ளது. நெருக்கடி காலங்களில் மாநிலங்களோடு நிற்கும் கூட்டாட்சிக் கொள்கைகளை துச்சமாகக் கருதுகிறது. மாநில அரசால் கேட்கும் நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசியல் தலைமைக்குழு வலியுறுத்திக் கேட்கிறது.
நொய்டா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு:
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் போராடிய விவசாயிகள் மீதான காவல்துறை அடக்குமுறையை சி.பி.ஐ(எம்) கண்டிக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை (AIKS) சேர்ந்த தலைவர்கள், முன்னனி ஊழியர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான விவசாயிகள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். மேலும் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் முன்னணியில் இருந்த பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் கொடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது.
கிரேட்டர் நோய்டாவில் 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வணிக மற்றும் வீட்டுவசதி திட்டங்களுக்காக கடந்த காலங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பாக இப்போராட்டத்தை நடத்துகின்றனர்.
இழப்பீட்டு தொகை மறுஆய்வு செய்யப்பட வேண்டும், 1997-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி மனைகள் ஒதுக்கீடு வேண்டும், கட்டாய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இப்போராட்டத்தை சி.பி.ஐ(எம்) முழுமையாக ஆதரிப்பதோடு, அரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக ஏற்று செயல்படுத்த வேண்டும், அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோருகிறது.
கட்சி அகில இந்திய மாநாடு ஏற்பாடுகள்:
2025 ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 24வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய வரைவு அரசியல் தீர்மானம் குறித்து அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. இந்த விவாதத்தில் அரசியல் தலைமைக்குழு உருவாக்கியுள்ள வரைவு தீர்மானத்தின் மீது ஜனவரி 17-19, 2025 கொல்கத்தாவில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.