ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் தனது பொறுப்புக்கு கொஞ்சமும் பொருத்தமற்று உளறியுள்ளார். அந்தப் பேச்சில் அறிவுத்திறனோ, நாணயமோ வெளிப்படவில்லை. மாறாக, அவரின் அறியாமையே வெளிப்பட்டிருக்கிறது.
கீழ்வெண்மணி போராட்டம் சாதிய ஒடுக்குமுறைக்கும், கொடூர சுரண்டலுக்கும் எதிரான விவசாயத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற போராட்டம். செங்கொடியை கையிலேந்தி தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக 44 பேர் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களுமாக நிலவுடமையின் கொடூரத்தால், சாதிய வன்மத்தால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதைக்கூட ஆர்.என்.ரவி 48 பேர் என்கிறார். அவர்களுக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகளும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளுமாய் தங்களின் உழைப்பின் ஒரு பகுதியை அளித்து அந்த நினைவாலயத்தை எழுப்பியிருக்கிறார்கள். அது அரசு நிதியில் கட்டப்பட்டது என்பது போல ஆர்.என்.ரவி அவதூறாக பேசியுள்ளார்.
அதுவொரு ஜனநாயகப் போராட்டம். ஆனால், வரலாற்றுப் புரிதலும் அறிவு நேர்மையும் அற்ற முறையில் ஆர்.என்.ரவி அந்தப் போராட்டம் மாவோயிஸ்டுகளால் தூண்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். பிரமாண்டமான நினைவாலயம் அதனருகே குடிசைகள் என்று எள்ளி நகையாடியிருக்கிறார். கோயில் கோபுரங்களை கட்டுவதற்கு குடிசையிலிருப்போர் நிதி கொடுக்கக் கூடாது என்கிறாரா? உழைப்பாளி மக்கள் தங்கள் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த தோழர்களுக்கு நினைவிடம் எழுப்புவதை கேள்வி எழுப்புகிறாரா?
வரலாறு, போராட்டம், தியாகம், போராட்டங்களைக் கொண்டாடுவது என்பது எந்த வரலாற்றுக்கும் சம்மந்தம் இல்லாத ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடியாளாக செயல்படும் ஆர்.என்.ரவிக்கு இவற்றைப் பற்றியெல்லாம் விமர்சிப்பதற்கு மட்டும் அல்ல பேசுவதற்குக் கூட எவ்வித தகுதியும் கிடையாது.
வெண்மணி, சமூக நீதி, பொதுவுடமை இயக்கம் உள்ளிட்ட இந்தியாவில் எந்தவொரு போராட்டம் மற்றும் முற்போக்கு இயக்கங்களை பற்றி தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்ற முறையில் ஆர்.என்.ரவி உளறிக் கொட்டுவதையும், வன்மம் கக்குவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆர்.என்.ரவியின் இந்த உளறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.