சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் மீண்டும் கோரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் காலை உணவு, அம்மா உணவகங்களில் பணிபுரிந்த ஊழியர்களை கொண்டு தனி கிச்சன் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. சென்னை மாமன்ற கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது காலை உணவு திட்டத்தை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.
எனவே மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.